*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, March 20, 2010

உலகையும் கடைத்தேற்ற வந்த கறுப்புச்சூரியனின் அஸ்தமனம் ஆரம்பம்...

அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின் நாயகன் , என்றெல்லாம் சித்திரிக்கப்பட்ட பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்ற போதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின. ஆம் நம்மால் முடியும்! என்ற அவரது தேர்தல் முழக்கத்தை ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஜபித்தது. அமெரிக்காவில் மட்டுமன்றி, இங்கேயும் சிலர் ஒபாமா காய்ச்சல் தலைக்கேறிச் சுற்றிக் கொண்டிருந்தனர். "புரட்சிப் புயல் வைகோ, ஒபாமாவைப்புகழ்ந்து ஒரு புத்தகத்தை எழுதி அதனை அவரிடமே கொடுத்து கையெழுத்து வாங்கி வந்தார். முதலாளித்துவ ஊடகவியலாளர்களும், கருணாநிதியின் வாரிசு கனிமொழி முதல் தலித்திய எழுத்தாளர்கள் வரை அனைவரும், கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவு பலித்துவிட்டது எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தனர். ஆப்கானில் அமெரிக்கப் படையை திரும்ப அழைப்பார், ஈராக் போரை முடித்து அந்நாடு சுதந்திரமடையச் செய்வார், பொருளாதாரச் சீரழிவில் அனைத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களைக் காப்பாற்றுவார் என பலரும் நம்பிக்கையூட்டினர். ஆனால், இன்று ஒரு வருடம் முடிந்த பின்பு, இந்த நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டது. இவரைப் பற்றி அமெரிக்க பத்திரிகைகள் கேலிச்சித்திரம் போடாத நாளே கிடையாது என்கிற அளவுக்கு அவர் காரியக் கோமாளியாகிவிட்டார். ""ஆம், நம்மால் முடியும்! என்கிற இவரது மந்திரச் சொல் துவங்கி, இவர் வாயைத் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேலி செய்யப்படுகிறது. சமீபத்தில் ""வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் முக்கால்வாசி அமெரிக்கர்கள் ஒபாமாவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு அமெரிக்க அதிபரும் இவ்வளவு குறைவான மக்கள் ஆதரவைப் பெற்றதில்லை, ஜோர்ஜ் புஷ்ஷைத் தவிர. ஆப்கானில் செருப்படி வாங்கிக் கொண்டு புஷ் வெளியேறிய பின்னர், அதிபராகப் பதவியேற்றவுடன் ஒபாமா செய்த முதல் வேலை, ஆப்கானில் போரைத் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்ததுதான். அது மட்டுமல்லாமல் ஆப்கானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிட்டார். ஆப்கான் போரைப் பாகிஸ்தான் வரை நீடித்துச் சென்றார். ஒபாமாவின் இந்த இமாலயச் சாதனையைப் பாராட்ட நினைத்த நோபல் கமிட்டியினர் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிக் கௌரவித்தனர். ""நீங்கள் இதுவரை செய்த செயல்களுக்காக இந்த நோபல் பரிசு தரப்படவில்லை. இனிமேல் செய்யப்போவதற்காக முன்கூட்டியே உங்களுக்கு இந்தப் பரிசைத் தருகிறோம் எனக் கூறினார்கள் நோபல் கமிட்டியினர். எதிர்காலத்தில் செய்ய விருக்கும் "நல்ல செயல்களுக்காக நோபல் பரிசு பெற்ற நபர் உலக வரலாற்றிலேயே ஒபாமா ஒருவராகத்தான் இருக்கக்கூடும். இப்படி உலகைக் காக்க வந்த ஒபாமாவின் அடுத்த பணி, சொந்த நாட்டு மக்களைக் காப்பது பொருளாதாரச் சீரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒபாமா கொண்டுவந்த தீர்வு "பெயில் அவுட் பேக் கேஜ் வீடிழந்து, வேலையிழந்து, இதுவரை சம்பாதித்தது அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்ற ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஒபாமா எதுவும் செய்யவில்லை. மாறாக, பொருளாதாரச் சீரழிவிற்குக் காரணமாக இருந்து, அதன் மூலம் பல லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த முதலாளிகளுக்கு ""பெயில் அவுட் பேக்கேஜ் என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொடுத்தார்.வேலையிழப்பைத் தடுக்கப் போகிறேன் ஒருவாரத்தில் பல இலட்சம் வேலைகளை உருவாக்கப் போகிறேன் என ஒபாமா அளித்த வாக்குறுதிகளெல்லாம் வெற்று வாய்ச்சவடால்களாகப் போய் விட்டன. வேலையிழப்பு அங்கே தொடர்கதையாகிவிட்டது. 2010 ஆம் வருடம் பிறந்தது முதல் இதுவரை 20 வங்கிகளுக்கு மேல் அமெரிக்காவில் திவாலாகிவிட்டன. மருத்துவமனைகள் முற்றிலும் தனியார்மயமாகி விட்ட அமெரிக்காவில், மருத்துவத்துக்கு ஆகும் செலவுகள் மிக மிக அதிகம். மருத்துவக் காப்பீடு இல்லாமல் போனால் சாதாரண வியாதிக்கே கூட மக்கள் தங்களது சேமிப்பு முழுவதையும் இழக்க வேண்டிவரும். அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாத மக்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் அதிகம். மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ள இவர்களைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில், மருத்துவ நலச் சீர்திருத்த மசோதா ஒன்றை ஒபாமா கொண்டு வந்தார். இது “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் போன்றதொரு மோசடித்திட்டம் என்பது வெகு சீக்கிரத்தில் அம்பலமாகி விட்டது. இவ்வாறு தொடர்ந்து சரிந்து வந்த தனது பிம்பத்தை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த ஒபாமா தேர்ந்தெடுத்த வழி நமது முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் வழி!; அது வேறொன்றும் இல்லை நாடு முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடுவது, அவர்களுக்கு அறிவுரை சொல்வது. ஆனால் ஒபாமாவின் அறிவுரைகளை ஆரம்பத்தில் பொறுத்துக்கொண்ட மாணவர்கள், இப்போது ஒபாமா பேசுகிறார் என்றாலே ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இதற்கிடையே, இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற அவர்களுக்குக் கரிசனமாகப் பேசுவதை குரானிலிருந்து வாசகங்களைப் பயன்படுத்துவது எனப் பல வேலைகளைச் செய்து பார்த்தார். ஆனால், அவையாவும் பலிக்காமல் போய்விட்டன. இவற்றின் எதிரொலியாக அண்மையில் மாசாசூட்ஸில் நடந்த செனட்டருக்கான இடைத் தேர்தலில் ஒபாமா கட்சி படுதோல்வியடைந்தது. அதிகம் அறிமுகமில்லாத குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பெற்றுள்ள அமோக வெற்றி, இது நம்ம ஆளு! என்று ஒபாமாவை ஆதரித்து நின்றவர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. அண்மையில் ஹெய்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவால் பல்லாயிரக்கணக்கான கறுப்பின மக்கள் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த போது, அருகிலுள்ள அமெரிக்க ஒபாமா அரசு உடனடியாக உதவ முன்வரவில்லை. வெகுதொலைவில் உள்ள ஐஸ்லாந்து நாடு தான் உடனடியாக வந்து உதவியது.இப்போது ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் அமெரிக்கத் துருப்புகள் அந்நாட்டில் நிவாரண உதவி என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ளன. ஒபாமா செய்த ஒரே நல்ல காரியம் ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல் வாதியால் ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தை மாற்றியமைத்துவிட முடியாது, அதன் தன்மையை தனிமனிதரின் ஆளுமை மயிரளவும் மாற்றி விடாது என்பதை நிரூபித்துக் காட்டியதுதான். ஒரு அரசியல் தலைவர், எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கிறார், அவர் எந்த வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதி என்று பரிசீலிக்காமல், சாதிமதஇன அடிப்படையில் பிழைப்புவாதத்துடன் ஆதரிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை ஒபாமா எதிர் மறையில் நிரூபித்துக் காட்டிவிட்டார்.கடந்த ஓராண்டில் ஒபாமாவின் நிலைப்பாடும் செயல்பாடும் புஷ் காலத்திய செயல்பாடுகளிலிருந்து வேறுபடவில்லை. அமெரிக்க அதிபராக புஷ் இருந்திருந்தால் அவர் என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதையேதான் ஒபாமாவும் செய்துள்ளார்.தலித்தியத் தலைவி மாயாவதியைப் போல், ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்து தனது முகத்திரையை வெகுவிரைவிலேயே கிழித்துக் கொண்ட கறுப்பின அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
நன்றி: புதிய ஜனநாயகம்





இந்தியாவைக் கையாண்ட தேசியத் தலைவர்

இந்தியாவை நாம் சரியாகக் கையாளவேண்டும் என்றால் இந்தியாவின் காலில் விழவேண்டும் என்று அர்த்தப்படக்கூடாது. ஒருவனைக் கையாளவேண்டும் என்றால், அவனது காலில்தான் விழவேண்டும் என்பதில்லை. ஒருவனை எமக்குத் தோதாக handle பண்ணுவதைத்தான் “கையாளுவது” என்பது.
ஒருவனைக் கையாளுவதற்கு பல வழிகள் உண்டு. கையாளுவது என்ற சொற்பதத்திற்கு பல்வேறு வியாக்கியானங்களும் உண்டு.
உதாரணத்திற்கு, ஈழத் தமிழர் விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற தமிழ் அமைப்புக்களை இந்தியா தனது நலனுக்காக சரியாகக் கையாண்டது. அதற்காக இந்த அமைப்புக்களின் கால்களில் இந்தியா விழுந்தது என்று அர்த்தமாகாது.
விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கை தேசம் கருணாவையும் டக்ளஸையும் சரியாகக் கையாண்டு வெற்றிகண்டது. அதற்காக இவர்கள் இருவரது கால்களிலும் சிங்களதேசம் விழுந்ததாக அர்த்தம்கொள்ள முடியாது.
ஒரு இலக்கினை நாம் அடைவதற்காக, அந்த இலக்கிற்குத் தடையாக இருக்கும் ஒரு தரப்பை சமாளிப்பதும், அந்த இலக்கை நாம் அடைவதற்கு அந்தத் தரப்பை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையுமே கையாளுவது என்று கூறுவது. இதேபோன்று, அந்த இலங்கை அடைவதற்கான கால அவகாசத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் நோக்குடனும் அந்தத் தரைப்பை நாம் கையாள முடியும்.
இதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியாவைக் கையாண்ட ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம்.
1987ம் ஆண்டு ஒரு நெருக்கடியான கட்டத்தை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த போது, தம்மைச் சுதாரித்துக்கொள்ளும் ஒரு கால அவசகாசத்தை பெற்றுக்கொள்ளும்படியாக, விடுதலைப் புலிகள் இந்தியாவை திறமையாகக் கையாண்டிருந்தார்கள்.
அந்தச் சரித்திரச் சம்பவத்தை இப்பொழுது பார்ப்போம்.
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது
இலங்கை அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.
தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
19.07.1987 இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாக வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.
இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட திரு.பிரபாகரன் அவர்களின் அந்த இந்தியப் பயணம், 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.
புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள ‘அஷோகா’ ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவதை விட, ‘சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்’ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் ‘கறுப்புப் பூனைகள்’ பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் ‘கறுப்புப் பூனை’ பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.
இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த ‘அஷோக்கா ஹோட்டல்’ சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.
இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.
இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் பல இராணுவ ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், ஈழத் தமிழர்கள் இன்றுவரை மனதினில் நிறுத்தியபடிதான் இருக்கின்றார்கள்.
24ம் திகதி முதல் ‘அஷோகா’ ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.
புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், ‘புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்’ என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.
சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களையும், மிரட்டல்களையும் பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.
வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததானது, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் மன்னிக்கமுடியாத துரோகத்தை ஈழத் தமிழருக்கு வெளிப்படுத்தியிருந்தது.
இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் ‘போர் வாள்’ என்று அழைக்கப்பட்டவரும், தற்போதைய ம.தி.மு.கா.வின் தலைவரும்,, ஈழ விடுதலை பற்றி பேசி ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபாலசாமி (வைகோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.
அஷோகா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபாலசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபாலசாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்,
அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்: நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் சயனைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ நினைவுகூர்ந்திருந்தார்.
இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாளில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.
இந்தியத் தலைவருக்கு எதிரான துன்பியல் சம்பவம் இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இப்படியெல்லாம் இந்தியாவால் நெருக்கடிக்குள்ளான நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஏற்றதாகக் கூறி 02.08.1987 அன்று யாழ்ப்பாணம் திரும்பிய புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஒரு உரையை நிகழ்த்தினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழப் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது உரை என்று அந்த உரை பிரசித்தி பெற்றிருந்தது.
திரு.பிரபாகரன் அவர்களது அந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்றே வரலாற்றில் பதிவாகியுள்ளது. ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’, ‘திம்புக் கோட்பாடு’, என்பது போன்று சுதுமலையில் புலிகளின் தலைமை ஆற்றிய உரை ‘சுதுமலைப் பிரகடனம்’ என்றே அழைக்கப்படுகின்றது.
இந்தியாவால் ஏமாற்றப்பட்ட நிலையில், இந்தியாவால் முதுகில் குத்தப்பட்ட நிலையில், இந்தியாவால் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவுத் திகதிகள் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இந்தியப்படைகளுக்கு எதிராகப் போராடுவது என்று புலிகள் தீர்மானம் எடுத்துவிட்ட பின்னர்தான், புலிகளின் தலைவரது சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
புலிகளது சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு என்ன தெரியுமா?
‘நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்” -இதுதான் விடுதலைப் புலிகளின் சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு.
விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த சுதுமலைப் பிரகடனத்தின் சில வாக்கியங்களை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்:
எமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?
இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.
இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.
ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப்படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.
நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.
எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.
எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.
மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியங்கள் அனைத்துமே இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் மேற்கொண்ட சுதுமலைப் பிரகடத்தில் உள்ளடக்கப்பட்ட வாக்கியங்கள்.
திரு.பிரபாகரன் அவர்கள் இந்தச் சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளும் முன்னதாக மற்றொரு கசப்பான சம்பவத்தையும் அவர் இந்தியாவினால் எதிர்கொண்டிருந்தார்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்,16ம்,17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துளைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது. அவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.
அப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க ராஜீவ் காந்தி எண்ணினார்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சக்திவாயந்த தொலைத்தொடர்பு கருவிகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்துகொண்டார்கள்.
இந்தியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். உத்தரவு பிறப்பித்தார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இந்தியா மீது முற்றாக நம்பிக்கை இழந்த நிலையில் புலிகளின் தலைவர் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழப்பாணம் திரும்பினார்.
அதாவது இந்தியா மீது விடுதலைப் புலிகள் முற்றாகவே நம்பிக்கை இழந்த நிலையில், இந்தியா மீது விடுதலைப் புலிகள் மிக மோசமாகப் பகை கொண்ட நிலையில், இந்தியாவை நம்பி இனிப் போராட்டம் நடாத்துவதில்லை என்று புலிகளின் தலைமை நிலைப்பாடு எடுத்த நிலையில், இந்தியா ஆயுதக்களைவு செய்ய முற்படும்பொழுது இந்தியப்படைகளுடன் மோதுவதென்று புலிகள் தீர்மானம் எடுத்தபின்பு, இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்று புலிகளின் தலைமை முடிவுசெய்த பின்னர்தான், இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் பலிகளின் தலைமை சுதுமலைப் பிரகடனத்தை மேற்கொண்டிருந்ததை இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.
இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், இந்தியாப் படைகளுடன் மோதுவதற்கு முடிவெடுத்த நிலையில், சுதுமலைப் பிரகடனம் ஊடாக திரு.பிரபாகரன் இந்தியாவை சிறிது காலத்திற்கு கையாள முயன்றார் என்பதைத்தான் நாம் இங்கு கவனகத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
திடுதிப்பென்று இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன. வந்ததும் வராததுமாக புலிகளிடம் ஒரு ஆயுதக்களைவை இந்தியப்படைகள் செய்ய இருந்தன. ஈழத்தமிழர்களும் இந்தியாவை தமது காவல்தெய்வங்களாக நினைத்து கிட்டத்தட்ட பூசை செய்யும் நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியா அங்கு சென்றுள்ளதாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.
தமிழ் மக்களின் மனங்களில் இந்தியாவின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது.
திலீபன் தலைமையிலான அரசியல் பிரிவினர் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக்க, மறுபக்கம் இந்தியப் படையினருடன் மோதுவதற்குத் தேவையான ஆயுதங்களை குமரப்பா, புலேந்திரன் தலைமையிலான குழுவினர் பல்வேறு மார்க்கங்களில் சேகரிக்க, தமிழ் நாட்டில் இருந்த புலிகளின் பல தளங்களை கிட்டு தலைமையிலான குழுவினர் வேறு இடங்களுக்கு மாற்ற, மாத்தையா தலைமையில் வன்னிக் காடுகளில் பாரிய இரகசியத் தளம் அமைக்கப்பட, அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் பணியைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் செய்திருந்தது.
இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் புலிகளின் தலைமை மேற்கொண்ட சுதுமலைப் பிரகடனத்தின் பரிமாணம் இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இதனைத்தான் இராஜதந்திரம் என்பது.
இதனைத்தான் ஈழத்தமிழர்களின் தலைமை இந்தியா விடயத்தில் செய்யவேண்டும் என்று நான் கூறுகி




