*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, March 12, 2010

ஈழ விடுத‌லைப் போராட்டம் :பாதகத்தை சாதகமாக்கிய ஜெயவர்த்தனா!


ஆபரேஷன் லிபரேஷன்’ வெற்றியானது சிங்களவர்களைச் சந்தேக மனநிலையிலிருந்து விலக்கி, புளகாங்கித நிலைக்கு ஆளாக்கியது. செஞ்சிலுவைச் சங்கத்தினரை ஏற்றி வந்த இந்திய மீன்பிடிக் கப்பல்கள் சாதுவாகத் திரும்பிச் சென்றபோது சிங்களவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தனர். மூத்த அரசியல்வாதிகளால் விடப்பட்ட வீரதீர அறிக்கைகளும், பத்திரிகைப் பத்தி, எழுத்தாளரின் புகழ்ச்சிகளும் அன்றைய நாள்களை ஆட்சி கொண்டிருந்தன.
ப.சிதம்பரம், ஜெயவர்த்தனா
இந்தியா விமானத்திலிருந்து நிவாரணப் பொட்டலங்களைப் போட்டதுடன், சிங்கள மக்களின் புத்துணர்ச்சி பெற்ற சந்தோஷம் மிக வெறுப்புக் கலந்த கடுங்கோபமாக மாறியது. (முறிந்த பனை-பக்.158). சிங்கள மக்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகத்தின் பார்வையில் இலங்கைக்கு எவ்வளவு கீழிறக்கம் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டு அதிர்ந்தனர்.
இந்நிலையில், 1987 ஜூலை 19-ஆம் தேதியிட்ட, இலங்கை அரசின் ஆதரவு மற்றும் யதார்த்த நிலையைத் துணிந்து எழுதும் பத்திரிகை எனப் பெயரெடுத்த “வீக்எண்ட்’ சில மனப் பதிவுகளை வெளியிட்டது. அதுபோன்ற ஒரு கட்டுரையில் குமுதினி ஹெட்டியாராட்சி என்பவர் எழுதிய ஒரு கட்டுரை சிங்களவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைக்குத் தலைப்பு “நான்காண்டுகளுக்குப் பின்னும் அதே நிலையா?’ என்பதாகும். கட்டுரையின் முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம்:
“”நான், பிரிட்டன் சென்றபோது, பலரைச் சந்தித்து, எமது இனப்பிரச்னை குறித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். என் முன்னே இருந்த பலர், பல்வேறு தேசிய இனப் பிரச்னைகள் பற்றிய தெளிவான கருத்துக்கொண்டவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் சொன்னார், நாம் ராணுவத் தீர்வுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையே ஊசலாடுகிறோம் என்று. அவர்களது பொதுவான கருத்து அதுவே ஆகும்.
ஸ்ரீலங்கா, இனப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என அவர்கள் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் வினவினார்கள். விடாப்பிடியான போக்கு இலங்கையில் இனப் பிரச்னையை ஒருபோதும் தீர்க்காது என்றும், இனப் பிரச்னைக்குத் தீர்வு அரசியல் தீர்வே என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
இன்றைய நிலையில், “ஆபரேஷன் லிபரேஷன்’ பிழையான அறிவுறுத்தலால் நடத்தப்பட்ட முயற்சியென அவர்களால் கருதப்பட்டது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எல்லோரும் விரும்பும் சமாதான முறைகளைக் கையாண்டு இழந்துபோன சில கெüரவங்களை மீட்டுப் பெறுவதில் ஸ்ரீலங்கா அரசு அக்கறை கொள்ளவேண்டும். இந்த அரசியல் தீர்வு என்கிற முடிவு உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆக்ஸ்போர்டு நகரில் எனக்குத் தெரிந்த குடும்பம், பிபிசியிலே வெளிவந்த போர்க்காட்சிகளைப் பார்த்த பாதிப்பில், “எவ்வாறு சிங்கள அரசு இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ளமுடியும்?’ என்று என்னைக் கேட்டது. அந்த வீட்டுத்தலைவர் வடக்கிலே குண்டுமழை பொழிவதாகக் கூறினார். பிபிசி செய்தியாளர், “தீக்காயங்களுடன் காட்டப்பட்ட குழந்தைகள் பற்றி என்ன கூறுகிறீர்?’ எனக் கேட்டார்.
