*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 10, 2010

விமான விபத்தில் போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி

ரஷ்யாவில் போலந்து அதிபர் பயணம் செய்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 132 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் உள்ள மோலென்ஸ்க் நகரில், கத்யன் படுகொலை சம்பவத்தின் 70 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப் பிடிக்கப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக வாசா நகரில் இருந்து போலந்து அதிபர் லெக் கசின்ஸ்கி விமானத்தில் சென்றார். அவரது விமானம் மோலென்ஸ்க் நகர விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
இதில் போலந்து அதிபர் லெச் காச்ஷின்ஸ்கி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த 132 பேர் இருந்ததாகவும், மேற்கு ரஷ்யாவிலுள்ள ஸ்மோலென்ஸ்க் என்ற நகர் அருகே அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் போலந்து அதிபரும், அவரது மனைவியும் இருந்ததை போலந்து அயலுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
இதனிடையே ரஷ்ய அரசின் பேச்சாளர் ஒருவரும் இந்த விபத்தை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் விபத்து குறித்து மேலும் விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இருப்பினும் விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் இடதுபுற இறக்கை மரம் ஒன்றின் மீது மோதியதில், விமானம் இரண்டு துண்டாக பிளந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாகவும், அடர்த்தியான பனி மூட்டம் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.




மாவை சேனாதிராசாவுக்கு ஓர் அன்பு மடல் வலம்புரி ஆசிரியர் தலையங்கம்

அன்புக்குரிய மாவை சேனாதிராசாவுக்கு! அன்பு வணக்கம். யாழ்.மாவட்டத்தில் ஐந்து ஆசனங்கள் பெற்றீர்கள் என்ற செய்தியறிந்து மகிழ்வடைந்தோம். அதிலும் விருப்பு வாக்குக் கிடைத்த ஒழுங்கு கண்டு இன்னும் மகிழ்வு.வாக்காளப் பெருமக்கள்? சேர்ந்து திட்டமிட்டு விருப்பு வாக்கை ஒழுங்கமைத்திருக்கின்றார்கள்.
முதலில் உங்களுக்கு. இரண்டாவது உங்களோடு இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு. மூன்றாவது முதுமையிலும் காங்கிரஸைத் தூக்கி எறிந்து விட்டு தங்களிடம் வந்த விநாயகமூர்த்திக்கு. இப்படியே உங்கள் விருப்பு ஒழுங்கு அமைந் திருக்கின்றது. இறைவனே நேரில் வந்து நின்று ஒழுங்குபடுத்தினாலும் இப்படியயாரு ஒழுங்கு கிடைப்பது அரிது.
அந்த அரிதான விடயம் உங்கள் கட்சிக்குக் கிடைத்திருக்கின்றது. இருந்தும் உங்களோடு அன்று தொடக்கம் இன்று வரை இருந்து கட்சிக் காகப்பாடுபட்ட கட்சியின் செயலாளர் எக்ஸ். குலநாயகத்தையும்இ சீ.வீ.கே.சிவஞானத்தையும் விருப்பு வாக்குத் திட்டமிடலில் சேர்த்திருக்கலாம். என்ன செய்வது இப்போது உங்கள் கட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கூட உங்களிடம் இல்லை என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
‘வீடு' என்ற தேர்தல் பிரசாரப் பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் அச்சடித்து விட்டு கனடாவில் அச்சடித்ததாகக் கூறி உங்கள் தரப்பினர் வெளியிட்ட போது, உங்கள் கட்சியில் போட்டியிட்ட பலர் எங்களிடம் முறையிட்டார்கள்.கட்சிக்குள்ளேயே இப்படியொரு கழுத்தறுப்பு நடப்பதாக அவர்கள் குற்றஞ்சுமத்தினார்கள். இருந்தும் நாங்கள் நாகரிகம் கருதி அவர்களின் குற்றச்சாட்டுக்களை வெளியிட விரும்பவில்லை.
நீங்கள் விரும்பினால் குற்றஞ்சுமத்திய உங்கள் கட்சி வேட்பாளர்களின் கருத்துக்களை பிரசுரிக்க முடியும்.தேர்தல் முடிபுகள் வர முன்னதாக-விருப்பு வாக்குகள் எண்ணுவதற்கு முன்பாக உங்கள் தரப்பால் வெடி கொளுத்தி ஆர்ப்பரிக்க எப்படி முடிந்தது? எதுவாயினும் உங்கள் மீது மதிப் புண்டு. உங்களிடம் அன்பாகத் தெரிவிப்பதுஇ வன்னி யில் வெடிகுண்டுகளுக்குத் தங்கள் பிள்ளைகளை - உறவுகளைப் பலிகொடுத்து விட்டு வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் மனிதங்கள்இ உங்கள் வெற்றியாளர்கள் சிலரின் வெடி கொளுத்தலில் திடுக்கிட்டு கலங்குகின்றன.