Friday, March 19, 2010

70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர்



ஐயர் அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப் போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம். சமூக வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி இறுதியில் இடதுசாரியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பிரபாகரனோடு இணைந்து ஈழப் போராட்டத்தை ஆரம்ப்பித்தவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தீப்பொறி என்று தனது சரணடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாலான போராட்டத்தை இறுதிவரை நடத்தியவர். ஐயர் கூறும் உண்மைகள் வெளிச்சத்தில் கடந்த காலத்தின் ஒரு பகுதி குறித்த புரிதலைப் வந்தடையலாம் என நம்புவோம்.
நடந்தவை எல்லாமே ஒரு கனவு போல் இன்றும் மறுபடி மறுபடி எனது நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. வன்னி குறு நிலப்பரப்பில் ஆயரமாயிரமாய் மக்கள் பலியெடுக்கப்பட்ட போதெல்லாம், செய்வதறியாது திகைத்துப் போனவர்களுள், உணர்வின்றி, உணவின்றி உறக்கம் தொலைத்து அதிர்ச்சியடைந்த ஆயியமாயிரம் மனிதர்களுள் நானும் இன்னொருவன். தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக் கொண்ட்ட அமைப்பின் மத்திய குழுவில் நானும் ஒருவன் என்ற வகையில் இழப்புக்கள் எல்லாம் இன்னும் இறுக்கமாய் எனது இதயத்தை அறைந்தது. 1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திரக்கட்சியின் தலைமியிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வருகிறது. என்.எம்.பெரேரா என்ற ரொஸ்கிய வாத இடதுசாரி நிதியமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
தமிழகத்திலிருந்து வருகின்ற பெரியாரின் எழுத்துக்களைப் படித்ததில் எனக்கு நாத்திகவாததில் நாட்டம் ஏற்படுகிறது. பிராமணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது சுற்றத்திலிருந்து எதிர்ப்புக்கள் வருகின்றன.
எனது இருபதுகளில் ஏற்படுகின்ற இளைஞனுக்கே உரித்தான நாட்டங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு புரட்சி போராட்டம் என்பன குறித்துச் சிந்திக்கிறோம். இடது சாரியம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.
இந்த நிலையில் 1970 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, சிறீ லன்கா சுதந்திரக் கட்சி ஆகின இணைந்து இலங்கையில் ஒர் அரசை அமைத்துக் கொள்கின்றன. 1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியை கட்டுப்படுத்தும் வகையில் இனவாரியான தரப்படுத்தல் சட்டமூலத்திற்கான மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுகிறது. இது 1973 இல் அமுலுக்கு வருகிறது. இதே வேளை 1971 இல் பௌத்த மதம் தேசிய மதமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது. இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசாகவும் பிரகடனப்படுத்தப் படுகிறது. இந்தக் குடியரசில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவிலை என்பது தவிர இனவாரியான தரப்படுத்தல் என்பது திறமையுள்ள தமிழ் மாணவர்கள் கூட ப்ல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கின்றது. இதற்கு முன்னதாக 1958 இல் தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களின் வடு இன்னமும் ஆறியிருக்கவில்லை.
இதனால் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் மாணர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கின்றனர். சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோர் முன்னின்று உருவாக்கிய இந்த அமைப்பில் நானும் எனது ஊரைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
பல ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசு நாடாகிய போது நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டங்களில் நானும் குலம் என்ற எனது நண்படும் தீவிரமாகப் பங்கெடுக்கிறோம். பெரும்பாலான இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழரசுக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள் எனப் பல போராட்டங்களில் தீவிர பங்காற்றுகிறோம். இவ்வேளையில் தமிழரசுக் கட்சிக்கும் மாணவர் பேரவைக்கும் அடிப்படையிலிருந்த முரண்பாடென்பது, செயற்பாட்டுத்தளத்திலேயே அமைந்திருந்தது, மாணவர் பேரவை கூட்டணியின் செயற்பாடு தீவிரமற்றதாக இருந்ததாகக் குற்றம் கூறினர்.
இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துக்களுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணதுரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை.
குடியரசு தின எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகளை ஒட்டி சுமார் 42 பேர் சிறைப்படுத்தப்படுகின்றனர். சேனாதிராஜா, காசியானந்தன் வண்ணையானந்தன் உள்பட பலர் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்படுகின்றனர். அத்ற்கு முன்னதாக அரச சார்பானவர்களின் வீடுகள் முன்னால் குண்டெறிதல், பஸ் எரிப்பு, அரச வாகன எரிப்பு போன்ற சிறிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது தவிர குடியரசு தினத்தன்று தொடர்ச்சியாக மக்கள் ஆதரவுடனான ஹர்த்தால் கடையடைப்பு என்பன தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது.
இதே வேளை சிவகுமாரன் சோமவீர சந்திரசிறீ என்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை அவரின் தீவிர தமிழ் விரோத நடவடிக்கைகளுக்காக கொலை செய்வதற்கு பல தடவை முயற்சிக்கிறார். தவிர யாழ்ப்பாண முதல்வராக இருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரான துரையப்பாவைக் கொலைசெய்ய இரண்டு மூன்று தடைவைகள் முயற்சிசெய்கிறார். இவையெல்லாம் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இவேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்.
அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். அவர் எமது ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார். அப்போது நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும், உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிந்த அந்தக் காலகடம் எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி. அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா, பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக் கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்.
இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட் வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது செய்யப்படுகிறார். பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.
இதே வேளை செட்டி, பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன் அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை எதிர்ப்புப் போராட்ட, வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசிய தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.
செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெருதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர் எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது ஆதரவைக் கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.
அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி தேவை என்றும் அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர். செட்டி அந்த நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப் பணத்துடன் படகு மூலமாக அவர் இந்தியாவிற்குச் செல்கிறார்.
இதே வேளை பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறை இந்திய இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபாரத்தின் பிரதான மையமாக இருந்தது. இதன் காரணமாகவும் தமிழரசுக் கட்சி மற்றும் சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றோரின் செல்வாக்குக் காரணமாகவும் இயல்பாகவே இப்பிரதேசம் அரச எதிர்ப்புணர்வுடையதாக அமைந்திருந்தது. இங்கு கடத்ததல் தொழிலில் முன்னணியிலிருந்த தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மாணவர் பேரவையின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர். இவர்கள் கடத்தலை முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தாலும், அரசிற்கு எதிரான அரசியற் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தனர்.
சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூர்ந்து ஒன்றை எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான் நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும் அரச எதிர்ப்பு விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்கிறார்.
குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலையே ஏற்பட்டது.
தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்குத் தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல் தொழிலைத் தொடர்ந்தவண்ணமிருந்தனர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி இலங்கை அரசிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். அவ்வேளையில் தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும் முடிபிற்கு வருகிறார். சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை எடுக்கிறார்.
அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்தனனின் தொடர்பு பிரபாகரனிற்கு ஏற்படுகிறது.
இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.
இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம் கூறியபோது, அவர்கள் செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி செட்டியுடன் நாடு திரும்புகிறார். இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச் சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார்.
அவ்வேளையில் தான் இன்பம், செல்வம் பொன்ற சில இளஞர்களைப் பிரபாகரன் இணைத்துக்கொள்கிறார். இன்பம் செல்வம் இருவரும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள்.
இவ்வாறு பிரபாகரன் துரையப்பாவை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, செட்டி பொலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவர் வைத்திருந்த கொள்ளைப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி தனது ஊரினுள்ளேயே உலாவித் திரிந்ததால் பொலீசாரின் கண்ணுக்குள் அகப்பட்டு விடுகிறார், இதனாலேயே கைதும் செய்யப்படுகிறார்.
இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு துரையப்பாவைக் கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில் ஈடுபட்டவர்கள், பிரபாகரன், கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே. அவ்வேளையில் தமிழரசுக்கட்சியின் உணர்ச்சிகரப் பேச்சுகளால் உந்தப்பட்டுப் பல இளைஞர்கள் துரையப்பாவைக் கொலைசெய்ய வேண்டும் என்ற முடிபிற்கு வந்திருந்தனர். துரையப்பாவைப் பொறுத்தவரை உரிமைகளை விட அபிவிருத்தியே முதன்மையானது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர். இதனால் இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டுகொண்டதில்லை. இன்றைய டக்ளஸ் தேவானந்தாவின் அதேவகையான நிலைப்பாட்டை அன்றே கொண்டிருந்தவர். இந்த அடிப்படையில் பொலீசாரின் அடக்குமுறைகளுக்கும் துணைபோனவர். பல்வேறுபட்ட இளைஞர்கள் இந்த முயற்சியில் தன்னிச்சையாக ஈடுபடலாயினர். இப்போதெல்லாம் இக்கொலைகளை நாம் நியாயப் படுத்துவதென்பது ஆயுதக் கலாச்சரத்தை அறிமுகப்படுத்துவதாகவே அமையும் ஆனால் அன்றோ நிலைமை மாறுபட்டதாக இருந்தது. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த, மிகுந்த பாதுகாப்புடன் வாழ்ந்த துரையப்பாவைக் கொலைசெய்தல் என்பது ஒரு சமூக அங்கீகாரமாகவே கருதப்பட்டது.
பல இளைஞர்கள் இந்த முயற்சியில் குழுக்களாகவும் தனியாகவும் ஈடுபட்டிருந்த போதும் கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் இவர்கள் நால்வரும் தான். இவர்கள் நால்வருமே 20 இற்கு உட்பட்ட வயதுடையவர்களாகவே இருந்தனர்.
ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும் பொலீசாருக்கும் தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும் கிருபாகரனையும் பொலீசார் கைதுசெய்துவிட்டனர். இவ்வேளையில் பிரபாகரன் தனது வீட்டில் தங்கியிராததால் தப்பிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். இவ்வேளையிலேயே இதில் தொடர்பற்ற பலர் கைது செய்யப்படுகின்றனர், குறிப்பாக சந்ததியார் போன்ற இளைஞர் பேரவை முக்கியஸ்தர்களும் கைதுசெய்யப்படுகின்றனர்.இந்த வேளையில் பிரபாகரனுடன் சார்ந்த அனைவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பழைய தொடர்புகள் அனைத்தையும் இழந்த தேடப்படும் நபராகவே காணப்படுகிறார்.
இவ்வேளையில் தான் எம்மைப்பற்றி அறிந்து கொண்ட பிரபாகரன் எம்மைத் தேடி எமது ஊருக்கு வருகிறார். முதலில் எமது ஊரைச் சேர்ந்த ராகவனைச் சந்திக்கிறார். அவரின் ஊடாக என்னையும் குலம் என்பவரையும் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். செட்டி தான் எமது தொடர்புகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் கூறுகிறார். இவ்வேளையில் செட்டி தொடர்பாக நாம் முழுமையாக அறிந்திருந்தோம். இதனால் செட்டியின் தொடர்பாளராகப் பிரபாகரன் அறிமுகமானதால் நாம் அவரைது தொடர்புகளை நிராகரித்திருந்தோம்.
அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்.
அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான் பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது.பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத் தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில் கலாவதியும் கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத் தப்பிச்சென்று விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.
அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற இடத்திற்கு வருகிறார். இவரும் தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தார்.
அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவளாரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியவிற்கு அனுப்புவதற்குப் பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை காரணமாக பிரபாகரன் கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம் வருகிறார். அதன் பின்னர் தான் இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், நான், குலம், ராகவன், அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறோம். பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி, குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
அப்போது கிடைத்த பணம் எனது பொறுப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது. அதில் ஈடுபட்ட இருவர் தமக்குக் குடும்பச் சுமை இருப்பதாகவும் தமக்கு பண உதவி செய்தாலே முழு நேரமாக இயங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் நான், ராகவன் தவிர்ந்த ஏனையோருக்கு கடவுள் பற்று இருந்தது. குறிப்பாகப் பிரபாகரன் மிகுந்த கடவுள் பக்தி உடையவராகவும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்டார். இதனால் பிரபாகரனின் முன்மொழிவின் பேரில் செல்லச் சன்னதி கோவிலில், வங்கிக்கொள்ளைப் பணத்தில் ஒரு அன்னதானம் வழங்கப்பட்டது. என் போன்றவர்களுக்கு மார்க்சிய தத்துவங்கள் குறித்துத் தெரிந்திராவிட்டாலும், கடவுள் மறுப்பு என்பது பெரியாரியக் கொள்கைகளூடான தாக்கத்தினால் ஏற்பட்டிருந்தது. இதனால் இந்தச் செல்லச்சனதிக் கோவில் நிகழ்வை முற்றாக மறுத்திருந்தேன். குலம், நான் , ராகவன் மூவரும் தான் இதை முழுமையாக எதிர்த்தோம்.
வேடிக்கை என்னவென்றால் இவ்வேளையிலும் கூட நான் தொழில் ரீதியாக கோவிலில் பிராமணராக இருந்தேன் என்பதுதான்.
எது எவ்வாறாயினும் பிரபாகரன் அப்போது எமக்கெல்லாம் ஒரு ஹீரோ போலத்தான். துரையப்பா கொலையை வெற்றிகரமாக முடித்தவர் என்பது தான் இதன் அடிப்படைக் காரணம்.
ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடவில்லை. இது கூட ஒரு கடவுள் மறுப்பின் காரணமாகத் தான். வங்கிக் கொள்ளைக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளை வாங்குவதற்காக பிரபாகரன் ராகவனை வேறொரு இடத்திற்கு அனுப்பிவைக்கிறார்.அவ்வேளையில் அங்கு கோவில் திருவிழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் ராகவன் கடவுள் இல்லை என்று சொல்வதால் அவரைத் தீக்குளித்துக் காட்டுமாறு கேட்டிருக்கிறார். அவ்வாறு நடந்த வாக்குவாததிலெல்லாம் ஈடுபட்டதால் பிரபாகரன் ஆத்திரமடைந்திருக்கிறார். போன வேலையில் ஈடுபடாமல் வேறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ராகவனை சில காலம் நீக்கி வைத்திருந்தார். இதனாலேதான் ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் கூடப் பங்குபற்றவில்லை. ஒரு சில நாட்களுக்கே விலகியிருந்த ராகவன் மீண்டும் இணைந்து கொள்கிறார்.
இதன் பின்னர் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிபிற்கு வருகிறோம். புளியங்குளம் காட்டில் ஒரு இடத்தையும் தேர்ந்து கொள்கிறோம். அங்குதான் எமது பயிற்சிகளை ஆரம்பிக்கிறோம். இந்த முகாமில் முழு நேரமாக பங்கெடுத்துக் கொண்டவர்கள் நானும் பிரபாகரனும் மட்டும்தான். மற்றவர்கள் பகுதி நேரமாக அங்கு பயிற்சிக்கு வந்து போவார்கள்.அவ்வேளையில் எமது குழுவிற்கான மத்திய நிர்வகக் குழு ஒன்றை அமைத்துக் கொள்கிறோம். அக்குழுவில் நான், பிரபாகரன், குமரச்செல்வம், பட்டண்ணா, சின்னராசு என்கிற உதய குமார் என்ற ஐந்து பேரும் அங்கம் வகிக்கிறோம். அப்போது பருமட்டான திட்டம் ஒன்றினை முன்வைக்கிறோம்.
1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.
2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.
3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.
4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
இவையெல்லாம் அன்று எமக்கு நியாயமான சுலோகங்களாகத் தான் தெரிந்தன. இவற்றின் அடிப்படைகளே இன்று ஆயிரமாயிரம் உட்கொலைகளை உருவாக்கி ஈழப்போராட்டத்தில் இரத்தம் உறைந்த வரலாற்றை உருவாக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பிரசுரங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் எதாவது ஒரு அரசியல் பின்புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. நான் சொல்லப் போவதெல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புக்களும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்ரைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும் உண்மைச் சம்பங்களை முன்வைத்து எழுத்துருவாக்குவதை இன்றைய கடமையாக எண்ணுகிறேன். என்னோடு பங்களித்த ராகவன், குலம், கிருபாகரன்,கலாபதி உள்ளிட்ட அனைவரும் இது முழுமை பெறத் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்





உணருமா புலம்பெயர் சமூகம்?:தமக்கான தலைமை எது என்பதை ஊடகங்களல்ல? "மக்களே தீர்மானிப்பர்"