உங்கள் நாட்டிலே வியத்நாம் பாணி போர் உத்திகளைக் கையாளுமாறு உத்தரவிட்டவர் யார்? இதற்கு யார் பொறுப்பு? இரவு உணவுக்காக பல நாட்டுப் பத்திரிகையாளர்களுடன் உணவருந்த என்னையும் அழைத்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் என்னைக் குடைந்து எடுத்தார்.
இது கேட்ட ஒரு பத்திரிகையாளர், “இலங்கை ஒரு பூலோக சொர்க்கம். மற்ற எல்லாம் நல்லவையாக இருக்க, மனிதன் மட்டுமே கெட்டவனாக இருக்கிறான் என்பதற்கு ஸ்ரீலங்கா ராணுவம் நடந்துகொள்ளும் விதமே சான்றாக உள்ளது’ என்றார்.
நாம் விரைவான-அமைதியான நல்ல தீர்வுக்கு வருவது அவசியமானாதும் முக்கியமானதும் ஆகும்; இதற்குத் தேவைப்படுவது நேர்மையும் நம்பிக்கையும்தான்” என்ற குமுதினியின் விருப்பம், ஸ்ரீலங்கா அரசுத் தரப்பில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது.
விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை யாழ் பகுதிகளில் போட்டது முதல், இந்தியா, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கிற முக்கிய நாடாயிற்று. இந்த விஷயத்தை ஜெயவர்த்தனா விரும்பினார் இல்லை. ஆனால், இந்தப்போக்கை அவரால் தடுக்கமுடியவில்லை.
காரணம், ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஸ்ரீமாவோ காலத்தில் பணியமர்த்தப்பட்டனர் என்ற காரணத்தால், அவர்கள் ஜெயவர்த்தனா மீது எப்போதுமே கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், யாழில் இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்டதை இலங்கை கடுமையாகக் கண்டிக்கவேண்டும் என்றும், ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்று அவர்கள் குமுறினார்கள். அந்தப் பிரிவினர் ராணுவத் தலைமைக்குக் கட்டுப்படாமல் புரட்சியில் இறங்கிவிடுவார்களோ என்றும் ஜெயவர்த்தனா பயந்தார்.
புத்த பிக்குகளும், ஜேவிபியினரும் கையாலாகாத அரசு என்று விமர்சனம் செய்தனர். இதற்கு முன்பே அங்கு வன்முறை தீவிரமான நிலையில், இந்தியாவின் நடவடிக்கையும் சேர்ந்தது. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளோ அரசைக் கலைத்து உடனே தேர்தலை நடத்த வலியுறுத்தின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்னும் நிலையைப் பெறவேண்டிய நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுடன் ஜெயவர்த்தனாவால் முரண்பட முடியவில்லை. காரணம், இந்திய உணவுப் பொட்டலங்கள் போட்டதை “அத்துமீறல்’ என்று குரல்கொடுத்தும் நட்பு நாடுகள்கூட வாய்திறக்காததால் மிகுந்த வேதனைக்கும் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.
அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கவேண்டுமானால், இந்தியாவின் பங்கை ஏற்கவேண்டும் என்று முடிவு எடுத்ததுடன், எது பாதகமானதோ, அதைப் பற்றிக்கொண்டு அதிலிருந்து சாதகம் பெறத் திட்டம் தீட்டினார்.
“ராணுவத்தின் மூலமே தீர்வு என்றும், ஒன்று புலிகள் வெற்றிபெறவேண்டும் இல்லையென்றால் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும். இறுதிவரை போர்தான் – சமாதானம் இல்லை’ என்று அடம்பிடித்த ஜெயவர்த்தனா ஏதேனும் ஓர் ஒப்பந்தத்துக்காகத் துடித்தார். “இறுதிவரைப் போர்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இலங்கையின் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் எழுதிய, “அசைன்மெண்ட் கொழும்பு’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகமாகும்.