வென்றது மகிழ்வுதான். அதற்காக வெடி கொளுத்துவது உங்கள் மனச்சாட்சிக்கு உடன்பாடானதா? என்று சொல்லுங்கள். உங்கள் குடும்பங்களில் அப்படியொரு இழப்பென்றால் வெடிகொளுத்துவீர்களா? இடப்பெயர்வுஇ முகாம் வாழ்வு என்றெல்லாம் துன்பம் அளந்த நீங்கள் ஒரு கணத்தில் அதையல்லாம் மறந்து வெடிகொளுத்துவீர்களாயின், உங்களுக்குள்ளும்... புகுந்து விட்டதென்றல்லவா எண்ணத் தோன்றுகின்றது.
ஏதோ கவனம்! கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்




செட்டிகுளம் முகாம் மக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்! குடிநீரும் இடைநிறுத்தம்

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்தமைக்காக முகாம் மக்களது குடிநீரை இடைநிறுத்திய இலங்கைப் படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இராமநாதன் நலன்புரி நிலையத்திற்கான குடிநீர் விநியோகம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கேட்பதற்காக மக்கள் அந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரச செயலகத்திற்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் குடிநீர் இல்லை என்பதைத் தெரிவித்த போது சம்பவ இடத்திற்கு விரைந்த முகாமின் இரண்டாம் நிலையில் இருக்கும் சிறீலங்காப் படை அதிகாரி ஜெயவீர என்பவர் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.
தாக்குதலினைத் தாங்கமுடியாத மக்கள் தப்பி ஓடியுள்ளனர். மக்கள் ஓடும்போது அவர்களைப் பார்த்து நடைபெற்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்திருக்கின்றீர்கள். எனவே அவர்களிடமே தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கத்தியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலங்களிலும் தண்ணீர், உணவு, மருந்து உட்பட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த படை அதிகாரி காட்டுமிராண்டித்தனமாகக் கத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய காலப்பகுதி கடும் வெப்பமான காலப்பகுதி என்பதாலும் அங்கு இலட்சக்கணக்கான மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதாலும் குடிநீருக்கு கடந்த பல மாதங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
சம்பவம் குறித்து எமது செய்தியாளரிடம் கருத்துத் தெரிவித்த மக்கள்,
எமது வாழ்க்கையில் நாங்கள் உழைத்தே வாழ்ந்து வந்தோம். எமக்கான நிலத்தில் நாங்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டால் நாங்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் கையேந்தி யாரிடமும் அடி உதை வேண்டிய தேவை எமக்கில்லை. எம்மை இப்போதே எமது ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டால் நாங்கள் உடனடியாகவே வெளியேறுவோம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.




போர்க் குற்றங்கள்: மெதுவாக குறிவைக்கப்படும் சிறிலங்கா

அறுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரமடைந்ததாக கூறப்படும் சிறீலங்கா, வரலாற்றில் என்றுமில்லாத அளவு சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து நிற்கிறது. சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளில், இரு பெரும் சக்திகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்த அழுத்தத்தை வழங்குவதில் முன்நிற்கின்றன. நடைபெற்று முடிந்த போரில், ஆயிரக்கணக்கான [ஐ.நாவின் முன்னால் பேச்சாளரின் கருத்துப்படி இறுதிக் கட்டப் போரில் மட்டும் சுமார் 40 ஆயிரம்] மக்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாக ஆரம்பித்தன.இதன் ஒரு கட்டமாக, இலங்கைத் தீவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் [UN Human Rights Council] விசேட அமர்வொன்று இடம்பெற்றது. இதனை மேற்கத்தேய நாடுகளே முன்மொழிந்ததுடன் அதில் அக்கறையும் செலுத்தியிருந்தன. ஆனால், அன்றைய காலப் பகுதியில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக ஜெனிவாவில் பணியாற்றிய திரு.டயான் ஜயதிலக்க தனது இராஜதந்திர சாணக்கியத்தின் மூலம் அதனை முறியடித்திருந்தார். திரு.