*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, March 19, 2010

உணருமா புலம்பெயர் சமூகம்?:தமக்கான தலைமை எது என்பதை ஊடகங்களல்ல? "மக்களே தீர்மானிப்பர்"


தமிழர்களும் பாராளுமன்றத் தேர்தலும்
தமிழ் மக்கள் மத்தியில் இன்று பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. தகுதியான அமைப்பை இனம்கண்டு அதில் போட்டியிடும் தரமானவர்களைத் தமது அரசியல் பிரதிநிதிகளாகத் தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும்.
தரமான அரசியல் தலைமைத்துவத்தின் தேவை தமிழ் மக்களால் உணரப்பட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டலும் நேர்மையும் உறுதியும் அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளையும் இனங்கண்டு அவற்றை நிலைநாட்டுவதிலுள்ள ஈடுபாடுமே ஒரு இனத்தின் சிறப்புக்கும் மதிப்புக்கும் ஆதாரமானவை. பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள இன்றைய நிலையில் ஒவ்வொரு தமிழ் மகனும் பொறுப்புடன் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலாகட்டும் நாட்டின் ஏனைய பகுதிகளிலாகட்டும் ஒரு திட்டவட்டமான கொள்கையுடன் கூடிய அதாவது மக்களின் வாழ்வுரிமை தொடர்பில் நிலையான உறுதியான கொள்கையுடைய அரசியல் நிலை இல்லை என்பது உண்மையான நிலைமை. இது யதார்த்தமானது. விரும்பியோ, விரும்பாமலோ இந்த உண்மை நிலையைப் பகிரங்கமாக்க வேண்டியுள்ளது. கட்டுப்பாடான அரசியல் பிரதிநிதித்துவத்தை 1977 பொதுத் தேர்தலின் பின் தமிழர்கள் கைநழுவ விட்டுவிட்டனர். அந்நிலை ஏற்பட்ட பல்வேறு சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள், செயற்பாடுகள் ஏதுக்களாயமைந்துவிட்டன. ஜனநாயக அரசியல் தமிழர்களைப் பொறுத்தவரை சிதைக்கப்பட்டது. இதுவே ஏனைய சமூகங்களின் தேவையாகவும் இருந்தன என்பதை மறைப்பதற்கில்லை. மறுக்கவும் முடியாது. உறுதியாக கட்டுப்பாடான அரசியல் சக்திகளை மாற்று அரசியல் அமைப்புகளோ மாற்று சமூக அமைப்புகளோ விரும்புவதில்லை. அதுவும் ஒரு ஜனநாயகப் பண்பு என்று கூடக் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் அரசியல் உறுதிப்பாட்டை அதன் மூலம் மக்களின் உரிமைகளைப் பேண வேண்டிய தேவை தமிழ் மக்களுக்குண்டு. அதைப் புரிந்துகொள்ள வேண்டிய தெளிவான சிந்தனையும் தமிழ் மக்களுக்குத் தேவை. தமிழ் மக்கள் தரமான அரசியல் தலைமையை பிரதிநிதித்துவத்தை அடையாளம் கண்டு தெரிவு செய்யத் தவறினால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தமக்குத் தாமே அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்ததாக அமைந்துவிடும். இது முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும். தமிழ் மக்கள் தமக்குரிய அரசியல் பிரதிநிதித்துவங்களின் அவசியத்தைப் புரிந்துகொள்ளாத தன்மையே கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நிலவுகின்றது. நாட்டின் அரசியலரங்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பவற்றைப் பறித்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தேர்தல் தொகுதி மறுசீரமைப்புகள் கூட இந்நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் தெளிவு இருப்பின் இவற்றைப் புரிந்துகொள்ளலாம். கடந்த கால தேர்தல் வரலாறுகளை நோக்கும் போது தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களில் அசிரத்தையாக இருந்துள்ளனர் என்பது தெளிவானது. அது தொடரப்படக்கூடாது என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. தேர்தல்களில் வாக்களிக்காமை, வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதில் அக்கறை செலுத்தாமை, தமிழர்கள் தேர்தல்களில் போட்டியிட்ட போதும் அவர்களுக்கு வாக்களிக்காமை என்பவற்றுடன் அச்சத்தின் மூலம் வாக்களிப்பதில் தவிர்த்துக் கொள்ளுதல் , வாக்குச்சீட்டை செல்லுபடியாக்குதல், வாக்களிப்பு முறையை விளங்கிக் கொள்ளாமல் தவறாக வாக்களித்தல், தேர்தலில் வாக்களிப்பதைப் பகிஷ்கரித்தல் போன்ற செயற்பாடுகளால் தமிழர் பிரதிநிதித்துவங்கள் அரசியல் நிர்வாக அமைப்புகளில் இழக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி பணம், மது என்பவை கூட அப்பாவித் தமிழர்களின் வாக்குரிமையைத் தவறாகப் பயன்படுத்தத் தூண்டுதல் செய்வதாகக் கடந்த காலங்களில் குறிப்பாக மலையகப் பெருந்தோட்டங்களில் பேசப்பட்டது. இது ஆரோக்கியமான அரசியல் நிலைமை அல்ல. இந்த நாட்டில் இனவாத அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்நிலையில் இனங்களிடையே சமத்துவம் பேணப்பட வேண்டுமானால் அதற்கு இனங்களின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சகல அரசியல் நிர்வாக அமைப்புகளிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுவும் தரமான , தகுதியான , சமூக உணர்வு கொண்ட பிரதிநிதித்துவங்களாக அமையவும் வேண்டும். இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் தேவையுடையவர்களாக இருக்கின்றனர். அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூடப் பயன்படுத்த முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
ஒரு இனத்தின் உயிர் நாடி மொழிப்பயன்பாடு. அரசியலமைப்பு சட்டத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் நடைமுறையில் தமிழ் மக்கள் அதை அனுபவிக்க முடியாத நிலையுள்ளது. அதேபோன்று சமத்துவக் கல்வியும் பெரும்பாலும் ஏட்டளவிலேயே உள்ளது. பாதுகாப்புக்கு போதிய உத்தரவாதம் இல்லை. இனவெறி அரசியல் இந்நாட்டில் நிலவுவதால் பாதுகாப்புக் காலத்திற்குக் காலம் பங்கப்படுத்தப்பட்டு வருவது வரலாற்று ரீதியாக உறுதியாகின்றது. இதேபோல் பல்வேறு வாழ்வுரிமைக்கான தேவைகள் நிறைவேற்றப்படாமலுள்ளன.
இவற்றையெல்லாம் கருத்திலும் கவனத்திலும் கொள்ளாது தேர்தல்களை எதிர்கொள்ளக் கூடாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு பொழுது போக்காக, விளையாட்டாக,சூதாட்டமாக ஆகிவிட்டது என்று எண்ணத் தோன்றுகின்றது. பணம் இருப்பவர்கள் போட்டியிடுகின்றார்கள். வாக்குகளைப் பிரித்து ஏனைய தமிழர்களின் தோல்வியை உறுதிப்படுத்த பணத்தைப் பெற்றுப் போட்டியிடுகின்றார்கள். போட்டியிட வாய்ப்புக் கிட்டாவிட்டால் நேற்றுவரை திட்டித்தீர்த்தவர்களுடன் இணைந்து போட்டியிடுகின்றார்கள். வெற்றி பெற முடியாது என்று தெரிந்து கொண்டே வாக்குகளைச் சிதைத்து தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவங்களை இழக்கச் செய்ய வேண்டுமென்றே போட்டியிடும் பலர் உள்ளனர். புத்திஜீவிகளாகவும் கல்விமான்களாகவும் கருதப்பட்ட பலரும் ஜனநாயகத்தை மறந்து பணநாயகத்தால் கவரப்பட்டு மதிப்பிறங்கிக் களமிறங்கியுள்ளனர் என்று தமிழ் மக்கள் மத்தியிலே பேசப்படுகின்றது. இந்நிலை அரசியல் தரத்தின் வீழ்ச்சிக்கு மட்டுமல்ல அறிவியல் தரத்திலும் தமிழரின் வீழ்ச்சிக்கு வழியமைக்கின்றது என்பது உணரப்பட வேண்டும். பல்வேறு பொறுப்பற்ற உட்சக்திகளாலும் திட்டமிட்ட வெளிச்சக்திகளாலும் சீரழிக்கப்பட்டு இன்று அரசியலில் அநாதரவான நிலையிலுள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் பொறுப்பற்ற பொருத்தமற்றவர்களை இனங்கண்டுகொள்ள வேண்டிய கட்டாய தேவை தவிர்க்க முடியாத தேவை தமிழ் மக்களுக்குள்ளது.
உணர்வைத் தூண்டிவிட்டு வாக்குகளைக் கொள்ளையிடும் அரசியலோ பணத்திற்கும் பதவிக்கும் அடிமைப்படுத்தப்படும் அரசியலோ சமுதாயத்திற்குப் பயனில்லை. கொள்கை உறுதியும் சமத்துவமான உரிமைக்காக குரல் கொடுத்து இணக்கப்பாட்டுடன் செயற்படக்கூடிய அரசியல் பிரதிநிதித்துவங்களே தமிழர்களின் இன்றைய தேவை. அதுவும் கட்டுப்பாடாக ஒன்றிணைந்த தலைமைத்துவம் கொண்ட அரசியலே இன்றைய தேவை.
தமிழ் மக்கள் மத்தியில் இன்று பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. தகுதியான அமைப்பை இனம்கண்டு அதில் போட்டியிடும் தரமானவர்களைத் தமது அரசியல் பிரதிநிதிகளாகத் தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும்.
அதுவே நமது சமுதாயத்தின் இன்றைய தேவை. நம்பிக்கை பொறுப்புணர்ந்து தாமும் செயற்பட்டு மற்றவர்களுக்கும் வழிகாட்டி நெறிப்படுத்த சமுதாய நலன் விரும்புவோர் முன்வர வேண்டும். அதையே தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்த்துள்ளது. கடமையை உரிமையுடன் ஆற்றப் பின் நிற்கக்கூடாது.





No comments:

Post a Comment