இந்தக் குழப்பமான நிலையில் யாழ்த்தளபதி கிட்டு வாகனத்தின் மீது குண்டுவீசப்பட்டது. இதில் படுகாயமுற்ற கிட்டு, இறுதியில் தனது கால்களில் ஒன்றை இழந்தார். மருத்துவத்துக்காக அவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.
ஜெயவர்த்தனா தனக்குப் பிடிக்காத வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியா-இலங்கை என இரு அரசுகள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிகாரிகள் கொழும்புவுக்கும் தில்லிக்குமாகப் பறந்தனர்.
இந்தப் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட தமிழர்களின் பிரதிநிதியான விடுதலைப் புலிகள் அமைப்பை எந்தவிதத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை.
இந்த நிலையில், அன்டன் பாலசிங்கத்தை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சந்திக்க விரும்புவதாகக் கூறி அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
அங்கே முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தார். புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். வரவேற்று பாலசிங்கத்தை அமரச் சொன்னார்.
அவர் உட்கார்ந்ததுமே ப.சிதம்பரம் கடுமையாகப் பேசினார் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நன்றியுள்ளவர்கள்தானா என்றும், இந்தியா மற்றும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் குறித்தும், இலங்கை இனப்பிரச்னைத் தீர இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்ட அவர், “இப்பொழுது பிரபாகரன் எங்கே?
திடீரென மாயமாக மறைந்துவிட்டார். யாருக்கும் தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராமே?
எங்களுக்குத்தான் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசுக்காவது, முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்காவது தெரிவித்திருக்கலாமே?’
என்று கேட்டதாகவும் பாலசிங்கம் தான் எழுதிய “விடுதலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் மேலும் குறிப்பிடுவதாவது:
“”எண்பத்துமூன்றாம் ஆண்டின் இறுதியிலிருந்து பல ஆண்டுகள் பிரபாகரன் இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. ராணுவப் பயிற்சித்திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வந்தார். வந்த இடத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்டக்களத்துக்குச் செல்லவேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.
தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்லவேண்டியதாயிற்று.
சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்லவேண்டும். பிரபாகரனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாகப் பல சக்திகள் செயல்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழிதீர்க்க வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்பு கருதியே அவரது பயணத்தை ரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடிவெடுத்தது” இப்படியான ஒரு விளக்கம் கொடுத்தேன்.
அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. “”சரி, பிரபாகரன்தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, ரகசியமாக யாழ்ப்பாணம் போய்விட்டார். நீங்களாவது முதலமைச்சருக்கு அத்தகவலைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?” என்று கூறி என்னை மடக்க முயன்றார்.
முதலமைச்சரும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்.
முதலமைச்சரைப் பார்த்து சொன்னேன், “சார்! பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும்கூடத் தெரியப்படுத்தவில்லை. மிகவும் ரகசியமான காரியங்களை ரகசியமாகச் செய்து முடிப்பதுதான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுதான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார், பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னதாக நீங்கள் என்னை இங்கு அழைத்துவந்துவிட்டீர்கள்’ என்றேன்.
முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. பிரபாகரன் தாயகம் திரும்பியதன் அவசியத்தை அவர் உணர்ந்துகொண்டார். அந்தப் பயணம் குறித்து ரகசியம் பேணப்பட்டதையும் அவர் புரிந்துகொண்டார்.
“”பிரபாகரன் செüக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார். தொடர்ந்து, “அவரைப் பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள்; நான் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்’ என்றார்.

பிரபாகரன் விடுத்த வேண்டுகோள்
இப் பிரச்னைகளுக்கு நடுவே, 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:
“”அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.
தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்;
புலிகளாக மாறுங்கள்;
புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள்.
நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது.
ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்”
என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரனின் வேண்டுகோள் பிற இயக்க உறுப்பினர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் துணிந்து இயக்கத்தில் சேர்ந்தனர். பலர் இயக்கத் தலைமை என்ன செய்யுமோ என்று பயந்து புலிகளுடனும் சேராமல், தாங்கள் இருந்த இயக்கத்திலும் இருக்க முடியாமல் வெளியேறினார்கள்.
இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடனான ஒரு மோதலில் சுரேஷ் என்பவர் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டம் ஒன்று அவ்வியக்கத்துக்கு இருப்பதாகத் தெரியவந்ததையொட்டி, அந்த இயக்கத்தையும், “பிளாட்’ இயக்கத்தையும், தமிழீழ ராணுவத்தையும் தடை செய்வதாக 14-12-1987 அன்று புலிகள் இயக்கம் அறிவித்தது.
இந்த அறிவிப்பையொட்டி, “பிளாட்’ இயக்கமும் தமிழீழ ராணுவமும் தனது இயக்க வேலைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கும் புலிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் எழுந்து கொண்டே இருந்தன. ஆக, ஈ.என்.எல்.எஃப். என்கிற அமைப்பு திம்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே ஆண்டில் சிதைந்துவிட்டது.
பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் எப்போதும் சிங்களவர்களிடம் விரோதம் பாராட்டியதில்லை. அப்பாவி சிங்கள மக்களைத் தாக்குவதில்லை என்கிற கொள்கையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.
தமிழர் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவ முகாம்களில் சிங்களச் சிப்பாய்கள் பலமாதம் அடைபட்டுக்கிடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான குடிநீர்த் தேவைகள், உணவு சமைக்க விறகு முதலியவற்றை அவ்வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அளித்து உதவியிருக்கிறார்கள்.
இலங்கை மக்கள் கட்சித் தலைவரான விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணத்துக்கு இருமுறை வந்தார். முதல் தடவை யாழ் கோட்டையில் அடைபட்டுக்கிடந்த சிங்கள ராணுவக் கைதிகளைப் பார்க்க வந்தார். யாழ் தளபதியாக இருந்த கிட்டு அவரை அனுமதித்தார். சிங்களக் கைதிகளுடன் தாராளமாகப் பேச அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோன்று இரண்டாவது முறையும் சில புத்தபிக்குகள், பத்திரிகையாளர்கள் சகிதம் அவர் வர விரும்பினார். சிங்கள அரசு அவர்கள் யாழ்ப்பாணம் செல்லத் தடை விதித்ததே தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை வரவேற்றது.
அவர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தின் தளபதி கிட்டு பேசும்போது, “”நாங்கள் எங்களது உரிமைக்காகவே போராடுகிறோம். எந்த சிங்களப் பகுதியையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களது இயக்க வீரர்கள் தாமாக முன்வந்து உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.
ஆனால் ராணுவத்தினர் தங்கள் உழைப்புக்காகச் சம்பளம் பெறுகிறார்கள். அதற்காகவே ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். போர் நடவடிக்கைகளில் வீரர்கள் கைது செய்யப்படுவது நடக்கக்கூடியதுதான். யாழில், மன்னாரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை நிபந்தனை எதுவுமின்றி நாங்கள் விடுவித்தோம்.