டயான் ஜயதிலக்க சிறீலங்காவினுடைய இராஜதந்திரிகளில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர். அதேவேளை முன்னால் ஜெனரல் சரத்பொன்சேக கள முனையில் வழங்கிய பங்களிப்புக்கு நிகரான பங்களிப்பை சர்வதேச ரீதியில் வழங்கியவர். ஜெனரல் சரத்பொன்சேகவை தேசிய கதாநாயகனாகவும், திரு.டயான் ஜயதிலக்கவை சிறீலங்காவின் சர்வதேச கதாநாகனாகவும் சில மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டு ஊடகங்கள் வர்ணித்திருந்தன. ஆனால் இன்று, சிறீலங்கா மேற்குலகிலிருந்து எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு திரு.டயான் ஜயதிலக்க சிறீலங்காவின் இராஜதந்திரப் பணியில் “நேரடியாக” இல்லை. மனித உரிமை மீறல் தொடர்பாக எழுகின்ற குற்றச்சாட்டுகளில், பிரதானமானதாகவும் சவால் மிக்கதாகவும் போர்க் குற்றச்சாட்டே முன்வைக்கப்படுகிறது. அதனை மகிந்த நிர்வாகம் அடியோடு மறுத்து வருகிறது. ஆனால், ஒரு காலத்தில், தேசிய கதாநாயகனாகப் பார்க்கப்பட்ட முன்னாள் ஜெனரல் சரத்பொன்சேகவே போர்குற்றம் இடம்பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.இது மகிந்த நிர்வாகம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வழிவகுத்தது. ஏனெனில், 4ம் கட்ட ஈழப்போரின் முக்கியமான கட்டங்களிலிருந்து அது நிறைவடையும் வரை சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக ஜெனரல் சரத்பொன்சேகவே இருந்தார். சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளரே போர்க்குற்றம் இழைத்தமைக்கான பொறுப்பெனவும், அது தொடர்பான விபரங்களை தான் சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கத் தயார் எனவும் தடுப்புகாவலில் வைக்கப்படுவதற்கு முன்னர் ஜெனரல் சரத்பொன்சேகா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதேவேளை, போர் நடைபெற்று முடிந்த பிற்பாடு அம்பலாங்கொடையில் பேசும் போது, தனது படையினர் போரில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக தாம் போர் மரபுகளை மீறிச் செயற்பட்டதென்ற கருத்தை முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகா தன் வாயாலேயே கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில், சிறீலங்காவின் ஆயுதப் படையினர் போர்குற்ற மீறல்களை நிகழ்தியிருக்கின்றனர் என்பதை அதில் தொடர்புடைய பொறுப்புமிக்க தரப்புகளே ஏற்றுக்கொண்டுள்ளன. அதேவேளை, போர்குற்றம் இழைக்கப்பட்டு பெறப்பட்ட வெற்றியின் கதாநாயகர்களில் பிரதானமானவரும் மகிந்த நிர்வாகத்துடன் இல்லை. அத்துடன், அந்த போர்குற்ற மீறல்களை நியாயப்படுத்திய சிறீலங்காவின் சர்வதேச கதாநாயகனும், சர்வதேச ரீதியாக போர்குற்றச்சாட்டு முதன்மை பெற்றுள்ள தருணத்தில் மகிந்த நிர்வாகத்துடன் இல்லை. போர்குற்ற மீறல்களை போரில் ஈடுபட்ட இரு தரப்புமே மேற்கொண்டதாக கூறப்படுகின்ற போதும், அதில் மற்றத் தரப்பான விடுதலைப் புலிகளில் அதற்கு பொறுப்பான யாரும் உயிருடன் இல்லை. ஆதலால், சிறீலங்காத் தரப்பினரே பொறுப்புக்குரிய பிரதான தரப்பாக மாறியுள்ளது. அத்துடன், பாரிய போர்க்குற்றச் செயல்களை சிறீலங்கா ஆயுதப் படையினரே நிகழ்தியுள்ளனர் என்ற கருத்து சாட்சியங்களுடன் மேலோங்கி வருகிறது. போர்குற்றச்சாட்டு விடயம் இன்றோடு அல்லது இன்னும் சிறிது காலத்தோடோ முடிவுக்கு வரப்போவதில்லை. இனிவரும் காலத்தில்தான், அதனுடைய கூரியமுனை சிறீலங்கா மீது பாயவிருக்கிறது. அதனடிப்படையில், போர்குற்றம் தொடர்பான பின்புலத்தை அலசி, அது எவ்வாறு இலங்கைத் தீவின் இன்றைய நிலைப்பாட்டோடு தொடர்புபடுகின்றது என்பதை ஆய்வுக்கு உட்படுத்துகிறது இந்த கட்டுரை.பல நூற்றாண்டுகளாக நீதியை நிலைநிறுத்துவதற்கான மரபுகள் நிலவி வந்த போதும், இவை யாவும் முதல் மற்றும் இரண்டாவது முறையாக சர்வதேச சட்டங்கள் என 1899 மற்றும் 1907ம் ஆண்டுகளின் ஹேக் சமவாயங்களிலேயே [Hague Conventions] ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டன. இவற்றின் தொடர்ச்சியாகவே ஜெனிவா சமவாயமும் [Geneva Convention] நோக்கப்படுகிறது. நான்கு ஜெனிவா சமவாயங்களுக்கும் பொதுவான சரத்து 3 சர்வதேச சட்ட மரபுகளை பிரதிபலிக்கிறது. சட்டங்களை அல்லது போர் மரபினை மீறுகிறமை போர்க் குற்றம் எனப்படும். படுகொலை செய்தல் அல்லது சர்வதேச தராதரங்களுக்கு புறம்பான வகையில் போர்கைதிகளை கையாளல், கைதுசெய்யப்பட்டவர்களை அல்லது நிபந்தனையின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கொல்லுதல், தீயநோக்கோடு மாநகரங்களை, நகரங்களை மற்றும் கிராமங்களை அழித்தல் போன்ற விடயங்கள் போர்க் குற்றத்துக்குள் உள்ளடக்கப்படுகின்றன.