தமிழர்களும் பாராளுமன்றத் தேர்தலும்
தமிழ் மக்கள் மத்தியில் இன்று பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. தகுதியான அமைப்பை இனம்கண்டு அதில் போட்டியிடும் தரமானவர்களைத் தமது அரசியல் பிரதிநிதிகளாகத் தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும்.
தரமான அரசியல் தலைமைத்துவத்தின் தேவை தமிழ் மக்களால் உணரப்பட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டலும் நேர்மையும் உறுதியும் அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளையும் இனங்கண்டு அவற்றை நிலைநாட்டுவதிலுள்ள ஈடுபாடுமே ஒரு இனத்தின் சிறப்புக்கும் மதிப்புக்கும் ஆதாரமானவை. பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள இன்றைய நிலையில் ஒவ்வொரு தமிழ் மகனும் பொறுப்புடன் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலாகட்டும் நாட்டின் ஏனைய பகுதிகளிலாகட்டும் ஒரு திட்டவட்டமான கொள்கையுடன் கூடிய அதாவது மக்களின் வாழ்வுரிமை தொடர்பில் நிலையான உறுதியான கொள்கையுடைய அரசியல் நிலை இல்லை என்பது உண்மையான நிலைமை. இது யதார்த்தமானது. விரும்பியோ, விரும்பாமலோ இந்த உண்மை நிலையைப் பகிரங்கமாக்க வேண்டியுள்ளது. கட்டுப்பாடான அரசியல் பிரதிநிதித்துவத்தை 1977 பொதுத் தேர்தலின் பின் தமிழர்கள் கைநழுவ விட்டுவிட்டனர். அந்நிலை ஏற்பட்ட பல்வேறு சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள், செயற்பாடுகள் ஏதுக்களாயமைந்துவிட்டன. ஜனநாயக அரசியல் தமிழர்களைப் பொறுத்தவரை சிதைக்கப்பட்டது. இதுவே ஏனைய சமூகங்களின் தேவையாகவும் இருந்தன என்பதை மறைப்பதற்கில்லை. மறுக்கவும் முடியாது. உறுதியாக கட்டுப்பாடான அரசியல் சக்திகளை மாற்று அரசியல் அமைப்புகளோ மாற்று சமூக அமைப்புகளோ விரும்புவதில்லை. அதுவும் ஒரு ஜனநாயகப் பண்பு என்று கூடக் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் அரசியல் உறுதிப்பாட்டை அதன் மூலம் மக்களின் உரிமைகளைப் பேண வேண்டிய தேவை தமிழ் மக்களுக்குண்டு. அதைப் புரிந்துகொள்ள வேண்டிய தெளிவான சிந்தனையும் தமிழ் மக்களுக்குத் தேவை. தமிழ் மக்கள் தரமான அரசியல் தலைமையை பிரதிநிதித்துவத்தை அடையாளம் கண்டு தெரிவு செய்யத் தவறினால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தமக்குத் தாமே அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்ததாக அமைந்துவிடும். இது முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும். தமிழ் மக்கள் தமக்குரிய அரசியல் பிரதிநிதித்துவங்களின் அவசியத்தைப் புரிந்துகொள்ளாத தன்மையே கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நிலவுகின்றது. நாட்டின் அரசியலரங்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பவற்றைப் பறித்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தேர்தல் தொகுதி மறுசீரமைப்புகள் கூட இந்நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் தெளிவு இருப்பின் இவற்றைப் புரிந்துகொள்ளலாம். கடந்த கால தேர்தல் வரலாறுகளை நோக்கும் போது தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களில் அசிரத்தையாக இருந்துள்ளனர் என்பது தெளிவானது. அது தொடரப்படக்கூடாது என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. தேர்தல்களில் வாக்களிக்காமை, வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதில் அக்கறை செலுத்தாமை, தமிழர்கள் தேர்தல்களில் போட்டியிட்ட போதும் அவர்களுக்கு வாக்களிக்காமை என்பவற்றுடன் அச்சத்தின் மூலம் வாக்களிப்பதில் தவிர்த்துக் கொள்ளுதல் , வாக்குச்சீட்டை செல்லுபடியாக்குதல், வாக்களிப்பு முறையை விளங்கிக் கொள்ளாமல் தவறாக வாக்களித்தல், தேர்தலில் வாக்களிப்பதைப் பகிஷ்கரித்தல் போன்ற செயற்பாடுகளால் தமிழர் பிரதிநிதித்துவங்கள் அரசியல் நிர்வாக அமைப்புகளில் இழக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி பணம், மது என்பவை கூட அப்பாவித் தமிழர்களின் வாக்குரிமையைத் தவறாகப் பயன்படுத்தத் தூண்டுதல் செய்வதாகக் கடந்த காலங்களில் குறிப்பாக மலையகப் பெருந்தோட்டங்களில் பேசப்பட்டது. இது ஆரோக்கியமான அரசியல் நிலைமை அல்ல. இந்த நாட்டில் இனவாத அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்நிலையில் இனங்களிடையே சமத்துவம் பேணப்பட வேண்டுமானால் அதற்கு இனங்களின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சகல அரசியல் நிர்வாக அமைப்புகளிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுவும் தரமான , தகுதியான , சமூக உணர்வு கொண்ட பிரதிநிதித்துவங்களாக அமையவும் வேண்டும். இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் தேவையுடையவர்களாக இருக்கின்றனர். அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூடப் பயன்படுத்த முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
ஒரு இனத்தின் உயிர் நாடி மொழிப்பயன்பாடு. அரசியலமைப்பு சட்டத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் நடைமுறையில் தமிழ் மக்கள் அதை அனுபவிக்க முடியாத நிலையுள்ளது. அதேபோன்று சமத்துவக் கல்வியும் பெரும்பாலும் ஏட்டளவிலேயே உள்ளது. பாதுகாப்புக்கு போதிய உத்தரவாதம் இல்லை. இனவெறி அரசியல் இந்நாட்டில் நிலவுவதால் பாதுகாப்புக் காலத்திற்குக் காலம் பங்கப்படுத்தப்பட்டு வருவது வரலாற்று ரீதியாக உறுதியாகின்றது. இதேபோல் பல்வேறு வாழ்வுரிமைக்கான தேவைகள் நிறைவேற்றப்படாமலுள்ளன.
இவற்றையெல்லாம் கருத்திலும் கவனத்திலும் கொள்ளாது தேர்தல்களை எதிர்கொள்ளக் கூடாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு பொழுது போக்காக, விளையாட்டாக,சூதாட்டமாக ஆகிவிட்டது என்று எண்ணத் தோன்றுகின்றது. பணம் இருப்பவர்கள் போட்டியிடுகின்றார்கள். வாக்குகளைப் பிரித்து ஏனைய தமிழர்களின் தோல்வியை உறுதிப்படுத்த பணத்தைப் பெற்றுப் போட்டியிடுகின்றார்கள். போட்டியிட வாய்ப்புக் கிட்டாவிட்டால் நேற்றுவரை திட்டித்தீர்த்தவர்களுடன் இணைந்து போட்டியிடுகின்றார்கள். வெற்றி பெற முடியாது என்று தெரிந்து கொண்டே வாக்குகளைச் சிதைத்து தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவங்களை இழக்கச் செய்ய வேண்டுமென்றே போட்டியிடும் பலர் உள்ளனர். புத்திஜீவிகளாகவும் கல்விமான்களாகவும் கருதப்பட்ட பலரும் ஜனநாயகத்தை மறந்து பணநாயகத்தால் கவரப்பட்டு மதிப்பிறங்கிக் களமிறங்கியுள்ளனர் என்று தமிழ் மக்கள் மத்தியிலே பேசப்படுகின்றது. இந்நிலை அரசியல் தரத்தின் வீழ்ச்சிக்கு மட்டுமல்ல அறிவியல் தரத்திலும் தமிழரின் வீழ்ச்சிக்கு வழியமைக்கின்றது என்பது உணரப்பட வேண்டும். பல்வேறு பொறுப்பற்ற உட்சக்திகளாலும் திட்டமிட்ட வெளிச்சக்திகளாலும் சீரழிக்கப்பட்டு இன்று அரசியலில் அநாதரவான நிலையிலுள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் பொறுப்பற்ற பொருத்தமற்றவர்களை இனங்கண்டுகொள்ள வேண்டிய கட்டாய தேவை தவிர்க்க முடியாத தேவை தமிழ் மக்களுக்குள்ளது.
உணர்வைத் தூண்டிவிட்டு வாக்குகளைக் கொள்ளையிடும் அரசியலோ பணத்திற்கும் பதவிக்கும் அடிமைப்படுத்தப்படும் அரசியலோ சமுதாயத்திற்குப் பயனில்லை. கொள்கை உறுதியும் சமத்துவமான உரிமைக்காக குரல் கொடுத்து இணக்கப்பாட்டுடன் செயற்படக்கூடிய அரசியல் பிரதிநிதித்துவங்களே தமிழர்களின் இன்றைய தேவை. அதுவும் கட்டுப்பாடாக ஒன்றிணைந்த தலைமைத்துவம் கொண்ட அரசியலே இன்றைய தேவை.
தமிழ் மக்கள் மத்தியில் இன்று பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. தகுதியான அமைப்பை இனம்கண்டு அதில் போட்டியிடும் தரமானவர்களைத் தமது அரசியல் பிரதிநிதிகளாகத் தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும்.
அதுவே நமது சமுதாயத்தின் இன்றைய தேவை. நம்பிக்கை பொறுப்புணர்ந்து தாமும் செயற்பட்டு மற்றவர்களுக்கும் வழிகாட்டி நெறிப்படுத்த சமுதாய நலன் விரும்புவோர் முன்வர வேண்டும். அதையே தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்த்துள்ளது. கடமையை உரிமையுடன் ஆற்றப் பின் நிற்கக்கூடாது.





தேசம் காத்தவர்களையும் தேசநலனையும் மறந்த தேசியவாதிகள்

இலங்கையின் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் விடுதலைக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு தியாகங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆயுத போராட்டம் அகில உலகத்தையுமே தமிழர் பக்கம் திரும்ப வைத்தது.
தமிழர் தரப்பு யுத்தத்தில் பல அதிசியங்களை நிகழ்த்தி இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்த போது அரசியல் ரீதியாகவும் தமிழர் தரப்புக்களை ஒருங்கிணைத்து ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும் ஒரே குரலில் ஒலிக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு இராணுவ அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கபட்ட தமிழரின் தேசிய விடுதலை போராட்டம் பிராந்திய சர்வதேச சக்திகளின் கூட்டு சதியால் பலமிழக்க செய்யப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் உறுதியான ஆணையை பெற்று தமிழர்களின் அரசியல் சக்தியாக தற்போது எஞ்சியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சிலர் பிளவு பட்டு சென்று தனியாக தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது அனைத்துலகிலும் வாழும் தமிழர்களின் மத்தியில் கடும் விசனைத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட அரசியல் அனுபவமும் வடகிழக்கு தமிழ் மக்களால் எவ்வித பிரதேச வேறுபடுகளுமற்று ஏற்று கொள்ளப்பட்ட கூட்டமைப்பின் தலைமையை அகற்றுவதற்காகவும் கூட்டமைப்பினால் கைவிடப்பட்டுள்ள தாயகம் தேசியம் தன்னாட்சி கோட்பாடுகளை காப்பதற்காகவுமே தாம் புலம்பெயர் தமிழர்களின் விருப்பத்துடன் தனித்து போட்டியிடுவதாக பிரிந்து சென்ற தரப்பினர் கூறி வருகின்றனர். புலம்பெயர் சமூகம் என்று இவர்கள் குறிப்பிடுபவர்கள் யார் என்பது பற்றி நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.புலம்பெயர் நாடுகளில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் எமக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தேசிய விடுதலைப் போராட்டத்தை தாங்கி நின்ற மக்கள் போராட்டம் இந்நிலை அடைந்து விட்டதே என்ற வேதனையுடனும் விரக்தியுடனும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கலாய்த்து போயுள்ள இந்த நிலையில் தேசத்திற்கு சேவை செய்வதெற்கென தேசியத்தால் புலம் பெயர் நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு பின் தமது அதிகாரங்களை தக்க வைப்பதற்காக ஒவ்வொரு கோசத்துடன் ஒவ்வொரு குழுக்களாக பிளவுபட்டு போயுள்ளனர். இவ்வாறு பிளவுபட்டுள்ள குழுக்களின் செயற்ப்படுகளால் தேசத்தை நேசிக்கும் புலம்பெயர் மக்களும் கலங்கிப் போயுள்ளனர். இவ்வாறு பிளவுபட்டு போயுள்ள புலம்பெயர் குழுக்களில் ஒரு குழுவினரின் உந்துதலே கூட்டமைப்பில் இருந்து திரு.கஜேந்திரகுமார் வெளியேற காரணம் என ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புலம் பெயர் நாடுகளில் இவர்களின் சில வேலைகளிற்கு முன்னிறுத்துவதற்கு பதவிகளுடன் சிலர் தேவைப் படுகின்றனர். அதற்க்கான முயற்சியே இந்த பிளவு படுத்தல். திரு.கஜேந்திரன் திருமதி.பத்மினி ஆகியோர் தாங்கள் வழங்கிய சில செவ்விகளில் தாங்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க நினைத்தும் வெளிநாடுகளில் உள்ள சிலரின் முயற்சியாலேயே தேர்தலில் நிற்பதாக கூறியுள்ளனர். திரு.கஜேந்திரன் திருமதி.பத்மினி ஆகியோரின் விடுதலை உணர்வையோ தேசியத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கினையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது ஆனால் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் ஒரு சிலரின் உந்துதலினால் நீங்கள் தமிழரின் வாக்குகளை பிளவு படுத்துவது வேதனைக்குரியது. போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தது என்ன? இரகசிய தீர்வுத்திட்டம் தயாரித்து இந்தியாவிற்கு வழங்கியுள்ளனர் என்பன போன்ற நீங்கள் இப்போது கூறும் குற்றச்சாட்டுக்களை ஏன் ஆரம்பத்திலேயே நீங்கள் மக்களிடம் முன்வைக்கவில்லை?.இறுதிக்கட்ட போர் முடிந்து 10 மாதங்களாகியும் மௌனமாக இருந்துவிட்டு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றவுடன் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயப் படுத்த முடியும்? தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை புலம்பெயர் மக்களுடன் பேசவில்லை அவர்களின் கருத்துக்களை அறிய முற்படவில்லை என குறைப்பட்டு கொள்பவர்கள் யாருடன் அவர்கள் பேச வேண்டுமென எதிர்பாக்கிறார்கள்?. ஈழத்தமிழரின் மிகப் பலம் பொருந்திய சக்தியாக இருந்த புலம்பெயர் மக்கள் சக்தி இன்று சிலரின் நடவடிக்கைகளினால் செயலிழந்து செல்கின்றது. யார் தலைமை தாங்குவது என்ற அதிகராப் போட்டிகள் இன்னும் புலம்பெயர் நாடுகளில் முடியவில்லை. ஆய்வுகளும் மறுஆய்வுகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. நிர்வாக ரீதியாக அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கக் கூடியதான ஒரு பலமான அமைப்பை நிறுவுவதில் இன்றுவரை வெற்றி கிட்டவில்லை. இவ்வாறான ஒரு அமைப்பு இருந்திருந்தால் கூட்டமைப்பை அழைத்து பேசியிருக்கலாம் பிளவுகளை தடுத்திருக்கலாம். கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்படும் போது புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் எவையுமே தமது கருத்துக்களை பகிரங்கமாக கூறவில்லை. தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்காக அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.அவற்றை எமது மக்கள் தீர்க்கமாக முறியடிப்பார்கள்.ஆனால் கடந்த தேர்தலில் ஒன்றாக இருந்து மக்களிடம் பெரும அபிமானத்தை பெற்ற தலைமைகள் இப்போது ஒருவரையொருவர் குறை கூறுவது அரசியல் சுதந்திரம் சமூகம் போன்றவற்றில் மக்களிற்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்கவே வழி வகுக்கும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியுடன் மட்டும் தமிழரின் தேசியத்தை காக்க முடியுமென்றால் தமிழர் பிரைச்சனை எப்போதே முடிந்திருக்கும். ஈழத்தமிழ் மக்களும் தமது அரசியல் அபிலாசைகளை பல தேர்தல்களில் தெளிவாக வழங்கியுள்ளார்கள்.தேசியம் தாயகம் தன்னாட்சி என்ற கருப்பொருளுக்கு செயலுருவம் கொடுத்தவர்கள் என்ற பெருமை தேசியத்தலைவரையும் அவர்தம் போராளிகளையுமே சாரும்.தன்னாட்சி பெற்ற தமிழர்களின் தேசம் எப்படி இருக்கும் என்று அவர்கள் காலத்திலேயே நேரடியாக கண்டுகொண்டோம். தமிழ் தேசியத்தை காக்க இறுதிவரை உறுதியுடன் போராடியவர்கள் அவர்களின் அன்பு உறவுகள் முட்கம்பி வேலிக்குள் இன்றுவரை முடங்கிப் போயுள்ளார்கள். இயக்க கொடுப்பனவுகளில் வாழ்ந்த எத்தனை ஆயிரம் குடும்பங்கள் இன்று எதிர்காலம் சூனியம் ஆக்கப் பட்ட நிலையில் உள்ளார்கள். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் போராளி ஒருவர் இடுப்புக்கு கீழே செயற்பட முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பவர் மே 19 வரை இயக்க பராமரிப்பில் இருந்தார். இராணுவத்தினரிடம் பிடிபட்டு பின்பு முகாமில் இருந்து ஒருவாறு வெளியேறி தாயாருடன் சேர்ந்து கொண்டார் இப்போரளிக்கு ஒவ்வொரு நாளும் ஊசி போடவேண்டும் விலை அதிகமான ஊசி வறுமையான அந்த தாய் என்ன செய்வார்? எதாவது ஒருவகையில் உதவி வந்து சேரும் என இன்றும் எதிர்பாத்து கொண்டிருக்கிராறாம். இவரைப்போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர். அண்ணை எல்லாத்தையும் பார்த்துக் கொள்வர் என சொல்லிவிட்டுப் போன போராளிகளின் குடும்பங்கள் பற்றி யார் சிந்திப்பது? தமிழர் பகுதிகளில் செயற்பட்ட தமிழர் சார்பு நிறுவனங்கள் யாவும் முடக்கப்பட்ட நிலையில் புலம் பெயர் நாடுகளில் பெரியளவில் தேசிய வளங்களுடன் இருப்பவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி வருகின்ற திரு.கஜேந்திரன் போன்றவர்கள் புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்து ஈழத்தில் எதாவது நிவாரண வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கலாம். வெறும் வாக்குறுதிகளால் தேசம் மீட்க முடியாது. தனியாக தேர்தலில் போட்டியிட்டு தன்னாட்சி பெற்றுத் தர தைரியமுள்ள உங்களால் ஏன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு உதவிகளைக் கூட செய்யமுடியாமல் போனது?.தேசத்திற்கான பணிகள் எவ்வளவோ உங்கள் முன்னலுள்ளபோது அவற்றை விடுத்து தேர்தல் அரசியலில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரியது. மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு அமைய எமது அடுத்த கட்ட உரிமைப் போரை நடத்துவதற்கு உணர்வுகள் சிதைக்கப் படாமல் தாயகத்தில் உள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஓரணியில் இருக்க வேண்டியது இன்றைய அவசிய தேவையாகவுள்ளது. ஸ்ரீலங்கா அரசானது ஒவ்வொரு தமிழ்த் தேர்தல் மாவட்டங்களிலும் பெருமளவிலான சுயேட்சை குழுக்களை களமிறக்கி ஒவ்வொருவரும் 1000 வாக்குகளையாவது பிரிக்க வேண்டுமென்ற செயல்திட்டத்தை பெரும் பணச்செலவுடன் அரங்கேற்றியுள்ளது. கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் செயற்பாடுகள் இவர்களுக்கு துணைபோகுமே தவிர தமிழினத்துக்கு எவ்வித நன்மைகளையும் செய்யப்போவதில்லை. இவற்றை கருத்தில் கொண்டு பிரிந்து சென்றவர்கள் தமிழ்தேசியத்திற்கு தங்கள் வரலாற்று கடமையை செய்ய வேண்டுமென்பதே பெரும்பாலான தமிழர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