ஆனால் எமது உறுப்பினர்கள் 19 பேரும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் இன்று சிறையில் வாடுகிறார்கள். அவர்களில் இரு வீரர்களை விடுவிக்கும்படி கேட்கிறோம். யுத்தக் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது நடைமுறையில் உள்ளது. ராணுவத்தில் ஒவ்வொரு சிப்பாயும் மரியாதை இழக்கின்றனர். முன்பு விஜயகுமாரணதுங்கா இங்கு வந்த பின்னர்தான் தெற்கில் உள்ள மக்களுக்கும் உலகுக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்தது. நாங்கள் குருமாரையும் உங்களையும் கேட்பது என்னவென்றால், நீங்கள் அரசை நிர்ப்பந்தித்து வீரர்களை விடுவிக்கச் செய்யுங்கள்” என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த விஜயகுமாரணதுங்கா, “”தமிழ்ப் போராளிகளின் மீது நம்பிக்கை வைத்து, வடக்கிலும் தெற்கிலும் இருக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பொதுப்போராட்டத்தில் வடக்கு-தெற்கு பாலம் ஒன்றை அமைப்பதே எமது பிரதான நோக்கம்” என்றார்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இரு சிங்களக் கைதிகளான லெப்டினன்ட் சந்திரஸ்ரீ, பாந்தரா ஆகிய இருவரையும் டிசம்பர் 19, 1986, காலை 8-10 மணிக்கு சிங்கள கேப்டன் கொத்லவாலாவிடம் ஒப்படைத்தனர். பதிலுக்கு சிங்களத் தரப்பில் மேஜர் அருணா மற்றும் ஒரு போராளி ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி யாழ் கோட்டைக்கு வெளியே நடைபெற்றது. இதில் கையளிக்கப்பட்ட மேஜர் அருணா, கடற்படைத்தாக்குதலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது மரணத்துக்கு இரங்கல் மற்றும் வேலைநிறுத்தம் எல்லாம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது முகமும் தீக்காயங்கள் ஏற்பட்டு கருகிய நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் அவர் கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது, அவர் தன்னைப் படகோட்டி என்று கூறியதுடன், தனது பெயர் செல்வசாமி செல்வகுமார் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வகையாகப் பிடிபட்ட அனைவரும் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பல வாரங்கள் கழித்து அருணா இறக்கவில்லை என்று தெரியவந்ததும், கைதிகள் பரிமாற்றத்தில் எந்தக் கைதியை விடுவிக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது “செல்வகுமார்’ என்று தெரிவிக்கப்பட்டார். அருணா உயிருடன் இருக்கிறார்; அவர் பெயர்தான் செல்வகுமார் எனத் தெரியவந்தால் சிங்களப்படை மறுக்கும் என்று தெரிந்தே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றது.
அதே போன்று விடுதலைப் புலிகள் தரப்பில் கையளிக்கப்பட்ட லெப்டினன்ட் சந்திரஸ்ரீயும் மன்னாரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்துபோனதாக முன்பே அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்களக் கைதிகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியே வந்திருந்தார். (ஆதாரம்: பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்).
சிங்களவர்களின் போக்கு எப்போதும் தமிழருக்கு எதிராகவே இருந்தது. இதுகுறித்து பிரபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த காலத்தில் எல்லாம் எங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டவில்லை.
எங்களின் ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக்காலமான 1972-ஆம் ஆண்டில்தான். அப்போது அவர் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார். அந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏற்கெனவே தமிழர்கள் அனுபவித்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டன.இடதுசாரிகளை நாங்கள் நம்பலாம் என்றால் அதற்கும் சாத்தியமில்லாது போயிற்று.
1972-ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்கள் முட்டுக் கொடுத்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் இருவரும் ஸ்ரீமாவோ ஆட்சியில், கூட்டணி அரசின் அங்கமாக இருந்தபோதுதான் இந்த அநியாயம் நடந்தது. இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவரே பழம்பெரும் இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வாதான். இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம் என்று தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தார்கள். இதற்கு ஒத்துழைத்த ஒரு சில தமிழ்த் துரோகிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர் மத்தியில் ஒரு சிங்களவர் அல்லது ஒரு கட்சி ஆதரவு நிலை எடுத்தால், அங்கே அந்தக் கட்சியும் அவரும் இயங்க முடியாது என்று காட்டினார்கள். இதற்கு விஜயகுமாரணதுங்காவின் கட்சியே சாட்சியாக இருக்கிறது. அவர்கள் மேடையிட்டுப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. விஜயகுமாரணதுங்காவே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இதர சிங்கள அரசியல் கட்சிகளை நாம் மட்டும் எப்படி நம்பமுடியும்’ என்றார். (இந்து நாளிதழ் பேட்டி, 4,5 செப்டம்பர் 1986).
கேள்வி :எதிர்காலத் தமிழீழத்தில், “ஒரு கட்சி ஆட்சிதான் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்கும்’ என்றெல்லாம் கூறி உங்களது இயக்கத்தை ஆதரிக்கலாமா என்று ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரபாகரன் :“எமது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து எமது அரசு அமையும். மக்களுக்கு விருப்பமான கட்சியை அவர்கள் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்தது. போராட்டத்தில் பங்குகொள்ளாதவர்களே இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்களிப்பு எதுவும் செய்யாது, அதே நேரத்தில் களத்தில் விலகி நின்றுகொண்டு, தலைமைப் பதவியை அடையக் கனவு காணும் சிலரின் மனதிலேயே இந்த அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளன.’