போர்க்குற்றங்களின் நவீன கால கோட்பாட்டு அபிவிருத்தியாக 1945 ம் ஆண்டு ஒகஸ்ட் 8ம் திகதி வெளியிடப்பட்ட இலண்டன் பட்டயத்தை [London Charter] அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூரன்பேர்க் தேர்வாய்வு [Nuremberg Trials] காணப்படுகிறது.அத்துடன், குறித்த பட்டயம் சமாதானத்திற்கு எதிரான குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றையும் வரையறை செய்கிறது. சிறீலங்கா மீதான போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவரப்பட்ட போது, ரஷ்யாவும் சீனாவும் தமது 'வீற்றோ' அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருந்தன. அதேவேளை, சிறீலங்கா மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என எந்தவொரு அரசும் இதுவரை இராஜதந்திர காரணங்களுக்காக தனித்து முறையிடவில்லை. அதனால், சிறீலங்கா அரசு இழைத்த போர்குற்றச்சாட்டுக்கள் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்துக்கோ [International Court of Justice- ICJ] அல்லது போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பான தனிநபர்கள் இதுவரை ஆக்கபூர்வமான முறையில் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படாமையால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ [International Criminal Court - ICC] செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை. ஆயினும், இவை எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தில் முதலாவது முறைப்பாட்மை பிரித்தானிய 1947 மே 22 ம் திகதி அல்பானியாவுக்கு எதிராக மேற்கொண்டிருந்தது. அதே பிரித்தானியாவே, இன்று சிறீலங்கா தரப்பு மேற்கொண்ட போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என முன்நிற்கிறது. அதேவேளை, இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிபெறும் இன்னொரு மார்க்கமாக, இத்தாலியில் ஸ்தாபிக்கப்பட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் [Permanent Peoples' Tribunal] திகழ்கிறது. இது அரசுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும், சுயாதீனமான ஒரு கட்டமைப்பாகவும் இயங்குகிறது. இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றமே, சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணையை கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடாத்தியது. விசாரணையின் முடிவில், சிறீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் அநீதியை இழைத்துள்ளதாக தீர்ப்பு வழங்கியது. இந்த அமைப்பு, உலகின் முதலாவது இனப்படுகொலையான ஆர்மேனியா இனப்படுகொலை [Genocide] தொடர்பான முக்கியத்துவம் மிகுந்த தீர்ப்பை 1984 ஏப்ரல் 16ல் வழங்கியிருந்தது. ஆகவே, சிறீலங்கா அரசாங்கம் தொடர்பாக நிரந்தர மக்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் மிக்கது எனக் கருதலாம். அந்த தீர்ப்பில், சிறீலங்கா அரசாங்கம் போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றை புரிந்ததாகவும், சிறீலங்கா அரசாங்கம் மீதான இனப்படுகொலை தொடர்பான முறைப்பாடுகளுக்கு மேலதிக விசாரணை தேவை மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமைக்கு சர்வதேச சமுகமே பொறுப்பு, குறிப்பாக அமெரிக்காவும் பிரித்தானியாவுமே இந்த பொறுப்பினை பகிர்ந்துகொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பு வெளியாகி சுமார், இரண்டரை மாதங்கள் கழிந்த நிலையில், கடந்த காலத்தில் சிறீலங்காவுக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக பிரித்தானிய மனவருத்தம் தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் காலப்பகுதியில் சிறீலங்காவுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அறியவருகிறது. அத்துடன், ஐ.