திருமாறன்





ஈழத் தமிழினத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கப்போவது யார்? - பருத்தியன்


நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது.
இங்கு யார் பிரிந்தார்கள்; பிரிக்கப்பட்டார்கள் என்பவற்றின் காரண காரியங்களை இரண்டாம் பட்சமாக வைத்து, இவ்வளவு காலமாய் நம் மக்கள் பட்ட துன்பங்கள்,கஷ்டங்கள்,இழப்புக்கள் எல்லாம் எதற்காக??? என்ற கேள்வியை முதன்மையாக வைப்போம்.
சிங்களவன் போடும் பிச்சைத் தீர்வை வாங்கிக் கொள்வதற்கு இவ்வளவு போராடியிருக்கத் தேவையில்லை. இவ்வளவு அவலங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லை. ஆனால், போகிற போக்கில் இவர்களின் ஒற்றுமையில்லாத செயற்பாடுகளினூடாக சிங்களவன் போட நினைக்கும் பிச்சைத் தீர்வைவிட கேவலமான ஒரு தீர்வுதான் தமிழருக்குக் கிடைக்கும் போலிருக்கின்றது. அப்போது இவர்கள் ஏதாவது சொல்வதற்கும், செய்வதற்கும் ஒன்றுமே இருக்காது. எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்களாய் நிற்பார்கள். இவர்களோடு துணைநின்ற துணைக்கண்டம் கூட துணை நிற்காது. மேற்குலகமும் வேடிக்கை பார்த்து நிற்க தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படும். தமிழர்களின் பிரதிநிதிகளாய் சிங்களம் சொல்லும் எதனையும் ஆமோதிக்கும் தமிழ்த் தலைவர்கள் மாத்திரம் விருந்தினர்களாய் வந்து உட்கார அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழர்களின் எதிர்காலம் நமது அரசியல் சாணக்கியர்கள் முன்னாலேயே சிங்களவன் கைகளிற்கு எழுதிக் கொடுக்கப்படும்.
நம் மக்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மண்ணாய்ப் போகும்! மண்ணோடு மண்ணாகிப் போன நம் மாவீரர் கனவுகள் எல்லாம் வீணாய்ப் போகும்! தமிழீழம் என்கின்ற தேசத்தின் விடியல் தொலைவாகி தமிழினத்தின் விடுதலையும் கனவாகிப் போகும்!
பாராளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தற்போது மும்முரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் மிகவும் வினோதமாய் அமைந்துள்ளன. வழமையாக ஒரு தேர்தல் வரும்போது கட்சிகள் சில ஒற்றுமையாகி கூட்டணி வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ளவே முயலும். ஆனால் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவடைந்து மூன்று அணிகளாக உருவாகியிருப்பதானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். தாயகத்திலுள்ள தமிழர்களினைப் பொறுத்தவரையில் தற்பொழுது சிங்கள தேசத்தினால் நிர்ணயிக்கப்படும் தேர்தல்களில் அதிக நாட்டமில்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.வாக்களிக்க ஆர்வமுள்ள அற்ப சொற்ப வீதமானவர்களைக் கூட தமது அச்சுறுத்தல்களினால் அடக்கிவிடுகின்றது சிங்கள வல்லாதிக்கம். அதைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது காணமுடிந்தது. நிலைமை இப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவென்பது தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் விரக்தி நிலையையுமே உருவாக்கியிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவது உறுதி என்ற மகிழ்ச்சியான செய்தியை மகிந்தவுக்கு முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்கள் நம் தமிழ் அரசியல் சாணக்கியர்கள்.
ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனும் தமிழீழம் என்ற இலட்சியக் கனவினை அடிமனதில் சுமந்தபடியே வாழ்கின்றான் என்பதனை இந்த அரசியல்வாதிகள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கோட்பாட்டினைக் கைவிட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். தற்போழுதும், எப்பொழுதும் உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் இருப்பவர்களை இனங்கண்டு வாக்களிப்பதன் மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியுமென்பதுடன், தாயகத்தில் வாழும் தமிழர்களின் அபிலாசையும், கோரிக்கையும் தமிழீழத் தேசியமே என்பதனை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தவும் முடியும்.
ஒரு பேரழிவின் பின்னும் ஒன்றுபடாத இனமாக தமிழினம் இருப்பது சகிக்க முடியாத வலியை மட்டுமே கொடுக்கின்றது. தாயக நிலைமை இவ்வாறிருக்க, புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் ஜனநாயக வழிப் போராட்டங்களில் கூட பிளவுபட்ட நிலையே காணப்படுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, வட்டுக் கோட்டைத் தீர்மானம் என பல வழிகளில் தொடரப்படும் போராட்டங்களின் நோக்கங்கள் , கொள்கைகள் தாயக விடுதலையையே முன்னிலைப்படுத்துவதாய் அமைந்தாலும், இவ்வமைப்புக்களுக்கிடையில் ஆரோக்கியமான ஒருங்கிணைந்த புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லையென்பதும் தெரிகின்றது. இந்த நிலை மாற்றப்பட்டு தாயக விடுதலை என்ற இலட்சியத்தினை நோக்கி சமாந்தரமாகப் பயணிக்கும் முப்படையணிகளாக எதிர்காலத்தில் தமது ஜனநாயக வழி போராட்டங்களினை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாக உள்ளது. அத்தோடு, இவற்றின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் தமது முழு ஆதரவினைத் தெரிவித்து தாயக விடுதலைக்காக உழைக்க வேண்டியது அனைத்து புலம்பெயர் தமிழர்களினது கடமையாகவும் அமைகின்றது.
ஒரு இனத்தின் எதிர்காலத்தினை அந்த இனமே தீர்மானிக்கவேண்டும். அதை வேறொருவர் தீர்மானிக்க எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது.
எமது இனத்தின் எதிர்காலமும் விடுதலையும் எமது விடுதலை உணர்விலேயே தங்கியுள்ளன.
இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொண்டவர்களாய், வரவிருக்கும் காலங்களில் தமிழ்த் தேசியக் கோரிக்கையினை வெளிப்படுத்துவோம்!
தமிழீழம் ஒன்றுதான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதை சர்வதேசத்திற்கு தெரிவிப்போம்!
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"





சிங்களம் தர விரும்புவதற்குச் சாட்சியாக நிற்பதற்கா இந்தியத் துரோகத்தால் இத்தனையும் இழந்தோம்?


முள்ளிவாய்க்கால் வரை தமிழ்த் தேசியம் பேசிய சில ஊடகர்கள், தற்போது இந்தியச் சதியின் பேரழிவால் தமிழீழ மக்கள் மத்தியில் பொங்கி மேலெழுந்துவரும் இந்திய எதிர்ப்பைத் தணிப்பதற்காகத் தங்கள் எழுத்துச் சித்துக்களைத் திருப்பி விட்டுள்ளார்கள்.

'ஓநாய்கள் என்றால், ஆடுகளைக் கொல்லத்தான் செய்யும். ஆடுகள் எப்படியும் ஓநாய்களுடன் சமரசம் செய்து தங்கள் இழப்புக்களைக் குறைத்துவிடலாம் என்பதுதான் இவர்களது ஒட்டு மொத்த அணுகுமுறையாகவும் உள்ளது.

'இந்தியா இல்லாமல் தெற்காசியாவில் எதுவுமே நடக்காது.... இந்தியாவைத் தவிர்த்து தமிழீழப் பிரச்சினையில் மேற்குலகு கூடத் தலையிட முடியாது.... இந்தியாவை நாம் எமக்காகக் கையாள்வது அவசியம்... இந்தியாவைத் தேசியத் தலைவர்கூடக் கையாண்டார்... என்றெல்லாம் ஏதேதோ கூறி வருகின்றார்கள். ஆனாலும், அவர்கள் காட்டும் கற்பனாபுரியில் நாங்கள் மணற்கோட்டை கூடக் கட்ட முடியாது என்பது பல பத்து ஆண்டுகளாக நாங்கள் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்.
1) 'இந்தியா இல்லாமல் தெற்காசியாவில் எதுவும் நடக்காது' என்ற கூற்றில் உண்மை இருக்கிறதா? என்று முதலில் பார்ப்போம். இந்தியா என்றதொரு பெரிய நாடு இருக்கும்போது... என்ற பிரமிப்பை அகற்றிவிட்டு, சாதாரண ஒரு தெற்காசிய நாடாக இந்தியாவை இப்போது பார்ப்போம். இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடும் அதன் பிரமாண்டத்தைப் பார்த்து அச்சம் கொண்டது கிடையாது. இந்தியாவிடமிருந்து பிரிந்து சென்ற பாக்கிஸ்தான் இன்றுவரை இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. பாக்கிஸ்தானின் இரு திசை அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக, இந்தியாவால் துண்டாடித் தனி நாடாக்கப்பட்ட பங்களாதேஷ் இப்போது இந்தியாவின் பங்காளி நாடாக இல்லை. பர்மா என்ற மியான்மார் சீனாவின் செல்வாக்கிற்குட்பட்ட இராணுவ ஆட்சியுடன் இந்தியாவை அச்சுறுத்துகிறது. இந்தியாவால் பொத்தி வளர்க்கப்பட்ட உலகின் ஒரே இந்து மன்னராட்சி நாடாக இருந்த நேபாளம் தற்போது இந்தியாவை விட்டு விலகி, சீனா பக்கம் சாய்ந்து வருகின்றது. எப்போதுமே இந்திய எதிர்ப்பு நிலையைக் கொண்டிருந்த சிறிலங்கா, இந்தியா விரித்த வலையில் இந்தியாவையே சிக்க வைத்துவிட்டு, சீனாவுக்கு கடை விரிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கே குறிப்பிடப்படும் அத்தனையும் இந்தியாவை மீறி தெற்காசியாவில் நிகழ்ந்துவிட்டது. நிகழ்ந்து வருகின்றது.
2) இந்தியாவைத் தவிர்த்து தமிழீழப் பிரச்சினையில் மேற்குலகு கூடத் தலையிட முடியாது.... என்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. இந்தியா மீது ஈழத் தமிழர்கள் கொண்டிருந்த பாசம் அவர்களை முள்ளிவாய்க்கால் வரை துரத்திச் சென்று கொடூரமாகக் கொன்றெழித்தது. அப்போதும் இந்தியாவை நோக்கித்தான் அவர்கள் அவலக் குரல்களை எழுப்பினார்கள். அவர்கள் எப்போதோ குரல் எழுப்பியிருக்க வேண்டும், இந்தியாவை நோக்கியல்ல சீனாவை நோக்கி! அங்கேயும் விடுதலைப் புலிகளை, தமிழகம் மீது தேசியத் தலைவர் அவர்கள் கொண்டிருந்த பாசமும் நம்பிக்கையும் தடுத்து நிறுத்தியது. அங்கேதான் விடுதலைப் புலிகள் பெருந் தவறு இழைத்துவிட்டார்கள் என்று இப்போது ஈழத் தமிழர்கள் மனம் வெதும்புகின்றார்கள்.
இந்தியாவின் பூரண அச்சுறுத்தலுக்குள் இருந்த சிங்கள தேசம் இப்போதுதான் சீனாவைக் கால் பதிக்க அனுமதித்தது. எங்கள் தமிழீழம் விரும்பியிருந்தால், திருகோணமலைத் துறைமுகத்தை எப்போதோ சீனாவுக்குக் கொடுத்திருக்கலாம். அங்கேதான் நாங்கள் பெரும் இராஜதந்திரத் தவறிழைத்துள்ளோம். இது காலமாகிப் போன கதை. ஆனால், அது தமிழகத்தைக் காப்பாற்ற தமிழீழம் கொடுத்த பெரு விலை என்பதைத் தமிழக மக்களாவது உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக, நாங்கள் இந்தியாமீது கொண்டிருந்த காதல், பக்தி, மரியாதை எல்லாமே இந்தியாவால் பறித்தெறியப்பட்டுப் பரிதாபகரமாக நிற்கிறோம். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னரும் மேற்குலகின் மனிதாபிமான அணுகுமுறைக்குக்கூட இந்தியாதான் இன்றுவரை தடையாக உள்ளது. ஆக, இந்தியா என்ற விஷச் செடியின்கீழ் தமிழீழ மக்கள் வாழ்வதற்குக்கூட முடியாது என்பதை அனைவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம். அத்தனை மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் உள்ள பிளவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் பூதாகரமாகி வருகின்றன. மாவோயிஸ்டுக்களுடனும், நாக்சலைட்டுக்களுடனும் யுத்தம் புரிய வேண்டிய கட்டாய சூழ்நிலை பல மாநிலங்களில் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் பாக்கிஸ்தானிலிருந்து தீவிரவாதமும், சீனாவின் இந்தியாவை உடைத்துப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியமும் எம்மால் உணர்ந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்கள். ரஷ்ய வல்லரசே கண்முன்னால் இடிந்து பிளந்ததை நாம் மறந்துவிட முடியாது.
இன்னொன்றையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த அயல், வெளி நாடுகளின் அரசியலிலும் மூக்கை நுழைத்து அடி வாங்கி அவமானப்படாத சீனா, தற்போதைய பொருளாதார பெரும் வளர்ச்சியுடன் தனது கம்யூனிச இறுக்கத்தைப் படிப்படியாகத் தளர்த்திக் கொண்டே வருகின்றது. எதிர் காலத்தின் கால ஓட்டத்தில் சீனா மேற்குலகுடன் இணைந்து பயணிக்கத் தன்னைத் தயார்படுத்தியே வருகின்றது. ஆகவே, மேற்குலகு - சீன உறவு மேம்படும் நிலையை எமக்குச் சாதகமாகக் கொள்வதே தற்போதைய இராஜதந்திர அணுகுமுறையாக இருக்கும்.
3) இந்தியாவை நாம் எமக்காகக் கையாள்வது அவசியம்... என்பதை சிங்கள தேசத்திடமிருந்து தமிழீழ மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழீழம் என்ற சொல்லினூடாக உள்ளே நுழைந்து தலைவலியாக இருந்த இந்தியாவைக் கொண்டே தமிழீழம் என்ற சொல்லை நீக்க வைத்த சிங்களத்தின் ராஜதந்திரத்தை நாம் பாராட்டாமல் இரக்க முடியாது. தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி கூட தற்போது இலங்கைத் தமிழர்கள் என்றே அழைக்க வேண்டிய பச்சோந்தித் தனத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆக, தமிழீழம் என்ற சொல்லையே நீக்க முன்நிற்கும் இந்தியாவை எப்படிக் கையாள்வது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்தியாவை எமக்காகக் கையாண்ட காலங்களில் எமக்கு இருபது வருடங்களுக்கு மேலான அனுபவங்கள் உண்டு. இந்தியா எம்மைக் கையாண்ட காலங்களில் எமக்கு ஐம்பது வருடங்களுக்கு மேலான அனுபவங்கள் உண்டு. இந்தியாவை நாம் இனியும் எமக்காகக் கையாள்வது என்பது, நாம் எம்மையே புதைகுழிக்குள் புதைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.
இறுதி யுத்த காலத்தைக் கண்ணீரோடு நினைவு கூர்ந்து பாருங்கள். விடுதலைப் புலிகள் யுத்தம் புரிந்தார்கள் என்பதற்கும் அப்பால், 350,000 தமிழ் மக்கள் கதறி அழுதார்களே! எங்களைக் காப்பாற்றுங்கள் என்று. புலம்பெயர் தேசங்கள் எங்கும் பத்து இலட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி அழுது போராட்டம் நடாத்தினார்களே! முத்துக்குமாரில் ஆரம்பித்து முகம் தெரியாத எத்தனையோ பேர் தம்மைத் தாமே எரித்து உணர்வூட்டினார்களே! தமிழகத்து மக்கள் 'இந்திய அரசே! எங்கள் தொப்பிள்கொடி உறவுகளைக் காப்பாற்று! என்று போராடினார்களே! என்ன நடந்தது...? இந்தியா என்ன செய்தது...? நினைக்கவே நெஞ்சம் கொதிக்கின்றது. பிறக்காத குழந்தை ஒன்று தாயின் வயிற்றைக் கிழித்த செல் ஓட்டையினால் தன் கையை வெளியே நீட்டிக் காப்பாற்றக் கோரிய அந்தக் கோரக் காட்சியை மறக்க முடியுமா? நாராயணனும், மேனனும் கொழும்பிற்குப் பறந்து சென்று 'பிரச்சினை அதிகரிப்பதற்குள் யுத்தத்தைக் கெதியாக முடித்து விடுங்கள். வேண்டிய ஆயுதங்களும் பணமும் நாம் தருகிறோம்' என்று ஊக்கம் கொடுத்தல்லவா திரும்பி வந்தார்கள்.
சிங்கள அரசு யுத்தத்தை நிறுத்த மறுத்தது என்பது ஒரு 'இந்தியப் புலுடா'. இறுதி யுத்த களத்திலிருந்து மக்களை வெளியேற்ற மேற்குலகின் சில நாடுகள் எடுத்த முயற்சியையும் இந்தியா தடுத்து நிறுத்தியது. அங்குதான் நாம் இந்தியாவை நம்பிய தவறில் இருந்து பெரும் பாடங்கள் கற்றோம். இந்தியாவை நம்பியதால் சீனாவை நிராகரித்தோம்! இந்தியாவை நம்பியதால் பாக்கிஸ்தானைப் பகைத்துக் கொண்டோம்! இந்தியாவை நம்பியதால் நாம் உலகில் எமக்கான நட்பு நாடுகளை உருவாக்கத் தவறியோம். அதனால், கேட்பதற்கே யாருமில்லாமல் முள்ளிவாய்க்காவில் முடிந்தே போனோம்! ஊதிய ஊடகவியலாளர்கள் இவற்றை எல்லாம் மறந்து எழுதித் தொலைக்கலாம். தேசிய ஊடகவியலாளர்கள் எழுத உட்கார்ந்தால் இவற்றை எல்லாம் நினைக்காமல் எழுத முடியாது.
4) இந்தியாவைத் தேசியத் தலைவர்கூடக் கையாண்டார்... என்பது உண்மைதான். அவரால் எதைச் சாதிக்க முடிந்தது என்பதைத்தான் நாம் அவதானிக்க வேண்டும். இந்தியாவுடன் அவர் பல தடவைகள் முயற்சித்துப் பார்த்தார். பல இடங்களில் பணிந்தும் பார்த்தார். ஆனாலும் அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. காந்திய பாதையில் திலீபனும் முயற்சித்துப் பார்த்தார். அவரால் தன்னைத்தானே பலியாக்க முடிந்ததே தவிர இந்திய இதயங்களில் இரக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையே? எதைச் செய்து இந்தியாவைக் கையாள்வது? எதைப் பெற்றுத்தருவதற்காக இந்தியாவைப் பயன்படுத்துவது? சிங்களம் தர விரும்புவதற்குச் சாட்சியாக நிற்பதற்கா இந்தியத் துரோகத்தால் இத்தனையும் இழந்தோம்? வேண்டாம், மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு எங்கள் மக்களை அழைத்துச் செல்லாதீர்கள்.
5) முடிவாக, மேற்குலகின் அழுத்தங்கள் சிங்கள தேசத்தை இறுக்கி வருகின்றது. ஐ.நா.வின் அண்மைய அறிவிப்புக்களால் அலறித் தவிக்கின்றது. புலம் பெயர் தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் இந்த அழுத்தங்களை இன்னமும் பல மடங்குகள் அதிகரிக்கச் செய்யலாம். அதற்கான தருணங்களும் எம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு என புலம்பெயர் மக்கள் போராட்டம் விரிந்து செல்லட்டும். அதற்காக, தேசிய ஊடகவியலாளர்கள் மக்களைத் திரட்டும் பணிகளைச் செய்ய வேண்டும். எங்கள் நேசக் கரங்கள் எட்டுத் திக்கும் விரிந்து செல்லட்டும். எமக்கான இதயங்களை வென்றெடுக்கத் தொடர்ந்து உழைப்போம். அப்போது சிங்களம் எங்களோடு பேசியே தீரவேண்டும். ஏனென்றால், இலங்கைத் தீவில் சிங்களம் எங்கள் அயல் நாடு. அங்கே இந்தியாவுக்கு என்ன வேலை?