கேள்வி :தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்ன?
பிரபாகரன் : சோசலிசமும் – தமிழீழமும். இவை குறிக்கோள், அடிப்படைக் கோட்பாடு.
கேள்வி :தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ இரண்டும் தேசியவாதக் கோட்பாட்டில் இயங்கும் கட்சிகள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் இரண்டும்தான் சோசலிச சித்தாந்தத்தில் பிறந்தவை என்றும் வேறுபாடு உள்ளதே?
பிரபாகரன் : சித்தாந்த ரீதியில் எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில்தான் அதன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சோசலிசம் என்பது இன்று பல ரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. சோசலிசத்திற்கு ஒருவர் அளிக்கும் விளக்கத்திலிருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் தன்மையிலிருந்தும் அதன் வேறுபாடுகள் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
இன்று எல்லோரும் தம்மை ஒரு சோசலிசவாதி என்றே கூறிக்கொள்கிறார்கள். ஜெயவர்த்தனா கூட ஒரு காலத்தில் அப்படிக் கூறிக்கொண்டு, இடதுசாரி நூல்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர்தான். ஆக, சோசலிசம் பேசுகிற ஒருவர் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான், தன்மை வெளியாகும்.
எமது மக்களின் விருப்பங்களையும், நலன்களையும் முழுமையாகப் பேணும் ஓர் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கட்டியமைப்பதே எமது லட்சியம். எமது கலாசாரம், எமது பாரம்பரியம், எமது வரலாறு ஆகியவற்றுக்கு உகந்ததாக அந்தச் சமுதாய அமைப்பு அமைய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு கனவு உண்டு. அதனைச் செயல்படுத்தவே சிந்திக்கிறோம்; போராடுகிறோம்.
எங்கள் சமுதாயத்திட்டத்தில் பெருமுதலாளிகள் இருக்கமாட்டார்கள்; நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பர்.
மலையகத் தமிழர் பற்றியும் கிழக்கு மாகாணம் குறித்தும் பிரபாகரன் குறிப்பிடுகையில்,
“தமிழ்த் தேசியம் என்று நாம் குறிப்பிடும்போது வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்துவரும் பாட்டாளி மக்களையும் நாங்கள் குறிக்கிறோம்.
எங்களது தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழர், இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவர்களும் மதச்சார்பு அற்றோருமான தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும்போது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான அமைப்பையே குறிக்கிறோம்’(வே.பிரபாகரன்-சோசலிச தமிழீழத்தை நோக்கி – பக்.28-29/ ஆதாரம்”" பழ.நெடுமாறன்).
கேள்வி :“உங்களது இயக்க ஆட்கள் சயனைட் குப்பியைக் கழுத்தில் அணிந்திருப்பதாகக் கூறுகிறார்களே?’
பிரபாகரன் :“உண்மைதான். இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதுவே எங்களின் பலம். இதுவே எங்கள் உயிருமாகும். இந்தக் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும்வரை எங்களுக்கு வெற்றி ஒன்றே குறி. அதை அடையவே தீவிரம் காட்டுவோம். அதை அடைய முடியாத நிலை வரும்போது, அந்தப் போராளி மற்றவரைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற நிலையில் – அந்தக் கட்டம் வரும்போதுதான் சயனைட் குப்பியைக் கடிப்பார். இல்லையென்றால் எமக்கு உறுதுணையாக இருந்த பலரும் அவர்களது குடும்பமும் சிங்களச் சிறைகளில் சிக்க வேண்டியிருக்கும்.
எங்கள் தோழர்கள் பலர் இவ்வகையில் தியாகிகளாய் உயிர்விட்டிருக்கிறார்கள். எங்களது இயக்க ஆட்களை நீங்கள் சிறைகளில் அதிகம் பார்க்க முடியாது. எதிரிகளிடையே ஊடறுத்து முன்னேறிக்கொண்டே இருப்பவன்தான் சயனைட் போராளி’ என்றார்.