நா செயலாளர் நாயகம் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை, சிறீலங்கா அரசின் மறைமுகச்செயற்பாடுகள் காரணமாக அணிசேர நாடுகள் [Non- Aligned Movement] ஆரம்பத்தில் எதிர்த்திருந்தன. ஆனால், தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அந்த விசாரணைக்குழுவுக்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளன. இதில், பிரித்தானியாவின் வகிபாகத்தால் சிறீலங்கா தரப்புகள் சினம்கொண்டுள்ளன. அதேவேளை, மனித உரிமை நிலைகள் மோசமடைந்து வருவதால், சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் [GSP+] சலுகை இடைநிறுத்தப்பட்டது. இதிலும் பிரித்தானிய முக்கிய பங்கு வகித்தது. இவை சிறீலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் நெருக்கடியை கோடிட்டுக் காட்டுகின்றன. அதேவேளை, பர்மாவில் [மியான்மார்] நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா அண்மையில் அறிவித்திருந்தமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இது, சீனாவுக்கு விரும்பத்தக்கதல்ல. ஆயினும், எதிர்ப்புகளை ஒரு புறம் தள்ளியபடி, பிரித்தானிய முக்கியமான ஒரு நகர்வை துணிகரமாக மேற்கொள்கிறது. அதேவேளை, சிறீலங்கா தொடர்பாக சீனா தொடர்ந்தும் ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. சீனாவின் அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களை கவனத்திற்கொள்ளும் போது, ஈரானுடன் ஒப்பிடுமிடத்து சிறீலங்கா சீனாவுக்கு ஒரு சிறிய பகுதிதான். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அண்மையில் மூன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தீர்மானங்களை சீனா எதிர்க்கவில்லையென்பது முக்கியத்துவம் மிக்கது.இதில், மேற்குலகின் இராஜதந்திரம் செல்வாக்கு செலுத்தியது. ஆகவே, மேற்குலகால் சிறீலங்காமீது முன்னெடுக்கப்படும் போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்காத தன்மை தோன்றக்கூடிய சாத்தியப்பாடுகள் முன்னரை விட தற்போது அதிகமாகத் தென்படுகின்றன. அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதனை முறியடிக்கத் துணைபுரிந்த இந்தியா, தற்போது அணிசேர நாடுகள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு எதிராக இதுவரை எத்தகைய நடவடிக்கைகளிலும் இறங்காமல் உள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இது, இந்தியா இலங்கைத் தீவு தொடர்பாக எடுக்க இருக்கும் கொள்கைமாற்றம் ஒன்றிற்கான ஆரம்பப் புள்ளியா என்ற வினாவை எழுப்புகிறது. அத்துடன், இராணுவப் பயிற்சிகள் தொடர்பாகவும், அதில் சிறீலங்காவிலும், அமெரிக்காவிலும் குறித்த நாட்டுப் படையினர் பங்குபற்றுவது தொடர்பாக உருவான முறுகல் நிலை உச்சநிலையை தொட்டுநிற்கிறது. இது, சிறீலங்கா, பிரித்தானியாவுடன் மட்டுமல்ல அமெரிக்காவுடனும் முரண்பாட்டுநிலையை தொடர்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே, அமெரிக்காவும் பிரித்தானியாவும் முதன்நிலை வகிக்கும் சர்வதேச சமூகத்தோடு, குறிப்பாக மேற்குலகோடு சிறீலங்கா அரசு வேண்டத்தகாத விளைவுகளை உண்டாக்கக்கூடிய முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது. மேலே கூறப்பட்ட பல புள்ளிகளையும் ஒன்றாக இணைக்கும் போது ஒரு கோலம் உருவாகிறது. இந்தக்கோலம், சிறீலங்கா வரலாற்றில் என்றுமில்லாத நெருக்கடியை சர்வதேச ரீதியாக எதிர்கொள்ளப்போகிறது என்பதற்கான குறிகாட்டியாகும். இதனை ஈழத்தமிழ் மக்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பது அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் காத்திரமான பங்கினை வகிக்கும்.




ஈழத் தமிழருக்கெதிரான இந்தியாவின் நயவஞ்சகம் மேலோங்குகின்றது

ஈழத் தமிழர் மூன்று தசாப்தங்களாக அறவழிப்போராட்டத்தின் மூலமாக வெல்லமுடியாத அரசியல் அபிலாசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரத் தேவைப்பட்ட ஒரே ஆயுதம் பல ஈழத் தமிழ் போராளிகளை வளர்த்து தமக்குள்ளே அடிபட்டு தமிழீழத் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்க அயராது உழைத்த நாடு தான் இந்தியா.