Thursday, March 18, 2010

த‌லைநிமிர்வு : த‌லைவ‌னும் த‌மிழீழ போராட்ட‌மும்..






த‌லைநிமிர்வு : த‌லைவ‌னும் த‌மிழீழ போராட்ட‌மும்....
இத‌ன் தொட‌ர்ச்சி ஒவ்வொரு வார‌மும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் என்ப‌தை எம‌து வாச‌க‌ர்க‌ளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.




உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?

தமிழ்மக்கள் கடந்த முப்பதாண்டுகளாக நடந்த போரால் நொந்து நூலாகிப் போயிருக்கின்ற நிலையில்-கூட்டமைப்பு தலைவர்கள் தமது அரசியல் சித்து விளையாடல்களை அரங்கேற்ற முனைவது அபத்தமான செயல். இது நிச்சயமாக தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாக இருக்காது. என மாதமிருமுறை வெளிவரும் தாய் நாடு இணைய பத்திரிகை தனது ஆசிரியர் பகுதியில் குறிப்பிட்டுள்ளது.
கடும் போட்டிகள், சவால்கள் நிறைந்துள்ள இந்தத் தேர்தல் களத்தில் கூட்டமைப்புத் தலைமை செய்யும் காரியங்கள் அதனை பலவீனப்படுத்துவதாகவே அமையப் போகிறது. இதுதான் யதார்த்தம்.
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலும் தமிழ்மக்களுக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்கின்ற ஒன்றாக மாறிவருகிறது. இதற்கு வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. என்றைக்கும் தமது உரிமைக்காகப் போராடும்- தமிழ்த் தேசியத்தைக் கட்டிக் காப்பாற்றும் என்று நம்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இதற்குக் காரணமாகியுள்ளது. இந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அணுகுமுறைகள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை, தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் தமிழருக்கு நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் எவராலுமே ஜீரணிக்க முடியாததாக உள்ளன.
ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டமைப்பின் தலைமை எடுத்த பக்கச் சார்புடைய தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல்- ஒதுக்கி வைக்கும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த முடிவைக் கூட்டமைப்பு எடுக்குமேயானால், அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை- அது பின் நோக்கித் தள்ளத் தயாராகி விட்டது என்பதை உணர்த்துவதாகவே அமையும்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மீதும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏராளமான விமர்சனங்களைக் கொண்டிருந்தார்கள். காரணம் அவர்கள் ஒரு போதும் - அது சம்பந்தனாக இருந்தாலும் சரி சிவாஜிலிங்கமாக இருந்தாலும் சரி சுரேஸ் பிறேமச்சந்திரனாக இருந்தாலும் சரி கஜேந்திரனாக இருந்தாலும் சரி- மக்களுடன் மக்களாக வாழவோ அல்லது அவர்களுக்கான பணிகளில் ஈடுபடவோ இல்லை என்பது வெளிப்படை.
அப்படியிருந்த போதும் தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஆதரிக்க எடுத்த முடிவுக்குக் காரணமே, அவர்கள் தமிழ்த் தேசியத்தையும்- தமிழரின் அரசியல் போராட்டத்தையும் தலைமை தாங்கவல்ல சக்திகளாக இருப்பார்கள் என்பதற்காகவே. ஆனால் அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் கூட்டமைப்பு தலைமை செயற்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
கடும் போட்டிகள், சவால்கள் நிறைந்துள்ள இந்தத் தேர்தல் களத்தில் கூட்டமைப்புத் தலைமை செய்யும் காரியங்கள் அதனை பலவீனப்படுத்துவதாகவே அமையப் போகிறது. இதுதான் யதார்த்தம். ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த தவறானதொரு முடிவினால் தான் கூட்டமைப்புக்கு இந்த நிலை வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தநிலையில் பொதுத்தேர்தலில் பலரையும் ஓரங்கட்டும் முடிவை எடுத்தால்- அது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தமிழரின் எதிர்பார்ப்புக்கு முரணான காரியமாகவே அமையும். மாறாக எவரையாவது கழற்றி விட்டுத் தனியானதொரு பாதையில் கூட்டமைப்பு பயணிக்க நேர்ந்தால்- அது நிச்சயம் அதன் தனித்துவத்தை மட்டுமன்றி மக்களின் ஆதரவையும் இழக்க நேரிடும். இதைக் கூட்டமைப்பின் பழம்பெரும் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்மக்கள் கடந்த முப்பதாண்டுகளாக நடந்த போரால் நொந்து நூலாகிப் போயிருக்கின்ற நிலையில்-கூட்டமைப்பு தலைவர்கள் தமது அரசியல் சித்து விளையாடல்களை அரங்கேற்ற முனைவது அபத்தமான செயல். இது நிச்சயமாக தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாக இருக்காது.
இப்படியான செயல்களின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு விலகி செல்லவே நேரிடும். அதையே கூட்டமைப்பு தலைவர்கள் செய்ய நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளுக்கும் விலை போகத் தயாராகி விட்டார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?


ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் எஸ்.கனகரத்னம் ஆகியோரே ஆளும் கட்சியில் இணைந்து பொதுத் தோ்தலில் போட்டியிடவுள்ளனர். தங்கேஸ்வரி மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிஷோர் சிவநாதன் வன்னித் தோ்தல் மாவட்டத்திலும், கனகரட்ணம் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்திலும் போட்டியிடவிருக்கின்றார்கள்.

இதே வேளையில் - கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா, பத்மினி சிதம்பரநாதன் மற்றும் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பாக தோ்தல் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அரசரப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் இன்று அல்லது நாளை இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதிதான் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதன் அடிப்படைகளாக இருந்த - தமிழர் தேசியம், தன்னாட்சி உரிமை, தமிழர் தாயகம் ஆகிய கொள்கைகளில் இருந்து கூட்டமைப்பு தடம் மாறி விட்டதாகக் குறி்ப்பிட்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் -

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறிகாந்தா ஆகியோர் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். புதிய கட்சியின் தலைவராக சிறிகாந்தா செயற்படுவார் எனவும், செயலாளராக சிவாஜிலிங்கம் இயங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விக்கிரமபாகு கருணாரட்ணவின் இடதுசாரி விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. ஏனைய 17 மாவட்டங்ளிலும் இடதுசாரி விடுதலை முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம் - “தமிழ் மக்களைக் கொலை செய்ய துணை போன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது. இது தொடர்பான எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்தப் போரை ஆரம்பித்தது இந்தியா தான் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே கூறியிருந்தார்.
மாவிலாறு பிரச்சினையில் போர் தொடங்கிய தருணத்தில் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியாவுக்கு சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்களால் சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியப் பிரதமரை சந்தித்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கவில்லை.
2007ஆம் ஆண்டில் சுமார் 15 வரையான வெளிநாடுகளுக்குச் சென்று போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் இந்தியாவுக்கு மட்டும் செல்லாதது ஏன்?
இந்திய பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டது. இவர்களும் அதில் விரும்பியே கலந்து கொண்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளை இங்கு கருத்து வெளியிட்ட சிறிகாந்தா - “சோனியா அரசுக்கு விசுவாசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது. கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவர்கள் இருக்கக் கூடாது என்பதில் இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது” என்று குறிப்பட்டார்.




ஈழத்திற்காக இந்தியாவிலிருந்து ஒரு குரல்

இனிய ஈழம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, புலம்பெயர் தமிழ் உறவுகளே , காலத்தின் கட்டாயமும் நேரத்தின் நெருக்கடியுமே இன்று தமிழ் இனத்தை இந்த நிலைக்கு ஆளாக்கியுருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை, தேசிய தலைவரின் நோக்கமும் செயலும் என்றுமே தோற்றதுமில்லை தோற்க போவதுமில்லை,
இன்று நமது உறவுகள் எதிர் எதிர் அறிக்கைகளை விடுத்து அறிக்கை வீரர்களாக தான் காட்சி அளிக்கிறோம் , இது வேதனையிலும் வேதனையானது , மாவீரர்களின் வீரத்தை விலை பேசமுடியுமா? நம் யாவராலும் செய்ய முடியா தியாகத்தை செய்து இன்று தமிழரின் எண்ணங்களில் வாழும் மாசற்ற அவர்களின் தியாகத்தை மறந்து செயலற்று தமிழன் ஆகிவிடுவானோ என்று நெஞ்சம் பதைக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருப்பது உண்மை , ஆனால் ஈழம் என்று எண்ணம் எழும்போது இதயத்தில், அதை அடைந்தே தீரவேண்டும் என்ற தணியாத தாகம் மட்டுமே எழ வேண்டும்

என் இனிய உலக தமிழினமே,

இன்னல்களால் அல்லாடும் ஈழ தமிழினம் நல்லதோர் விடிவை பெற உங்களால் ஆனா முயற்சிகளை மேற்கொள்ளும்படி கரம் குவித்து சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன், உலகின் பெரும்பாலான நாடுகளில் வாழும் தமிழினம் தமக்கென தனி நாடை பெற்றிருக்கவில்லை, இன்றும் சிற்றினங்களே தமக்கென தனி நாடை பெற்று ஆண்டுவருகிறது, இந்த சூழ்நிலையை மாற்றி தமிழினத்திற்கு தனி நாடை அமைத்து, சிறந்ததொரு ஆட்சி நிர்வாகத்தை உலகிற்கு காட்டிய ஒரே தலைவன் பிரபாகரன், இவ்வுலகின் கண்ணிற்கு உறுத்தலாக இருந்தது ஈழத்தின் அரசமைப்பு, ஈழத்தின் தலை சிறந்த நிர்வாகம், வல்லரசுகள் என்று வீராப்பு பேசும் நாடுகளுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்துவிடுமோ என்ற தீராத அச்சத்தின் காரணமாக குறிப்பாக இந்தியாவுக்கு, தரம் தாழ்ந்த இலங்கை ஈனர்களுடன் கரம் கோர்த்து தமிழின அழிப்பை அரங்கேற்றியுள்ளனர்.
தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அம்மையார் அவர்கள் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிடும்போது, பிரபாகரனைப் பொருத்த வரையில், அவர் ஒரு 'வோர் ஹீரோ' என்பதில் சந்தேகம் இல்லை.
நல்லவர், வல்லவர், ஊழல் செய்யாதவர், தூய்மையான நிர்வாகத்தைத் தந்தவர் என்கிற இமேஜ் இருக்கிறது. போர் நிறுத்த சமயத்தில் நான் கிளிநொச்சியிலுள்ள 'மடு' தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் வாழ்ந்ததைப் பார்த்தேன். அரிசி, ரொட்டி, காய்கனிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களெல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அதைப் பார்த்து எனது கார் டிரைவர் "அம்மா நாமும் இங்கேயே வந்து செட்டிலாகிவிடலாம் போல" என்று சொன்னார். உலகில் வாழ்வதற்கு ஈழத்தை போன்ற சிறந்த தேசத்தை தான் கண்டதில்லை என்று கூறியுள்ளார் ,
இவ்வாறாக பலராலும் பாராட்டப்பட்ட ஈழ தேசம் இன்று கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறது, வாழ வேண்டிய இனம் இன்று வளங்களை இழந்து அல்லலில் அழுகிறது, இந்த குரல் இதுவரை ஐக்கிய நாடுகளின் செவிகளில் ஒலித்தும் பாராமுகமாக இருந்து வருகிறதே எதனால் என்று அறிந்துகொள்ளுங்கள், காலகாலமாக தமிழன் அடிமையாகவே வாழவேண்டும் என்று ஆசை கொள்ளும் வட இந்திய ஆளுமையும் இத்தாலி வரவு இந்தியாவின் மருமகள் என்று மார்தட்டி கொள்ளும் சோனியாவின் தணியாத ஆசையுமே இன்று ஈழம் சந்தித்து கொண்ட பேரவலத்திற்கு காரணம் .
என் இனிய தமிழினமே முள்ளிவாய்க்கால் முடிவல்ல மண்ணோடு மண்ணாக இந்திய இலங்கை கூட்டுப்படையினரால் உயிரோடு புதைக்கப்பட்ட தமிழினத்திற்கு தயவு செய்து யாரும் அஞ்சலி செலுத்தவேண்டாம் அப்படி அஞ்சலியோ வீரவணக்கமோ செலுத்த நினைப்பதாக இருந்தால், உண்மையில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் , கொடு வாளையும் எடுக்க வேண்டாம் எடுக்கும் நம் குல வீரர்களுக்கு தோள் கொடுத்தாலே போதுமானது, வீணர்களின் வீண் பேச்சுக்கு விலை போகாமல் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தை உலகின் அத்துணை சமூகத்திற்கும் எடுத்து சொல்ல வேண்டும்,
ஐ நா உயர் பதவியில் இருக்கும் நல்மனம் கொண்டவர்கள் பலரின் விடா முயற்சியால் ஐ நா செயலர் நாயகம் அவர்கள் தற்பொழுது இலங்கையின் கொடுஞ்செயலை கண்டித்ததோடு ஐ நா தூ தூதுவர்களையும் அனுப்பவுள்ளதாக கூறியுள்ளது மகிழ்ச்சி தரும் தகவலே, ஆனால் இன்று இதற்கும் பங்கம் வைக்கும் விதமாக இந்திய வெளியுறவு செயலர் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார், முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் போது இந்திய சர்வதேச கடல் எல்லை பகுதியில் அமெரிக்க கடற்படை நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் ஈழத்தின் அழிவை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை, இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் அவர்கள் இலங்கை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பின்னரே அமெரிக்க பயணம் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது,
இதுவரை இந்திய செயலர்களின் இந்திய பயணங்கள் குறித்து உலகம் அறிந்த கருத்து என்னவென்றால் ஒரு முறை கூட போர்நிறுத்தம் பற்றி அவர்கள் பேசவில்லை , போரை எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவந்து பிரபாகரனின் உயிரையும் பறிக்க வேண்டும் இதை தவிர தமிழினத்திற்காக சிறிதளவும் இசைவாக நடக்கவில்லை காரணம் போரை இந்திய உளவு துறையின் துணையோடு நடத்தியவர்கள் இந்திய இராணுவமே, ஈழத்தின் விடிவு இந்தியாவின் கையில் என்று இனியும் ஏமாறவேண்டாம், இன்று இந்தியாவின் நிலைமை கவலைக்கிடமானது, மாயை உலகமாகவே இந்தியா இன்று திகழ்கிறது.
வடக்கே சீனாவின் ஆக்கிரமிப்பு மேற்கே பாகிஸ்தான் , கிழக்கே மாவோயிஸ்ட் மற்றும் பங்களாதேஷ் என்று யாவருமே இந்தியாவை சட்டை செய்வதில்லை எனவேதான் அறிவு சார் சான்றோர்களே போராட்டத்திற்கு வலு சேர்ப்போம் , ஈழத்தை வளமாக்க ஆக்க பூர்வமான செயல்களில் மட்டுமே ஈடுபடுவோம், தமிழகத்தின் தலைவர்களை ஒன்றிணைத்து ஈழபோராட்டத்திற்கு வலு சேர்ப்போம் , அதற்குமுன் ஈழத்தில் அரசியல் தலைவர்களை ஒன்றிணைப்போம் , இல்லையேல் ஈழ அரசியல் தலைவர்களை ஒட்டு மொத்தமாக புறந்தள்ளுவோம்,
தேசிய தலைவன் இருக்கிறார் அதனை மனதில் நிறுத்தி அடுத்த கட்ட ஈழ போராட்டத்தில் பங்கு கொள்ள தயாராவோம், தேசிய தலைவர் இறந்ததாக இலங்கை இந்தியாவுக்கு சான்று வழங்கட்டும் அதுவரை சற்று பொறுத்திருங்கள் , அதற்குப்பின் தமிழ் ஈழத்தின் வரலாறு எப்படி எழுதப்படுகிறது என்று உலகம் தெரிந்து கொள்ளும் .




