*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, March 17, 2010

இன்று பரிதாபகரமான நிலையில்;அநாதைகளாய் ஈழதமிழினம்?

பிரதிநிதித்துவத்தைச் சிதறடிக்கும் சதி முயற்சிக்கு தமிழர் பலியாகக் கூடாது

"பயனற்றுப் போன அணுகுமுறைகளை மீண்டும் நியாயப்படுத்தும் சக்திகளின் கபடநோக்கத்தை புரிந்துகொள்ளவது அவசியம்
தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சிதைத்துச் சீர்குலைத்து எதிர்காலத்தில் தங்களது எந்தவொரு அரசியல் கோரிக்கைக்காகவும் வலுவான முறையில் குரல் கொடுக்க முடியாதவர்களாக அவர்களை வைத்திருப்பதற்கான ஒரு சதி முயற்சிக்கு துணைபோவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுத் தேர்தலில் பெருவாரியான அரசியல் குழுக்களும் சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த மக்கள் தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பதாக அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள்.
அடுத்த பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் கொண்டிருக்கக்கூடிய பிரதிநிதித்துவத்தின் கனதியையும் கட்டுக்கோப்பையும் பொறுத்தே அவர்களின் எதிர்கால அரசியல் பாதை அமையும் என்பதில் சந்தேகமில்லை. போரின் முடிவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பாக பாராளுமன்றத் தேர்தலை நிதானத்துடனும் விவேகத்துடனும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக உறுதிப்பாட்டுடன் குரல் கொடுக்கக் கூடிய அரசியல் தலைமைத்துவம் அற்றவர்களாக இருக்கின்ற நிலை தொடரவேண்டுமென்பதே பேரினவாத சக்திகளின் விருப்பமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோக்கத்திற்காக அச்சக்திகள் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும் விலைபோகக்கூடிய கல்விமான்கள், புத்திஜீவிகள் எனப்படுவோரையும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன
என்பதை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் விசமத்தனமான பிரசாரங்களின் மூலம் தெளிவாக உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவதானிகள் கூறியிருக்கிறார்கள். தவறான கொள்கைகளும் தவறான தந்திரோபாயங்களுமே தமிழ் மக்களை இன்று அரசியல் அநாதைகளாக்கியிருக்கின்றன என்பதை அகவுணர்வுகளுக்கு அப்பால் புரிந்துகொண்டு வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு சுயவிமர்சனங்களுக்குத் தங்களை உட்படுத்தத் தயாராயிருக்கக் கூடிய அரசியல் வாதிகளினாலேயே தமிழ் மக்களை இன்றைய அரசியல் வனாந்தரத்தில் இருந்து மீட்பதற்கு எதையாவது செய்யக்கூடியதாக இருக்கும்.
அந்த யதார்த்த நிலைக்கு முரணாக பழைய, பயனற்றுப் போன கடும் போக்கு கொள்கைகளை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய சில அரசியல்வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியும் கூட இன்று சில அரசியல்வாதிகள் குடாநாட்டு மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வாக்குக் கேட்கின்ற அளவுக்கு வங்குரோத்து நிலையடைந்திருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சில கட்சிகள் போரின் முடிவுக்குப் பிறகு ஆரோக்கியமான முறையில் தங்களுக்குள் சுயவிமர்சனங்களைச் செய்யாமல் தான்தோன்றித்தனமான நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டு கதிரில் இருந்து உதிரும் நெல்மணிகள் போன்று சிதறி நின்று கொண்டு தமிழ் மக்களை மீண்டும் தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிசெய்து கொண்டிருக்கின்றன.
சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைக்கு இசைவான முறையில் நடைமுறைச்சாத்தியமான கொள்கைகளையும் அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களுக்கு மீண்டும் கண்ணாடியில் நிலவைக் காட்டுவதற்கு முயற்சிக்கும் சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டுமென்று அரசியல் அவதானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் அவர்களது உரிமைப் போராட்டங்களின் வரலாற்றில் இன்றுள்ளதைப்போன்று முன்னென்றுமே பரிதாபகரமான நிலையில் இருந்ததில்லை. அத்தகையதொரு சூழ்நிலையில் பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைக் குழுக்களாகவும் தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்கள் உண்மையில் தமிழ் மக்களுக்கு துரோகமே செய்கிறார்கள். பல சுயேச்சைக் குழுக்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டிய இன்னொரு விடயமாகும்.
பம்பலுக்கு போட்டி
கல்விமான்கள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் புத்திஜீவிகள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளும் சிலரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகத் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். இக்குழுவின் வேட்பாளர்களில் ஒருவர் தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் இறுதித் தினத்தன்று யாழ்ப்பாணக் கச்சேரியில் இடதுசாரி அரசியல் பிரமுகர் ஒருவருடன் கலந்துரையாடுகையில்;
"நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது ஒரு பம்பலுக்கு என்று கூறினாராம். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் விளைவான அவலங்களில் இருந்து மீளமுடியாமல் தமிழ் மக்கள் அல்லாடிக் கொண்டு இருக்கும் போது படித்தவர்கள் என்ற தங்களைக் காட்டிக்கொள்வோர் "பம்பலுக்கு தேர்தலில் நிற்கிறார்கள் என்றால் இவர்களின் படிப்பில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று கேட்கவேண்டியிருக்கிறது.
பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சீர்குலைத்து தங்களை நிரந்தரமாகவே அரசியல் அனாதைகளாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சதிமுயற்சிகளுக்கு பலியாகாமல் தமிழ் மக்கள் தங்களது தேர்தலில் விவேகத்துடன் செயற்படவேண்டுமென்பதே அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் பற்றுறுதி கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சிறுபிள்ளைத் தனமான அரசியல் சாகசங்களுக்கு இடங்கொடாமல் தமிழ் மக்கள் தங்களுக்கு எதிர்கால அரசியல் பாதையை உருப்படியாக வகுத்துத்தரக்கூடிய அனுபவமுடையவர்களைக் கொண்ட அணியையே பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்.
வடக்கு,கிழக்கில் இருந்து வலுவான அரசியல் அணியொன்று பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படாதிருப்பதை உறுதிசெய்யும் நோக்கிலான சதிமுயற்சிகளை முறியடிக்க தமிழ் மக்கள் திடசங்கற்பம் பூணவேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாகும்.




No comments:

Post a Comment