விடுதலைப் புலிகளினால் பிற தமிழ் ஆயுதக் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டு பின்னர் புலிகளே ஈழத் தமிழரின் தேசியத் தலைமை என்கின்ற அளவு அபார வளர்ச்சி பெற்று நின்ற வேளை இந்தியாவினால் அதனை சகித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. புலிகளை பலம் இழக்கச் செய்து அவர்களின் ஆயுதப் போராட்டத்தை மழுங்கடிக்க ஒரே வழி அந்த அமைப்பைத் தடை செய்வது ஒன்றுதான் வழி என்று எண்ணிய இந்தியா குறிப்பாக 80 மற்றும் 90-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டு மக்களுக்குள் அமோக ஆதரவைபெற்று ஏ.கே-47 துப்பாக்கிகளுடன் தமிழ் நாடு காவல் துறையினரின் வாகனங்களிலையே தமிழ் நாடு வீதிகளில் வலம் வந்த விடுதலைப் புலிகளை முடக்கவேண்டுமாயின் தமிழ் நாட்டு மக்கள் நம்பும்படியான சம்பவம் நடக்க வேண்டும்.
இந்திய இராணுவம் ஈழத்தை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்ட பின்னர் மூக்குடைபட்ட இந்திய வல்லரசுக்குத் தேவைபட்டது புலிகளை எப்படியாயினும் தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து பிரித்தெடுத்து அழிக்கப்பட வேண்டும் என்பதே. ராஜீவ் காந்தி கொலை ஊடாக இந்தியா இதனை இலகுவாகவே செய்து முடித்து விட்டது. ஆனால் ஈழத் தமிழருக்கெதிரான இந்தியாவின் நயவஞ்சகச் செயல்கள் மிக உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
புலிகளை அடக்கத் தேவைப்பட்ட ஆயுதம் தான் ராஜீவ் கொலை. தனது தாயார் இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற அனைத்து மாநில மக்களின் ஆதரவு பெற்ற இளம் வயதான மற்றும் கவர்ச்சியான தலைவர்கள் யாரும் இல்லை. பெரும்பான்மையான இந்திய மக்கள் ராஜீவ் ஏதோ இந்தியாவிற்கு சுதந்திரம் எடுத்துக் கொடுத்த மகாத்மா காந்தியின் வாரிசு என்று தப்பாக எண்ணுகின்றார்கள். எது என்னவாகினும் கவர்ச்சியான இளம் தலைவர் மற்றும் காந்தி என்ற பெயர் (குறிப்பு: ராஜீவின் தந்தையார் ஒரு பெர்சியன்.
இவரின் பெயர் பெரோஸ் காந்தி) ஆகியவற்றுக்கு மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொள்முதல் செய்யும் வகையிலும், காங்கிரசின் வாரிசு அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் தேர்வு செய்யப்பட்டார். விமான ஓட்டியாகப் பயிற்சி பெற்ற ராஜீவ் அரசியல் பாண்டித்துவம் எதுவுமின்றி இந்தியாவின் ஏழாவது பிரதம மந்திரியாக தனது 40 ஆவது வயதில் 1984-ஆம் ஆண்டு பதவிக்கு வந்து 1989-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
ரோ மற்றும் சிபிஐயினால் மரணிக்கப்பட்ட ராஜீவ்
இந்தியாவின் வெளிவிவகாரப் புலனாய்வுக்கு பொறுப்பான ரோவின் சூழ்ச்சி என்னவென்றால் புலிகளை தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து ஓரம் கட்டி அவர்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின் அவர்களை முடக்கித் தனிமைப்படுத்த வேண்டும். எனவே இந்தியாவிற்கு ஒரு காரணி தேவைப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்கமைவாய்போல் 1991-ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ் நாடு வந்தார்.
இவர் யாருக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்தாரோ அவர்களில் பலர் ராஜீவின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக மீனம்பாக்கம் வானுர்தி நிலையம் வந்தடைந்த ராஜீவ், பல சந்திகளில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்காற்றி பின்னர் நடு இரவு தாண்டும் வேளை அதாவது மே 21 , 1991 சிறிபெரும்புதூர் சென்றடைந்தார். சிறிது நேரத்தில் மனிதக்குண்டுதாரியினால் கொலை செய்யப்பட்டார். இவருடன் 18 பேரும் சாவைத் தழுவினர்.
ஆனால் முக்கிய பல புள்ளிகள் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் இறக்கவில்லை என்பது தான் வியப்பான சம்பவம். கொலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் றோவினால் உலகம் முழுவதும் செய்தி பரப்பப்பட்டது. அது என்னவென்றால் தமது தலைவரை புலிகள் கொன்றுவிட்டார்களாம். அடுத்த ஒரு சில மணிநேரத்திற்குள் தமிழ் நாடு முழுவதும் துண்டுப்பிரசுரங்களும் மற்றும் சுவர்களில் புலிகளுக்கெதிரான வாசகங்கள் ஒட்டப்பட்டன. குறிப்பாக சில வாசகங்கள் இப்படியாக அமைந்திருந்தன:
"காட்டில் இருக்க வேண்டிய புலியை நாட்டுக்குள் விட்டதால் வந்த விளைவு தான் ராஜீவ் கொலை", "புலியை நாட்டுக்குள் விட்ட கருணாநிதியை ஒழிக்கவேண்டும்" மற்றும் "திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடிக்க வேண்டும்".