Wednesday, March 17, 2010

விடுதலைப்புலிகளின் ஆயுதப் போரும் தமிழ் மக்களுக்கான அரசியல் நோக்கும்


சர்வதேச சமூகம் தமிழரின் "இராஜதந்திர வழியூடான உரிமைப்போருக்கு ஒத்துழைப்பும் பேராதரவும் நல்க வேண்டும்". தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போரும் தமிழ் மக்களுக்கான அரசியல் நோக்கும்.

ஓர் உண்மை விளக்கம்

"தமிழ் மக்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்று ஆய்வு செய்தால் அதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதைக் கண்டு கொள்ளலாம். இனக்கொலை வடிவம் எடுத்த மிருகத்தனமான ஒடுக்கு முறையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழியில்லை என்பதாலும், சமாதான வழிமுறை தழுவிய ஜனநாயகப் போராட்டங்கள் ஈவிரக்கமின்றி ஆயுத வன்முறையால் அடக்கப் பட்டதாலும், அரசியலமைப்பு வழிகளும் நாடாளுமன்றக் கதவுகளும் இறுக மூடப்பட்டதாலும், சமாதானப் பேச்சுக்கள் மூலம் சமத்துவத்தையும் நீதியையும் வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதாலுமே தமிழர்கள் ஆயுதமேந்தத் துணிந்தார்கள்.
பல தசாப்தங்களாக சிங்கள இனவாதம் இழைத்த அநீதிகளதும் கொடுமைகளதும் வரலாற்றுக் குழந்தையாகவே தமிழ் மண்ணில் ஆயுதப் போர் பிறப்பை எடுத்தது".

தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகத்தை, 37 ஆண்டுகால விடுதலைப் பயணத்தை உறுதிமிக்க ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாக, கோழைத்தனமானதாக, நம்பிக்கைத்துரோகம் மிக்கதாக சித்தரித்தது சர்வதேச அரசியல் அரங்கில் சிறி லங்கா அரசு, தமிழ் விரோத சக்திகள் மேற்கொண்டு வரும் விசமப் பிரச்சாரத்திற்கு ஆப்பு வைக்கும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் அரசியல் பரப்புரை பிரிவால் வெளியிடப்படும் விரிவான கொள்கை விளக்க அறிக்கையின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றுத் தோற்றம் வளர்ச்சி பற்றியும், அடிப்படையான அரசியல் குறிக்கோள் பற்றியும் இவ்வறிக்கை எடுத்து விளக்குவதுடன் மகிந்த அரசின் இனவாத அரசியற் தந்திரங்களையும் அந்தரங்க சூழ்ச்சிகர நோக்கங்களையும் அம்பலப்படுத்துகின்றது.

முன்னுரை
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் வன்முறையின் எரிமலையாக இருந்து வருகின்றது இலங்கை. இத்தீவு சுதந்திரம் பெற்றதையடுத்து தமிழ்சிங்கள தேசங்கள் மத்தியில் எழுந்த முரண்நிலை படிப்படியாக முறுகலடைந்து, ஒரு முழு அளவிலான போராக விரிவாக்கம் கண்டிருந்தது. தமிழர் தேசத்தின் சுதந்திர இயக்கமாக விடுதலைப் புலிகளும் சிங்களத்தின் அடக்குமுறைச் சக்தியாக சிறி லங்கா அரசும் இப்போரில் பிரதான பாத்திரங்களை வகிக்கின்றன. நிலையான தேசிய இராணுவங்களைக் கொண்டிருக்கும் இவ்விரு தரப்பினர் மத்தியிலும் நீண்ட காலமாகக் கடும் போர் நிகழ்ந்து வந்திருக்கிறது.
இப்போரின் விளைவுகள் கொடூரமானவை. ஒரு ஆக்கிரமிப்பு யுத்தமாக தமிழரின் தாயக மண்ணில் இப்போர் நிகழ்ந்து முடிந்ததால் போரில் கொடிய விளைவுகளுக்கு தமிழ் மக்களே முகங் கொடுத்து வருகின்றனர். இந்த நீண்ட கொடிய யுத்தம் இது வரை எழுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைப் பலி கொண்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக பல இலட்சம் மக்களை இடம்பெயர வைத்துள்ளது. இப்போர் இப்பொழுது என்றுமில்லாத வகையில் தீவிரமடைந்து சொந்தமண்ணிலேயே எம்மக்களை அநாதைகளாக்கியுள்ளது. உயிரழிவும் பொருளழிவுமாக நாளுக்கு நாள், இப் போர் பெரும் நாசத்தை விளைவித்து ஒரு இனத்தின் அடையாளத்தை சிதைத்து ஏதிலிகளாக்கி வதை முகாங்களுக்குள் சிறைப்படுத்தி வைத்துள்ளது.
இந்தப் போர் ஏன் நிகழ்ந்தது? தமிழரின் அரசியல் பிரச்சினை ஆயுத வன்முறை வடிவம் எடுத்ததற்கான காரணங்கள் என்ன? விடுதலைப் புலிகள் எதற்காக ஆயுதமேந்திப் போராடினார்கள்? இந்தக் கேள்விகளுக்கு சிறி லங்கா அரசு கொடுக்கும் விளக்கம் விசித்திரமானது. பரந்த பரிமாணத்தையுடைய மிகவும் சிக்கலான ஒரு நெருக்கடியை வெறும் பயங்கரவாப் பிரச்சினையாக எளிமைப்படுத்தி, மலினப்படுத்த முனைகின்றது அரசு. சிறி லங்காவின் இந்த அபத்தமான தர்க்கத்தில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகவும் அவர்களது அரசியல் இலட்சியம் அராஜகவாதமாகவும் சித்தரிக்கப் படுகின்றது. இந்தச் சித்தரிப்பின் அடிப்படையிலேயே அரசின் தீர்வும் அதற்கான அணுகுமுறையும் அமையப் பெற்றிருக்கின்றது. முழு அளவிலான போர் மூலம் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் பயங்கரவாதம் ஒழிந்து விடும் என்பதும் பயங்கரவாதம் ஒழிந்து விட்டால் தமிழரின் பிரச்சினை தானாகவே தீர்ந்து விடும் என்பதும் அரசின் நிலைப்பாடு, இந்தக் குருட்டுத்தனமான அணுகுமுறையின் அடிப்படையில் சிறி லங்கா அரசு செயற்பட்டு வருகின்றது.
தமிழரின் தேசியப் போராட்டத்தை பயங்கரவாதப் பிரச்சினையாக உருவகப்படுத்தி உலகத்தை நம்ப வைக்கும் நோக்குடன், மிகவும் நுட்பமாக, திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை சிறி லங்கா அரசானது அனைத்துலக ரீதியாக மேற்கொண்டு வருகின்றது. மேற்குலகமானது பயங்கரவாதத்திற்கு அஞ்சுகின்றது. அதனை ஒரு உலகளாவிய அச்சுறுத்தலாகவும் கருதுகின்றது. மேற்குலகின் இவ்வுணர்வலைகளை நன்கு அறிந்த சிறி லங்கா அரசானது. தனது நாடும் இதே அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க முனைகின்றது. உள்நாட்டில் தலைவிரித்தாடும் இனச் சிக்கலை சர்வதேசப் பயங்கரவாதமாக பூச்சாண்டிக் காட்டுவதில், சிறி லங்காவின் வெளிநாட்டுத் தூதரகங்கள் இரவுபகல் பாராது தீவிரமாகச் செயற்படுகின்றன. அரசியல் ஏமாற்றுவித்தையில், தமிழினத் துரோகத்தை சாணக்கியமாக செய்யும் தமிழ் அமைச்சர்களின் வழிநடத்தலில், இந்த விசமப் பிரச்சாரம் உலக ரீதியாக மேற் கொள்ளப்படுகின்றது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தமிழருக்கு எதிராகத் தமிழரின் தாயகத்தில் நிகழ்த்தப்படும் தமிழின அழிப்புக்கு அனைத்துலகின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்று விடுவது தான் சிறி லங்காவின் நோக்கம். இதனால், இந்தப் இன அழிப்புச் செயற்பாட்டுக்கு சிறி லங்கா அரசு கொடுக்கும் விளக்கம் வினோதமானது. சிறி லங்காவின் ராஜரீக மொழியில் இப்போர் உன்னதமானது. சமாதானத்தை நோக்காகக் கொண்டது. பயங்கரவாதப் பிடியிலிருக்கும் தமிழருக்கு விடுதலையைத் தேடிக் கொடுக்கும் உயரிய இலட்சியத்தைக் கொண்டது. இவ்விதம் மகிந்த அரசு மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரமானது தமிழரின் போராட்டம் பற்றி, குறிப்பாக நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் பற்றி சர்வதேச அரசியல், ராஜதந்திர அரங்கில் பெரும் குழப்பத்தையும் தப்பபிப்பிராயத்தையும் எழுப்பியுள்ளது. அத்துடன், இலங்கைத் தீவில் நீண்ட முடிவில்லாத கதையாக அரசியல் வன்முறையும் அதற்கு எதிரான ஆயுத வன்முறையுமாக தமிழரின் இனப்பிரச்சினை வன்முறைத் தீயாகக் கொழுந்து விட்டு எரிகின்றது.
இந்த வன்முறைச் சூழலில் தமிழரின் அரசியல் போராட்ட வரலாறு பற்றி தெளிந்த – ஆழமான பார்வை இல்லாமல் தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் புரிந்து கொள்வது சிரமமானது. இத்தகைய சிக்கலான நிலைமையில் சிறி லங்கா அரசும் அரசியல் மெய்நிலையைத் திரிபுபடுத்திக் கூறிவருவதால், தமிழரின் சுய நிர்ணய உரிமைக்காக 37 ஆண்டுகாலம் உயிர்த்தியாகம் புரிந்து போராடிய சுதந்திர இயக்கம் பற்றி வெளியுலகத்தில் மட்டுமன்றி இப்போராட்டத்தை நேசித்த ஒவ்வொருவர் மத்தியிலும் குழப்பமும் தவறான மதிப்பீடுகளும் எழுந்துள்ளன.
தமிழரின் ஆயுதப் போராட்டம் அதை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் பற்றி எழுந்துள்ள குழப்ப நிலையைத் தெளிபடுத்தி, சரியான விளக்கங்களைத் தர முனைகின்றது இக் கொள்கை விளக்கக் கட்டுரை. ஆயுதப் போராட்ட இயக்கம் தோற்றங் கொண்ட வரலாற்றுப் புற நிலைகளை எடுத்து விளக்கும் அதேவேளை, இராணுவ அடக்குமுறைக்கும் இனக் கொலைக்கும் எதிராக ஆயுதமேந்திப் போராடும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என நாம் வாதிடுகின்றோம். விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என முத்திரை குத்த முயற்சிக்கும் சிறி லங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்குப் பதிலளிப்பதுடன் ஆயுதப் போராட்டமானது தமிழரின் தன்னாட்சி உரிமைக்கான அரசியற் போராட்டம் என்பதை எடுத்து விளக்குகின்றோம். ஒட்டுமொத்தத்தில், அரசியற் சுதந்திரமும் தன்னாட்சியும் வேண்டி நிற்கும் தமிழரின் போராட்ட நிலைப்பாட்டை இந்த அரசியல் ஆவணம் தெளிவாக முன்வைக்கின்றது.
தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்று ஆய்வு செய்தால், அதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதைக் கண்டு கொள்ளலாம். இனக் கொலை வடிவம் எடுத்த மிருகத்தனமான ஒடுக்குமுறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழியில்லை என்பதாலும் சமாதான வழிமுறை தழுவிய ஜனநாயகப் போராட்டங்கள் ஈவிரக்கமின்றி ஆயுத வன்முறையால் அடக்கப்பட்டதாலும் அரசியலமைப்பு வழிகளும் நாடாளுமன்றக் கதவுகளும் இறுக மூடப்பட்டதாலும், சமரசப் பேச்சுக்கள் மூலம் சமத்துவத்தையும் நீதியையும் வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதாலுமே தமிழர்கள் ஆயுதமேந்தத் துணிந்தார்கள். பல தசாப்தங்களாக சிங்கள இனவாதம் இழைத்த அநீதிகளதும் கொடுமைகளதும் வரலாற்றுக் குழந்தையாகவே தமிழ் மண்ணில் ஆயுதப் போர் பிறப்பை எடுத்தது.

தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள்?

ஆயுதம் தரித்த விடுதலை இயக்கத்தின் எழுச்சி பற்றியும் வளர்ச்சி பற்றியும் ஆழமாக அறிந்து கொள்வதாயின் தமிழ் மக்களது தன்னாட்சி உரிமைப் (சுயநிர்ணய உரிமை) போராட்டத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்குடனேயே அதனை ஆய்வு செய்ய வேண்டும். தமிழரின் தன்னாட்சி உரிமைப் போராட்டமானது அரை நூற்றாண்டு கால படிமுறை வளர்ச்சியுடைய வரலாற்றைக் கொண்டது. அரசின் அடக்குமுறையும் அதற்கு எதிரான தமிழரின் கிளர்ச்சிப் போராட்டமுமாக இந்த வரலாறு விரிகின்றது. ஆரம்ப காலகட்டங்களில் தமிழரின் போராட்டமானது அமைதி வழியில் அமைந்தது, சாத்வீக, சனநாயகப் போராட்ட வடிவங்களாக எழுச்சி பெற்றது ஆனால், காலப் போக்கில் இராணுவ அடக்குமுறை தீவிரமடைந்து இனக்கொலைப் பரிமாணம் பெற்ற போது, தமிழரின் உரிமைப் போராட்டம் ஆயுதப் போராக வடிவம் எடுத்தது.
1948 இல் பிரித்தானிய காலணித்துவம் இலங்கைத் தீவுக்குச் சுதந்திரம் வழங்கி ஆட்சி அதிகாரத்தைப் பெரும்பான்மைச் சிங்களவரிடம் ஒப்படைத்த காலத்திலிருந்து தமிழருக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை தொடங்கியது.
அன்றிலிருந்து மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய சிங்கள அரசாங்கங்கள் திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட இன ஒடுக்குதல் சட்டங்களும் நடவடிக்கைகளும் தமிழரின் மொழியுரிமையை, கல்வியுரிமையை, வேலைவாய்ப்புரிமையைப் பறித்தெடுத்தன. படிப்படியாகத் தீவிரமடைந்த அரசின் ஒடுக்குமுறையானது தமிழரின் சமூக பொருளாதார வாழ்வை ஆழமாகப் பாதித்தது. இது ஒருபுறமிருக்க அரசினால் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் வரலாற்று மண்ணை பெருமளவில் ஆக்கிரமித்ததுடன் சனத்தொகை விகிசாரத்தை மாற்றியமைத்து தமிழரின் பாரம்பரியப் பகுதிகளில் தமிழ் மக்களைச் சிறுபான்மையினராக்கியது. இவ்விதம் சிங்கள அரசின் ஒடுக்குமுறையானது தமிழரின் இன அடையாளங்களையே அழித்து வரும் நாசகார நோக்குடையதாக அமைந்தது.
சிங்கள அரசின் ஒடுக்குமுறை மோசமடைந்து தமிழரின் தேசிய தனித்துவத்திற்கு ஆபத்து எழுந்த சூழ்நிலையில் தமிழ் நாடாளுமன்ற அரசியற் தலைமை, வெகுசனப் போராட்டங்களில் குதித்தது. காந்தியின் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டி சாத்வீகப் போராட்டங்களை நடத்தியது. அறுபதுகளின் ஆரம்பத்தில் நிகழ்ந்த சத்தியாக்கிரகப் போராட்டமானது. சமுத்திரமாக சனங்களை ஈர்த்து அரசுக்கு எதிரான வெகுசனக் கிளர்ச்சியாக வெடித்தது. தேசிய எழுச்சியாக விஸ்வரூபம் எடுத்த தமிழரின் அமைதி வழிப் போராட்டங்களை சிங்கள அரசு மனிதாபிமானத்துடன் அணுகவில்லை. மாறாக இராணுவ வன்முறையைப் பிரயோகித்து மிகவும் மிருகத்தனமாக ஒடுக்கியது.
அகிம்சை வழி தழுவிய அறப்போரின் ஆன்மீகப் பெறுமானத்தை சிங்கள இனவாதம் உணர்ந்து கொள்ளவில்லை என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டனர். மனிதாபிமானமற்ற எதிரியின் ஆயுத வன்முறையை மென்முறைப் போரினால் எதிர்கொள்ள முடியாது என்பதையும் அறிந்து கொண்டனர். இதனால், தமிழ் மக்களுக்கு சாத்வீகப் போராட்டங்களில் நம்பிக்கை தளர்ந்தது. நாடாளுமன்ற அரசியல் முறையாலும் பயன் ஏதும் ஏற்படவில்லை. அது பெரும்பான்மையோரின் கொடுங்கோன்மையாக விளங்கியது. இந்த இக்கூட்டான நிலையில் வேறு வழி தெரியாத அன்றைய தமிழ்த் தலைமை சிங்களப் பேரினவாதத்துடன் பேச்சுக்களை நடத்திச் சமரசங்காண முனைந்தது. சமாதானப் பேச்சுக்கள் நடந்தன. இணக்கப்பாடுகள் காணப்பட்டன. ஆனால், தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை சிங்கள பௌத்த பேரினவாதம் கடுமையாக எதிர்த்தது. இந்த எதிர்ப்புக்கு அஞ்சிய சிங்களத் தலைமைகள் ஒப்பந்தங்களை முறித்தன. உடன்பாடுகளைக் கிழித்து எறித்தன.
1972 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த அரசியல் அமைப்புத் திட்டமானது தமிழருக்கு எதிரான அரசின் அடக்குமுறையின் சிகரமாக அமைந்தது. இந்த அரசியல் யாப்பு சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் முதன்மையளித்து, சிங்கள. பௌத்த பேரினவாதத்தைச் சட்டரீதியாக நிறுவனப்படுத்தியது. அத்துடன் ஒற்றையாட்சி அரசியல் மூலம் தமிழ்த் தேசத்தை ஓரங்கட்டியது. இந்த நிகழ்வானது தமிழரின் அரசியற் போராட்டத்தில் ஒரு புரட்சிகரமான அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வந்தது.
இந்தப் பிரத்தியேக வரலாற்றுச் சூழலில் தான் தமிழ் மண்ணில் ஆயுதப் போராட்ட இயக்கம் பிறப்பை எடுத்தது. அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அரசியற் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் பிறந்தது. தமிழ் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற வக்கிர உணர்வுடன் சிங்கள அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையின் எதிர்வினையாகவே ஆயுதம் தரித்த புரட்சி இயக்கம் உருப்பெற்றது. எனவே, தமிழரின் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் விரிவாக்கமாகவும் வரலாற்று வளர்ச்சியாகவுமே ஆயுதப் போராட்டத்தைக் கொள்ள வேண்டும்.
தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்று ஆய்வு செய்தால் அதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதைக் கண்டு கொள்ளலாம். இனக்கொலை வடிவம் எடுத்த மிருகத்தனமான ஒடுக்குமுறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழியில்லை என்பதாலும், சமாதான வழிமுறை தழுவிய ஜனநாயகப் போராட்டங்கள் ஈவிரக்கமின்றி ஆயுத வன்முறையால் அடக்கப்பட்டதாலும், அரசியலமைப்பு வழிகளும் நாடாளுமன்றக் கதவுகளும் இறுக மூடப்பட்டதாலும், சமரசப் பேச்சுக்கள் மூலம் சமத்துவத்தையும் நீதியையும் வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதாலுமே தமிழர்கள் ஆயுதமேந்தத் துணிந்தார்கள். பல தசாப்தங்களாக சிங்கள இனவாதம் இழைத்த அநீதிகளதும் கொடுமைகளதும் வரலாற்றுக் குழந்தையாகவே தமிழ் மண்ணில் ஆயுதப் போர் பிறப்பை எடுத்தது.