விடுதலைப் புலிகளின் பதிலடி!
யாழ் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் கோட்டை போன்று செயல்பட்ட குருநகர் ராணுவ முகாம் (1984 பிப்ரவரி 24) தகர்க்கப்பட்டது. விமானப்படையினர் சுன்னாகத்திலும் தெல்லிப்பளையிலும் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக, அத்துமீறல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட “கஜவாகு ரெஜிமெண்ட்’ பிரிவைச் சேர்ந்த 15 பேரை வாகனத்தில் வைத்தே, புலிகள் குண்டுவீசி அழித்தனர்.
“மக்களே மகத்தானவர்கள் – அவர்களுக்காகவே இயக்கங்களும் இயக்க நடவடிக்கைகளும்’ என்ற அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்களையே விடுதலைப்புலிகள் தயார் செய்து தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி யாழ்ப்பகுதியில் முதன்முதலாக நடந்தது.
யாழ் நகரத்தில் நாகதீப-கயிலைத்தீவு யாத்திரீகர்களின் வழிபாட்டுக்கென்று புத்த விகாரையில் வழிபாடு நடத்த, இலங்கையின் தெற்குப்பகுதிகளில் இருந்தே புத்த குருமார்களை அழைத்து வந்தனர். இவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பகுதி வந்து, ராணுவ ஜீப்புகளில் ஏறி, புத்தவிகாரைகளுக்கு வந்து வழிபாடு நடத்துவதைப் பார்த்து மக்கள் எரிச்சலுற்றனர்.
ஒரு நாள் யாழ் நகரில் அமைந்த புத்தவிகாரைக்குச் செல்லும் வழியெங்கும் தடைகளை ஏற்படுத்தினர். ஸ்டான்லி வீதியிலிருந்த புத்த விகாரையும் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த சிங்கள மகா வித்தியாலயத்தையும் மக்களே தகர்த்தனர். இவை இரண்டும் சிங்கள ராணுவத்தின் முகாம்களாகவே செயல்பட்டு வந்தன என்பதாலும், மாதாகோயில் ஒன்று தாக்கப்பட்டதாலும் மக்கள் கூடுதல் ஆத்திரத்துக்கு ஆளானார்கள். மக்கள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கைக்குண்டுகளையும் வீசினர். கைக்குண்டுகளை வீச, புலிகளே மக்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
புலிகளின் வரலாற்றில் கடுமையான காவல்கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையை உடைத்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா நித்தியானந்தனை மீட்டது, கடற்படையினரை, பொலிகண்டிப் பகுதியில் மோட்டார் படகில் சென்று தாக்கி ஆறுபேரைக் கொன்றது, வல்வெட்டித்துறைக்கு அருகில் நெடியநாடு என்ற இடத்தில் மூன்று கவச வண்டிகள், ஒரு டிரக், ஒரு ஜீப் சகிதம் சென்று வெறியாட்டம் போட்டுத் திரும்பிக்கொண்டிருந்த 9 கமாண்டோ படையினரைத் தாக்கி அழித்தது, மாங்குளம் அருகே ஒட்டிசுட்டான் காவல் நிலையத்தில் கொரில்லாத் தாக்குதலை அடக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படையினரைத் தாக்கி, காவல்நிலையத்தின் கருவூலத்திலிருந்த ஆயுதங்களைப் பறித்தெடுத்தது ஆகியவை மிகமிக முக்கியமான சம்பவங்களாகும்.
புலிகளின் ஆயுதத் தேவையை நிறைவேற்றவும், கமாண்டோ படையினரின் கொட்டத்தை அடக்கவும் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மன்னார், கரவெட்டி மேற்கு, அச்சுவேலி, திக்கம், முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி, தொண்டமானாறு-பலாலி வீதி, தெல்லிப்பளைப் பகுதிகளில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சமரில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வடபிராந்திய சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா கொல்லப்பட்டார்.