இப்படியான வாசகங்கள் தமிழ் நாட்டு மக்களிடம் ஈழத் தமிழருக்கு மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு எதிராக அமைந்திருந்தது. பல ஈழத் தமிழர் தாக்கப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சார மேடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் பல முன்னணி திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்திவிடப்பட்டன. இப்படியாக ராஜீவ் கொலையை ஈழத் தமிழருக்கு எதிராக ஏவி விட்டு அவர்களின் தானத் தலைமையை பழி தீர்த்து அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அடியோடு முடக்கலாம் என்ற தோரணையில் ரோ களம் இறங்கியது.
அதிலும் வெற்றி கண்டது.ஈழத் தமிழர் ராஜீவின் தாயாரின் தார்மீக ஆதரவை குறிப்பாக ஈழத் தமிழர் 1983-ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடைபெற்ற தமிழ் இனச்சுத்திகரிப்பில் இருந்து பல லட்சம் தமிழரை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றார். மேலும் ஈழத் தமிழர் உலகம் முழுவதும் இன்று பரந்து விரிந்து கிடப்பதற்கும் அன்னை இந்திராவின் செயல் உதவியது. ஈழத் தமிழினம் ஒரு போதும் ராஜீவை கொலை செய்ய முனைந்திருக்க மாட்டார்கள். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை முன் வைக்க ரோ பல காரணிகளைத் தேடியது அதிலும் வெற்றி கண்டது.
குறிப்பாக ராஜீவ் கொலை விசாரணையை சிபிஐ என்ற இந்திய உள் விவகாரங்களுக்குப் பொறுப்பான குழு பொறுப்பெடுத்தது. இதன் விசாரணைக் குழுத் தலைவராக கார்த்திகேயன் என்ற ஈழத் தமிழருக்கு எதிரான நபரை நியமித்தார்கள். அவர்களின் விசாரணை ஒரு பக்க சார்பாகவே நடைபெற்றது. குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் பரம விரோதியாகவே ராஜீவைப் பார்த்ததாகவும் மற்றும் புளொட் இயக்கமும் ராஜீவை விரோதியாக பார்த்ததாகவும் கதையை புனைந்தார்கள்.
அவர்களின் காரணம் என்னவென்றால் ராஜீவினால் அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் 12 புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அதாவது குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் மற்றும் திலீபனின் சாவுகளுக்கு ராஜீவே காரணம் என்று பிரபாகரன் கருதி ராஜீவை பழி தீர்க்கத் தான் கொலைசெய்யப்பட்டார் என்றும் அத்துடன் புளொட் இயக்கமும் ராஜீவை பரம எதிரியாக பார்த்ததாகவும் காரணம் அவர்கள் மாலத்தீவை தமது கட்டுப்பாட்டின்கீழ் 1988-ஆம் ஆண்டு கொண்டுவந்தார்கள். ஆனால் ராஜீவ் உடனடியாகவே கடற்படையை அனுப்பி புளொட் உறுப்பினர்களைக் கொன்றும் கைது செய்தும் மாலத்தீவை மீட்டார்கள்.
இதனால் புளொட் தலைமை ராஜீவை பரம எதிரியாகவே பார்த்ததாகவும் கதை சோடிக்கப்பட்டு பின்னர் ராஜீவ் மரண தீர்ப்பிலும் நீதிபதிகள் இந்த கூற்றுக்களை ஏற்பதாகவும் 26 நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. நளினி, முருகன், பேரறிவாளன், மற்றும் சாந்தன் ஆகியோர் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு பல விதமான தண்டனைகள் அளிக்கப்பட்டன. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் மகளிர் அமைப்பின் தலைவி அகிலா ஆகிய மூவரையும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு தேடும் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள்.
இவர்கள் மீதான விசாரணை இன்னும் நிலுவையிலேயே உள்ளது. அகிலா ஏற்கனவே இறந்து விட்டார் மற்ற இருவரும் கடந்த வருடம் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப் போர் வரை களத்தில் நின்று பின்னர் சிறிலங்காவினால் இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு விட்டதாக சிறிலங்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரோ மற்றும் சிபிஐயினால் அரங்கேற்றப்பட்ட நாடகத்திற்கு வேண்டிய ஒரே உயிர் தான் ராஜீவ். காரணம் இவர் ஒரு மக்களைக் கவர்ந்த இளம் தலைவர் மற்றும் இவருடன் இணைக்கப்படிருக்கும் பெயர் அதாவது காந்தி என்ற பெயர் மற்றும் நேரு வம்சாவழி என்ற பெருமை. ஆக இவரின் இழப்பினால் தமிழ் நாட்டு மக்களின் மனங்களை மாற்றி ஒரு உளவியல் யுத்த புரட்சி மூலமாக விடுதலைப் புலிகள் மீது கொண்டிருந்த அனுதாபத்தை அடியோடு அழிக்கலாம் என்ற தோரணையில் காரியத்தைக் கச்செண்டு முடித்துவிட்டது ரோ மற்றும் சிபிஐ.