தன்னாட்சி உரிமைக்கான ஆயுதப் போராட்டம்
1972 ஆம் ஆண்டு எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழரின் அரசியற் போராட்ட வடிவத்தில் அடிப்படையான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தமிழரின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக ஆயுதம் தரித்த கெரில்லா இயக்கம் ஒன்று தோற்றம் எடுத்து அரசின் வன்முறைக்குச் சவால் விடுத்து தமிழரின் அரசியல் உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராடத் துணிந்தது. விடுதலைப் புலிகளின் தோற்றத்துடனும் வளர்ச்சியுடனும் ஆயுதப் போராட்டமானது தமிழரின் அரசியற் போராட்டமாக உயர் பரிமாணம் பெற்று அமைப்பு ரீதியாகப் பலம் பெற்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டமானது தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியற் கொள்கைத் திட்டத்தில் அமையப் பெற்றிருக்கின்றது. தமிழ் மக்களது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதே விடுதலைப் புலிகளது அரசியற் கொள்கையின் அடிப்படை இலட்சியமாகும். தன்னாட்சி உரிமைக் கோட்பாடானது ஒரு தேசிய இனமான மக்கள் சமூகத்தின் அரசியற் சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் தமது தேசிய இனக் கட்டமைப்பையுடைய மக்கள் சமூகமாக அமையப் பெற்றிருக்கின்றார்கள் என்பதும் அவர்களுக்கு வரலாற்று ரீதியான தாயகம் உண்டென்பதும் இத் தாயகமானது வடக்கு கிழக்கு மாகாணங்களடங்கிய தொடர்ச்சியான நிலப்பரப்புடையது என்பதும் விடுதலைப் புலிகளது நிலைப்பாடாகும். தமிழர்களுக்கு ஒரு தனித்துவமான தாயகப் பூமியும், தனிச் சிறப்புடைய மொழியும், பண்பாடும், பொருண்மிய வாழ்வும், மூவாயிரம் ஆண்டுகளாக விரியும் நீண்ட வரலாறும் இருப்பதால் அவர்கள் ஒரு தேசியக் கட்டமைப்பிற்கான சகல பண்புகளையும் கொண்டு விளங்கும் ஒரு மக்கள் சமூகமாகும். இவ்விதமான ஒரு தேசிய மக்கள் சமூகம் என்ற வகையில் அவர்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்துடையவர்கள். இத் தன்னாட்சி உரிமை என்பது ஒரு மக்கள் சமூகம் தனது அரசியற் தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரமாகும். 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்கே உரித்தான தன்னாட்சி உரிமையைப் பிரகடனம் செய்து ஒரு சுதந்திரமான தனியரசை அமைப்பதற்குப் போராட முடிவெடுத்தார்கள் என்பதும் விடுதலைப் புலிகளது நிலைப்பாடாகும். தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் தேசிய விடுதலைப் போராட்டம் அமைந்திருக்கின்றது.
தமிழர் தேசத்திற்கு சுதந்திரம் வென்றெடுக்கும் புலிகளின் இலட்சியமானது. தனிப்பட்ட முறையில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக அனைத்துத் தமிழ் மக்களினதும் ஏகோபித்த அபிலாசையை முழுத் தேசத்தினதும் விருப்பாற்றலை நிறைவு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அடக்குமுறைக்கு ஆளாகியிருந்த தமிழினம் சனநாயக வழிமுறை வாயிலாக தனக்கு உரித்தான தன்னாட்சி உரிமையைப் பிரயோகிக்க முடிவெடுத்தது. இத்தன்னாட்சி உரிமையானது ஐ.நா. சாசனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய பொது மனித உரிமை விதியாகும். ஐ.நா. சாசனத்து நியமங்கள் தன்னாட்சி உரிமைக்கு கீழ்க்கண்ட வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றது.
எல்லா மக்கள் சமூகத்தினரும் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் இந்த உரிமையின் கீழ் தமது பொருண்மிய, சமூக, பண்பாட்டு வாழ்வை மேம்படுத்தும் வழிமுறைகளை அவர்கள் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம்.
ஒரு பொதுசன வாக்கெடுப்பாக நிகழ்ந்த 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது அரசியற் தகுநிலையை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அதாவது பிரிந்து சென்று தமது தாயகத்தில் இறைமையுடைய ஒரு தனியரசை அமைப்பதென முடிவெடுத்தார்கள். தனியரசை அமைத்துத் தருவதாக உறுதியளித்து தமிழ் மக்களிடமிருந்து ஒரு தெளிவான ஆணையைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தது. ஆனால், விடுதலைப் புலிகளோ தமிழினத்தின் ஆணையை ஏற்று தமிழரின் தேசிய அபிலாசையை நிறைவுசெய்யும் நோக்குடன் தன்னாட்சி உரிமைக்காக இரத்தம் சிந்திப் போராடி 2009 மே 17 ஆம் திகதியுடன் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து உலக ஒழுங்குக்கு அமைவாக புதிய அணுகுமுறைகளுடன் இராஜதந்திர வழிமுறைகளுக்குள் பிரவேசித்து வருகின்றார்கள்.
சிறி லங்கா அரசானது தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை விடாப்பிடியாக மறுத்து வருகின்றது. தமிழரை ஒரு மக்கள் சமூகமாகவும் ஏற்க மறுக்கின்றது. பல்லினக் கோட்பாட்டை வலியுறுத்தும் சிங்கள ஆட்சிபீடம் தமிழரை ஒரு சிறுபான்மை இனக் குழுவாகச் சித்தரித்து தமிழரின் தாயகத்தையும் தேசியத்தையும் நிராகரித்து வருகின்றது. அதேசமயம் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்து தன்னாட்சி உரிமைக் கோரிக்கையையும் சட்டவிரோதமானதாக ஆக்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க தமிழர்கள் மீது முழு அளவிலான போரை ஏவி விட்டு அவர்களது அரசியற் சுதந்திரப் போராட்டத்தையும் நசுக்கி அவர்களை இலங்கைத் தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அத்துடன் தமிழரின் தன்னாட்சி உரிமையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளை இனவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் என அவதூறாகக் குற்றஞ்சாட்டியும் கண்டித்தும் வருகின்றது.

சர்வதேச அங்கீகாரம்

சர்வதேச ராஜதந்திர அரங்கில் சிறி லங்கா அரசு மேடையேற்றி வரும் மிகவும் அபாண்டமான பொய்ப் பிரச்சாரத்தின் பின்னணியில் தமிழ் மக்களும் தமது தன்னாட்சி உரிமைப் போராட்டத்தின் நியாப்பாடுகளை விளக்கி உலகெங்கும் தீவிரமான பரப்புரைகள் செய்து வருகின்றனர். இனக்கொலை வடிவத்தில் பேயுருவம் எடுத்துள்ள அரசப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் உரிமை தமக்குண்டு எனவும் அவர்கள் வாதாடி வருகின்றார்கள். ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைக்கு அங்கீகாரம் வேண்டி தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் சர்வதேச பிரச்சார இயக்கம் ஐ.நா. சபையின் முக்கிய நிறுவனமான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த பல ஆண்டுகளாக சூடுபிடித்து வருகின்றது.
தமிழரின் தன்னாட்சி உரிமைக் கோரிக்கை நியாயமானதும் சட்டரீதியானதுமென ஐ.நா. அந்தஸ்துப் பெற்ற அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் வாதாடி வருகின்றன. தமிழரின் கோரிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அங்கீகரிக்க வேண்டுமெனவும் இந் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஐ.நா. மனித உரிமைக்குழுவின் 6 ஆவது மாநாட்டில் அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் பல கூட்டாக விடுத்த அறிக்கை ஒன்றில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.
காலனித்துவம் அல்லது அந்நிய ஆதிக்கம் அல்லது அந்நியப் படையெடுப்பின் கீழ் வாழும் மக்களின் தன்னாட்சி உரிமையும் அதன் பிரயோகமும் என்ற தலைப்பில் நிகழ்ந்த இம்மாநாட்டில் விடுக்கப்பட்ட இக்கூட்டறிக்கை கீழ்க்கண்டவாறு எடுத்துக் கூறுகின்றது.
வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக தெளிவாக வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகளையுடைய பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்கள் பழம்பெரும் மரபும் வரலாறும் சீரிய பண்பாடும் 2500 ஆண்டுகளுக்கு மேலாக மூலவேர் பதித்திருக்கும் ஒரு உயிருள்ள மொழியும் அவர்களுக்கு உண்டு. தெளிவாக வரம்பிடப்பட்ட ஒரு மாநிலத்தில் வாழ்வால் ஒன்றுபட்ட இனவுணர்வுப் பிரக்ஞையுடன் ஒரு சமூகக் கட்டமைப்பாக வாழும் இம்மக்கள் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி வருகின்றார்கள். இவர்கள் ஒரு மக்கள் சமூகமாக அமையப் பெற்றிருக்கின்றார்கள். இம் மக்களுக்கு தன்னாட்சி உரிமையுண்டு இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களை ஒரு மக்கள் சமூகமாக ஏற்று அவர்கள் தமது அரசியல் தகுநிலையை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளவர்கள் என்பதைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய ஒரு அவசரத் தேவை இன்று எழுந்துள்ளது.
இலங்கையின் வடக்குக் கிழக்கு மாநிலத்தைத் தமிழரின் தாயகமாக ஏற்று தமிழரின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரி ஐ. நா.வுக்கு அறிவுரை வழங்கும் தகுதியுடைய அரசு சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் கூட்டாக விடுத்த இவ்வறிக்கையானது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச அரங்கில் கிடைத்த ஒரு வெற்றி என்பதில் ஐயமில்லை தமிழரின் சர்வதேசப் பிரச்சார இயக்கத்திற்கும் இதுவொரு முன்னேற்றகரமான திருப்பமாகவும் அமைந்தது.
தமிழரின் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இன்று வரை பாரதூரமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது உண்மை. எனினும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழரின் நியாயபூர்வமான தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய உருப்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், தமிழருக்கு எதிரான சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப் போர் தீவிரமடைந்து தமிழரின் நிலை மோசமடைந்து இறுதியில் மாபெரும் மனித பேரவலமாக எழுந்ததால் தமிழரின் உரிமைக் குரல் ஐ.நா. அரங்குகளில் மேலோங்கி வருவதைக் காணலாம்.
ஆரம்பத்தில் தன்னாட்சி உரிமைக் கோட்பாடானது. காலனித்துவ ஆட்சிக்கு எதிராக தேச சுதந்திரம் கோரி நடாத்தப்பட்ட விடுதலைப் போராட்டங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. ஆனால், சமகால வரலாற்றுச் சூழலில் இக்கோட்பாடானது. பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் உரிமைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக இனவாத அரசுகளின் அடக்குமுறை அல்லது அந்நிய ஆதிக்கம் அன்றி அந்நிய படைபெயடுப்பு போன்ற ஒடுக்கு முறைகளைச் சந்தித்து நிற்கும் மக்களுக்கும் இந்த உரிமை உரித்தாகின்றது. இங்கு அந்நிய ஆதிக்கம் என்பது ஒரு தேசத்தின் மீது இன்னொரு தேசம் திணிக்க முயலும் ஆதிக்கத்தையே குறிக்கின்றது.
தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி நிற்கின்றார்கள். அந்நிய தேசமான சிங்களத்தின் இராணுவ ஆதிக்கத்திற்கும் படையெடுப்பிற்கும் உட்பட்டு நிற்கின்றார்கள். ஆயுத பலத்தால் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அவர்களை சிங்கள இராச்சியத்துடன் பலவந்தமாக இணைத்து விட மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் விடாப்பிடியாக முனைந்து வருகின்றன என்பது வரலாற்று உண்மை. இந்த வரலாற்று உண்மை சந்தேகத்திற்கு இடமின்றி ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றது. அந்நிய ஆதிக்கத்தையும் இனவாத அடக்குமுறையையும் தெளிவுற நிரூபிக்கும் உண்மைச் சம்பவம் இது. இந்த வகையில் சர்வதேசச் சட்டத்தின் நியமங்களையும் வரையறைகளையும் தமிழர்கள் பூர்த்தி செய்வதால் அவர்களுக்கு தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தும் தகுதியுண்டு. தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஆயுதம் ஏந்திப் போராடும் உரிமையும் உண்டு. இன்னொரு வகையில் சொல்லப் போனால் தமிழர்களது ஆயுதப் போராட்டமானது சர்வதேச சட்டத்தின்படி ஒரு நியாயப் பூர்வமான அரசியற் போராட்டமாகும்.