புலிகள் தரப்பில் களுவாஞ்சிக்குடி தாக்குதலில் லெப்டினன்ட் ஆர்.பாமதேவா, திக்கத்தில காப்டன் ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன்லாலா ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.
மேலே கூறியவையே, விடுதலைப்புலிகளின் வரலாற்றில் 1975-1984-ஆம் ஆண்டுகளுக்குள் நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம் ஆகும்.
1984-1987-இல் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, ஏராளமான அளவில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த மக்களின் குழந்தைகள் படிப்புக்குத் தகுதி நிர்ணய வழிமுறைகளை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் கல்வி கற்கவும், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி வசதிகள் பெறுவதற்கும் ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர்.(எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும் – வே.தங்கநேயன்).
பின்னாளில், 27-4-1987-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமையைக் கண்டித்தும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவேண்டிய வரலாற்று நெருக்கடி குறித்தும் எம்.ஜி.ஆர். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கிய பின்னர், விடுதலைப்புலிகளுக்கும், ஈரோஸýக்குமாக வழங்கிய நாலு கோடி ரூபாய்க்கான காசோலை குறித்து ஜெயவர்த்தனா அலறினார்.
அவர் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு தெரிவித்த புகாரின் அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்கும் ஈரோஸýக்கும் அளித்த காசோலையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற்றார். இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது “விடுதலை’ நூலில் எழுதி இருப்பதாவது:

“”ஈழத்தமிழர்களுக்குத் திரட்டிய நிதியை அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு – இதனைப் பிரதமர் புரிந்துகொள்ளாதது ஏன்?” என்று எம்.ஜி.ஆர். ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்து, “”அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லையே” என்றார்.
“”அந்தக் காசோலை என்னிடம்தான் இருக்கிறது” என்றேன்.
“”அதை அமைச்சரிடம் (பண்ருட்டி ராமச்சந்திரனிடம்) கொடுத்துவிடுங்கள், நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள் எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாய் தருகிறேன்” என்றார்.
“”எனக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றோம். சொன்னபடி எங்களுக்கு நாலு கோடி ரூபாய் அளித்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார் பாலசிங்கம்.
“”விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்(தகவல்: விடுதலை நூல்).


சகோதர இயக்கங்களிடையே மோதல்!
சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும்.
இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:
“”தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது.
ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை.
ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், “எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதை உறுதி செய்தது” என லண்டனில் இருந்து வெளிவந்த “ஈழ பூமி’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.
“”ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் (“ரா’ அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்”
“”டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது”
“”பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்”
“”(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்”
“”இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்”
“”வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) – என்று “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.
இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார்.
பழ.நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூலில்,

“”நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன?
அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும்.
இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்” என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.
பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், “தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை’ என்று பொபி கூறினார்.
விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:
“”எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு “கோண்டாவில்’ என்ற ஊருக்குப் போனோம்.
தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்”
இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.
மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, “”ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்” என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.
இதன் பின்னணி என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.
இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார்(தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).
இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், “லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.
இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.
ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன.
1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது 303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு போராளிகள் அப்போது காயமுற்றனர்.
தனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும் கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982 செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி வெடிமூலம் தகர்க்கப்பட்டது.
கொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில் ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி ஓடினர்.
புலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன் தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும் மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983 ஏப்ரல்) தகர்த்தனர்.
1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப் பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை, தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார்.
“தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்’ என்றும் கடுமையாகக் கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
தமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர்.
இந்நிலையில் இலங்கை அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது.
இதன் காரணமாக அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும் அதிகரித்தது.
“தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை’ என லண்டன் நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.
அதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச் சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச் சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர். தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார். தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்தார். வெற்றிபெற்ற நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
“பயங்கரவாதத்தை ஒழிப்போம்’ என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான் அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார்.
ஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால், பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
கொரில்லா யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும், ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன.





No comments:

Post a Comment