விடுதலை புலிகள் ஒரு விடுதலை இயக்கம்

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டும் இலட்சியத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கமானது சிங்கள அரசின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதந்தரித்த விடுதலைப் போரை கடந்த 37 ஆண்டுகளாக நடத்தி வந்தது. தன்னாட்சி உரிமைக் கோரிக்கையில் தளராத உறுதிபூண்டு நீண்டகாலமாக தமிழரின் அரசியல் சுதந்திரத்திற்காக இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடி வந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கமானது ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற தகுதியைப் பெற்றிருக்கின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் உதயம் பெற்று மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழரின் போராட்ட சக்தியாக இரத்தம் சிந்தும் இலட்சியப் போர் புரிந்து – அதியுயர் அர்ப்பணிப்புகளைச் செய்து வருவதால் தமிழீழ மக்கள் மத்தியிலும் அனைத்துலக தமிழர் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் பரந்துபட்ட நல்லாதரவைப் பெற்றிருக்கின்றது. தமிழரின் தேசிய இனப்பிரச்சினை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றமைக்கு புலிகளின் விடுதலைப் போராட்டமே பிரதான காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஒரு சிறிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்காரக் குழு என்றும் புலிகள் இயக்கம் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதாகவும் சிறி லங்கா அரசு அடிக்கடி வலியுறுத்தும் கருத்து உண்மைக்கு மாறான விசமப் பிரச்சாரமாகும். விடுதலைப் புலிகளுக்கு பரந்துபட்ட மக்களின் நல்லாதரவுண்டு என்பதை நிரூபிப்பதற்கு அவர்களது நீண்ட 35 வருடகால அரசியல் இராணுவ வரலாறே போதுமானது. ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் கெரில்லா இயக்கங்கள் மக்கள் ஆதரவின்றி நிலைத்திருக்க முடியாது என்பது வரலாற்றில் பதிவாகிய உண்மை. ஒரு நீண்ட வரலாறும், பலம்மிக்க இராணுவ சக்திகளுடன் (இந்திய இராணுவம் உட்பட) தளராத உறுதியோடு போர் நிகழ்த்தும் வல்லமையும் அரசியல் நடவடிக்கைகளில் அலையலையாக சனத்திரளை அணிதிரட்டும் ஆற்றலும், விடுதலைப் புலிகளை ஒரு தேசிய சுதந்திர இயக்கம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியிருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒரு நிலையான இராணுவம் முப்படைப் பரிமாணத்துடன் உருப்பெற்றிருந்தது. பல்லாயிரம் விடுதலைப் போராளிகளைக் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் படையாக அது இயங்கி ஒரு எழுச்சி மிக்க நிழலரசையும் கொண்டிருந்தது. இந்த விடுதலை இராணுவத்திற்கு ஒரு கட்டளைத் தலைமையும் உயர் இராணுவ பயிற்சி வசதிகளும், நவீன படைக்கலன்களும் முப்படைப் பரிமாணத்துடன் பரந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களும் சிங்கள ஆயுதப் படைகளுடன் மரபு வழிப் போரில் சண்டையிடும் வல்லமையும் ஆற்றலும் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளிடம் ஒரு அரசியல் அமைப்பும் உண்டு. அதன் கீழ் சமூக, பொருண்மிய, கல்வி, பண்பாட்டுப் பிரிவுகள் செயற்பட்டன. விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கையும் நீதி பரிபாலனத்தையும் சிவில் நிர்வாக அலகுகளையும் செயற்படுத்தி யிருந்தனர். பல்முகக் கூட்டமைப்பான ஒரு கட்டமைப்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு புறம் ஆயுதப் போராட்டத்தையும் மறுபுறம் அரசியற் போராட்டத்தையும் இன்னொரு புறம் சிவில் நிர்வாகத்தையும் செயற்படுத்தும் இலக்கைக் கொண்டதாக அமையப் பெற்றிருந்தது. அத்தோடு உலகத்தின் தலைநகரங்களில் செயற்படும் ஒரு பரந்த சர்வதேச அமைப்பும் புலிகளிடமுண்டு.
தமிழரின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள சிறி லங்கா அரசு அன்றிலிருந்து இன்று வரை விடாப்பிடியாக மறுத்து வருகின்றது. அவ்விதம் ஏற்றுக் கொள்வது தமிழரின் போராட்டத்தை ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாக அங்கீகரிப்பதாக முடியுமென சிங்கள அரசு அஞ்சுகின்றது. பல தசாப்தங்களாக தமிழர்களின் உரிமைகளைப் பறித்து தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, தமிழருக்கு நீதி வழங்குவதை மறுத்து வரும் ஒரு இனவாத அரசிடம் யாருமே உண்மையையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது. தமிழரின் தேச சுதந்திர இயக்கத்தைச் சிறுமைப்படுத்துவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் இழிவுபடுத்துவதிலுமே சிறி லங்காவின் பாரிய பிரச்சார இயந்திரம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.
சிங்கள ஆட்சியாளரின் குருட்டுத் தனமான இனவாதப் பார்வையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் தமிழரின் சுதந்திரப் போராட்டம் பயங்கரவாதிகளின் போராகவும் திரிபுபடுத்தப்படுகின்றது.
மிகவும் கடுமையான இனவாத நிலைப்பாட்டை எடுத்து விடுதலைப் புலிகளை மிகவும் இழுக்கான வார்த்தைகளில் தூற்றி வந்த போதும் சிங்களத் தலைமைகள் வௌ;வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் புலிகளைத் தமிழரின் அரசியல் இராணுவ சக்தியாக ஏற்று அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருந்தது. திம்புவிலும் டெல்லியிலும் பெங்களூரிலும் கொழும்பிலும் பின் அனைத்துலக நாடுகளின் தலைநகரங்களில் அவ்வரசுகளின் அங்கீகரத்துடன் சிறி லங்கா அரசு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியது. எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி விடுதலைப் புலிகளை தமிழரின் அரசியற் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டே இந்தப் பேச்சுக்களில் சிறி லங்கா பங்குபற்றியது. இவ்விதம் பேச்சுக்களின் போது புலிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் பேச்சுக்கள் முறியும் போது நீக்கப்பட்டு விடுகின்றது. சமாதான காலத்தில் புலிகளை மக்கள் இயக்கமாக அங்கீகரிப்பதும் பின்பு போர்க்காலத்தில் அவர்களைப் பயங்கரவாத இயக்கமாக இழிவுபடுத்துவதும் சிறி லங்காவின் மிகவும் விசித்திரமான கேலிக் கூத்தான அரசியல் நாடகம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்த போதிலும், இச் சர்வதேச சமூகம் தங்கள் நலன்களுக்காக ஒரு இனத்தின் அழிவுக்கு துணைபுரிந்து சிறி லங்காவையும் அதன் இரானுவ மேலாதிக்கத்தையும் ஊக்குவித்து வருகின்றமை வருந்தத்தக்கது.

சிறி லங்கா அரசின் அந்தரங்க நோக்கங்கள்
1983 ஆம் ஆண்டு யூலையில் வெடித்த இனவாதப் பூகம்பத்தில் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தமிழரின் தேசிய இனப் பிரச்சினை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. சிறி லங்காவின் படுபாதகமான மனித உரிமை மீறல்களைக் கண்டு சர்வதேச சமூகம் அதிர்ச்சியடைந்தது. இந்தக் கொடிய இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெரும் தொகையில் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற பிற தேசங்களில் அரசியற் தஞ்சம் புகுந்தனர்.
இதனையடுத்து அபிவிருத்தி கண்ட செல்வந்த நாடுகளின் அக்கறையும் கவனமும் இலங்கைத் தீவின் அரசியல் மீது திரும்பியது. தமிழரின் நிலைகுறித்துக் கவலையடைந்த மேற்குலக நாடுகள் சில சிறி லங்காவிற்கு வழங்கும் நிதியுதவியை மனித உரிமைப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி மனித உரிமையை மேம்பாடு செய்வதன் அடிப்படையில் உதவி வழங்கப்படுமென வலியுறுத்தி வந்தன. ஆயினும் மேற்குலகின் இந்த அழுத்தங்கள் எவ்வித பயனையும் அளிக்கவில்லை. சிறி லங்காவின் ஒடுக்குமுறை ஆட்சியில் எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை. எனினும் தற்போதைய சிங்கள அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்குடன் விசாரணைக் குழுக்களையும் மனித உரிமை ஆணைக்குழுக்களையும், அரசியல் விவகார குழுக்களையும் நியமித்து சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இலங்கைத் தீவானது தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத சட்டத்தின் கீழும் இராணுவ பொலிஸ் கொடுங்கோன்மையின் கீழும் ஆளப்பட்டு வருகின்றது என்பது தான் உண்மை. தென்னிலங்கையில் அரசுக்கு எதிரான சக்திகள் காவல்துறையினரின் பயமுறுத்தல் கைது தடுப்புக்காவல், தாக்குதல் போன்ற கொடுமைகளைச் சந்தித்து வருவதோடு உயிருக்கு பயந்து இலங்கைத்தீவை விட்டு வெளியேறி உலக நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். அங்கு அரசியல் சுதந்திரங்களை நசுக்கிவிட அரசாங்கம் இரும்புக் கரத்தைப் பாவிக்கின்றது. வடகிழக்கில் நிலைமை படுமோசமாக உள்ளது. இங்கு இராணுவ நடவடிக்கைகள் என்ற போர்வையில் தமிழருக்கு எதிராக மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இழைக்கப்படுகின்றன.. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டு கைதுகளும் காவல்வைப்பும் காணாமல் போதலும் சித்திவதையும் பாலியல் வல்லுறவும் கொலைகளுமாக மிகவும் மிருகத்தனமான இராணுவப் பயங்கரவாத ஆட்சி நடைபெறுகின்றது. தமிழர் தாயகத்தில் குறிப்பாக வன்னிமண்ணில் மட்டும் 5000 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளதாக நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமை நிலைமை படுமோசமாகி போருக்குப் பின்னரான வன்முறையும் அடக்குமுறையுமாக இலங்கையில் கொந்தளிப்பான நிலை தாண்டவமாடும் போது, உதவி வழங்கும் நாடுகள் தொடர்ந்தும் சிறி லங்காவுக்குப் பாரிய அளவில் நிதியுதவியை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிதியில் பெரும் பகுதி அரசாங்கத்தின் சமாதானத்திற்கான போருக்கு செலவாகிய நட்டத்தை ஈடுசெய்வதற்கும் கொல்லப்பட்ட காயமடைந்த இராணுவத்தினரின் மறுவாழ்வுக்குமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மனித உரிமையோடு நிதியுதவியைத் தொடர்புபடுத்திய செல்வந்த நாடுகள் அந்த அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தயக்கம் காட்டுவதால் அது மகிந்த அரசாங்கத்திற்கு ஊக்கத்தை அளித்திருப்பதுடன் அவரது கொடூரமான ஒடுக்குமுறை ஆட்சியை நீடிக்கவும் வழிகோலியுள்ளது.
இது ஒரு புறமிருக்க போரினால் எழுந்த மாபெரும் மனித அவலங்களைக் கருத்தில் எடுக்காது. மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சில வெளிநாடுகள் சிறி லங்காவுக்கு தொடர்ந்தும் அழிவு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. உலகத்திடமிருந்து பெருந்தொகையில் நிதியுதவியும் பெருமளவில் ஆயுத உதவியும் குவிந்து வருவதால் உற்சாகம் பெற்றிருக்கும் சிங்கள அரசு தமிழருக்கு எதிராக ஈவிரக்கமற்ற இராணுவ அடக்குமுறைக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதே சமயம் போர் விரிவடைந்து தீவிரமாகி வரலாறு காணாத ஓர் மனிதப் பேரவலம் உருவாகியுள்ள சூழலில் தமிழரின் தேசியப் பிரச்சினை மேலும் மோசமாகி வருவதையிட்டுக் கவலைப்படும் வெளிநாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. நெருக்கடியில்; பிரதான பாத்திரங்களை வகிக்கும் தமிழர் தரப்பும் சிறி லங்கா அரசும் சமாதானப் பேச்சுக்களை நடத்தி ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டுமென இந்நாடுகள் ஆலோசனை கூறிவருகின்றன. தமிழ் மக்களுக்கும் சிங்கள அரசுக்கும் மத்தியில் பரஸ்பரம் அவநம்பிக்கையும் ஆறாத வடுவும் கோபமும் பகைமையும் இருப்பதாலும் விடுதலைப் புலிகளுக்கும் அசசுக்கும் மத்தியில் நிகழ்ந்த நேரடிப் பேச்சுக்கள் முறிந்து போனதாலும் விடுதலைப் புலிகளின் போராட்டம் புதிய பரிமாணத்தைப் பெற்றிருப்பதாலும் அதற்கு ஆதரவு கொடுக்க சில நாடுகள் முன்வந்துள்ளன. நோர்வே, சுவீடன், கனடா சுவிஸ், அவுஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், கொலண்ட், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என நேரடியாகத் தெரிவித்துள்ளன. இந் நாடுகளின் கோரிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்போதைய தலைமை வரவேற்ற போதும் சிறி லங்கா அரசு அதற்கிணங்க மறுக்கின்றது. தமிழரின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டு விவகாரம் எனக் கூறி சர்வதேச சமூகத்தின் வேண்டுதல்களை நிராகரித்து வருகின்றது.
சிறி லங்கா அரசானது சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை மறுத்து வருவதற்குச் சில அடிப்படையான காரணங்களுண்டு. முதலாவதாக தமிழரின் தேசியப் பிரச்சினை உலக அரங்கில் ஏறி சர்வதேச நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுவதை மகிந்த அரசாங்கம் விரும்பவில்லை. இரண்டாவதாக தமிழர் போராட்டத்தின் பிரதான தலைமைச் சக்தியாக விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து பயணிப்பதையும், புலிகள் இயக்கத்துக்கு தமிழ் மக்களுக்கான பலமான தலைமைத்துவ அந்தஸ்து கிடைப்பதை சிங்கள அரசு விரும்பவில்லை. மூன்றாவதாக தமிழரின் தன்னாட்சிக் கோரிக்கை நியாயமானதென நாகரிக உலகம் அனுதாபம் காட்டலாம் என்ற அச்சமும் சிறி லங்காவுக்கு உண்டு. நான்காவதாக சமாதான முயற்சிகளுக்குப் பதிலாக இராணுவப் பாதையையே நாடிய சிறி லங்கா அரசு அதை வென்றெடுப்பதில் வெற்றி கண்டுள்ளமையினால் அவ் இராணுவ கோட்பாட்டிலேயே நாட்டம் கொண்டுள்ளது.
தமிழரின் தாயகத்தை ஆக்கிரமித்து தமிழரை அடக்கி ஆளும் இராணுவக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலமே சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் திருப்திப்படுத்தி அதன் ஆதரவை வென்றெடுக்கலாமென சிங்கள அரசு கருகின்றது. முப்பத்தேழு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமானது சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் மத்தியில் பரஸ்பர பகைமையையும் நம்பிக்கையீனத்தையும் உருவாக்கியிருந்தது என்பதே உண்மை. இரு தரப்பினர் மத்தியில் நிகழ்ந்த பேச்சுக்கள் முறிவடைந்ததற்கு இந்தப் பரஸ்பர பகைமையும் நம்பிக்கையீனமுமே காரணம். இதன் காரணமாகவே எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ள புலிகளின் தலைமைத்துவம் அதுவே தமிழரின் அபிலாசைகளுக்கு பயனளிக்குமெனவும் நம்புகின்றது. ஆனால் சிறி லங்கா அரசோ நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய காரணங்களின் நிமித்தம் சர்வதேச சமூகத்திம் சர்வதேச அரசுகளின் மத்தியத்துவத்தை விரும்பவில்லை. ஆயுதபோரை முடிவுக்குக் கொண்டுவந்து புதிய பரிமாணத்துக்ள் பிரவேசித்திருக்கும் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு சிங்கள அரசு பின்னடிப்பதற்கு வேறும் சில காரணங்களுண்டு.
தற்போதைய சிங்கள அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்குடன் விசாரணைக் குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுக்களையும், பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு அமைவாக தீர்வு என வேறு குழுக்களையும் நியமித்து சில கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் இலங்கைத் தீவானது தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தின் கீழும் இராணுவ பொலிஸ் கொடுங்கோன்மையின் கீழும் ஆளப்பட்டு வருகின்றது என்பது தான் உண்மை..
சிங்கள இனவாத ஆட்சியாளரின் பார்வையில் விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். போருக்குப்பின்னும் தமிழரின் தனித்துவம், தாயகம், தேசியம் என்ற தமிழினத்தின் ஒட்டுமொத்தமான விருப்பாற்றலைக் குறியீடு செய்து நிற்கும் ஒரு புரட்சிகர இயக்கமாக விடுதலைப் புலிகளை இவர்கள் கருதுகிறார்கள். ஏனைய தமிழ்க் குழுக்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளைக் கைவிட்டு எந்தச் சலுகைகளையும் ஏற்கத் தயாராக இருக்கும் போது விடுதலைப் புலிகள் மட்டும் கொண்ட இலட்சியத்தை இறுகப் பற்றி தமிழரின் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதில் உறுதியாக நிற்கின்றார்கள் என்பதையும் சிங்கள ஆளும் வர்க்கம் நன்கு உணர்ந்திருக்கின்றது. ஆகவே, இந்த அடிப்படைகள் பற்றிப் பேச வேண்டும். ஆனால், இந்த அடிப்படைகள் பற்றி விவாதிக்கக் கூட சிங்கள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. தமிழர்களின் தேசிய அபிலாசைகளையும் உணர்வுகளையும் முற்றாக உதாசீனம் செய்து பிறிதொரு அரசியற் கருத்துலகில் தமிழரின் பிரச்சினையை நிலைநிறுத்த முனைகின்றார்கள். இலங்கையானது பல இனக் குழுக்களைக் கொண்ட ஒரு சமூகக் கட்டமைப்பு என்பதும் அதில் ஒரு சிறிய இனக்குழுவாக தமிழர்கள் அமைந்துள்ளார்கள் என்பதும் இதன் அடிப்படையில் தேசிய தனித்துவம் தாயகம் என்ற தமிழரின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதும் சிறி லங்காவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு காரணமாகவே நேரடியாகவோ அன்றி சர்வதேச சமூகத்தின் நடுநிலையுடனோ விடுதலைப் புலிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்த சிங்கள ஆட்சிபீடம் தயக்கம் காட்டுகின்றது.
விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக ஓரங்கட்டி விடுவதே அரசின் நோக்கம். இன்றும் கூட மகிந்த அரசின் தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இந்த நோக்கத்தையே சுட்டிக் காட்டுகின்றன. தமிழரின் வரலாற்றுத் தாயகத்தை இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தால் தமிழரின் தாயக தன்னாட்சிக் கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதும் அதனால் இக் கோரிக்கைகளை முன்னெடுக்கும் புலிகளின் போராட்டத்திற்கும் முடிவுகட்டிவிடலாம் என்பதும் சிங்கள அரசின் திட்டமாகும்.
இந்த அந்தரங்க நோக்கங்களின் அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இராணுவ அரசியல் அணுகுமுறைகள் அமையப் பெற்றுள்ளன. ஆனால், சிறி லங்காவின் பரப்புரை இயந்திரங்கள் உலக சமுதாயகத்திற்கு வித்தியாசமான ஒரு கதையை எடுத்துக் கூறுகின்றன. உண்மையான நோக்கங்களை இருட்டடிப்புச் செய்து பொய்யான புனைகதைகளை எடுத்துக் கூறிவருகின்றன. பயங்கரவாத அச்சுறுத்தல் என்றும் சமாதானத்திற்கானப் போர் என்றும் புலிகளின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து தமிழரை விடுதலை செய்வது என்றும் கற்பனாவாதக் கட்டுக்கதைகளைக் கூறிவருகின்றன. சிறி லங்கா அரசின் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து போகாமல் சுதந்திரத்திற்காகவும் கௌவரத்திற்காகவும் தமிழர் நடத்தி வரும் நியாயமான போராட்டத்தின் உண்மைக் கதையை உலக சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். என்பதே எமது ஆவல். இந்த ஆவலை தாயகத்தையும் தமிழீழத் தேசியத்தலைமையையும் நேசிக்கும் மக்களும் உணர்ந்து கொண்டு தமிழரின் இராஜதந்திர வழியூடான உரிமைப்போருக்கு ஒத்துழைப்பும் பேராதரவும் நல்க வேண்டும். என்பதுமே எமது வேணவாவாகும்.

அரசியற் பரப்புரைக் குழு

தமிழீழ விடுதலைப் புலிகள்

சுவிஸ் கிளை



"பிரபாகரன் வழி நில்லு".. "பகை பிளந்த மாவீர் வழி சென்று வெல்லு"...