நளினி மீதான தீர்ப்பு ‘சட்டம் ஒரு இருட்டறை' என்பதைக் காட்டுகின்றது
ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான நளினியை (வயது 44) முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த வாரம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான நளினியின் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 24 , 2000 அன்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நளினி, நன்னடத்தை அடிப்படையில் தம்மை தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் முன்பே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதனை எதிர்த்து ஜனதாக் கட்சியின் தலைவரும் இந்தியாவின் அரசியல் கோமாளியாக வர்ணிக்கப்படும் சுப்ரமணியசாமி மனுவை தாக்கல் செய்திருந்தார். நளினி சார்பாக அவரின் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆயராகினார்.
நளினி ஏற்கனவே 18 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவிட்டார். அத்துடன் இவர் சிறையில் இருந்தபடியே முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்துவிட்டார். நீதிபதிகள் கடதர்மாராவ், சசிதரன் முன் இந்த விசாரணை கடந்த மாதம் வந்தது. முன் கூட்டி விடுதலை செய்ய கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு மார்ச் 11 அன்று அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார். முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி நளினியும் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு கூடி நளினி விடுதலை தொடர்பாக விசாரணை நடத்தியது. தமிழகத்தின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கோர்ட்டில் கூறியதாவது: ஆலோசனைக் குழுவின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது. அதை அரசு பரிசீலித்து வருகிறது. இந்த அறிக்கை, அரசை கட்டுப்படுத்தாது. ஆலோசனைக் குழுவிடம் மேலும் சில விவரங்களை உள்துறை கோரியிருப்பதாக அறிகிறேன். அரசு இந்த விஷயத்தில் முடிவெடுக்கும். அதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும்.
அதற்கு முன், அரசு முடிவெடுத்தால், கோர்ட்டுக்கு தெரிவிக்கிறேன்.இவ்வாறு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறினார். அதன்படியே நீதிபதிகளும் இரு வார கால அவகாசம் தமிழ் நாடு அரசிற்கு அளித்தது. பின்னர் தமிழக அரசு 10 விடயங்களை காட்டி நளினியின் விடுவிப்பை எதிர்த்தது. அதன் அடிப்படையில் நீதிபதிகளும் தமிழக அரசின் காரணிகளை ஏற்று நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.தமிழக அரசின் ஆலோசனைக் குழு அறிக்கையில் கூறப்படிருப்பதாவன:
(1) நளினி ராஜிவை கொலை செய்ய உதவியாக இருந்திருக்கிறார்; (2) இந்த கொலை வழக்கில் இவரது முக்கிய தன்மை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது; (3) குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்; (4) சதித்திட்டத்தில் முக்கிய பங்கு உண்டு; (5) கொலை நடந்த விஷயத்தில் விவரம் அனைத்தும் நளினிக்கு தெரியும்; (6) கணவர் இல்லை என ஏற்க முடியாது. இவர் மரணத்தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்; (7) அதிக கல்வி தகுதி உள்ளவர் என்பதற்காக அவர் ஒழுக்கத்துடன் நடப்பார் என்பது ஏற்க முடியாது; (8) இது வரை நளினி வருத்தமோ ஒப்புதலோ தெரிவிக்கவில்லை; (9) இவர் விடுதலை செய்யப்பட்டால் தாயாருடன் சென்னை ராயப்பேட்டையில் தங்கி இருப்பேன் என்பதும் நம்பும்படியாக இல்லை. அதே நேரத்தில் அங்கு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடம். அத்தோடு சென்னையில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்; (10) இவர் 18 வருடம் சிறையில் இருந்தார் என்பதை ஏற்று விடுதலை செய்ய முடியாது.
தமிழக ஆலோசனை குழுவின் வாதங்கள் அரசியல் உள்நோக்கத்துடன் இந்திய மக்களின் உணர்வுகளை ஈழத் தமிழருக்கெதிராக குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகத் தான் இதனைப் பார்க்கவேண்டும். மற்றும் நளினியின் விடுதலைக்கும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கும் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு என்பது வேடிக்கையாக உள்ளது. நளினி எந்தவொரு காலகட்டத்திலும் அமெரிக்காவுக்கு எதிராக எந்த கருத்தையோ அல்லது பகைமையை கொண்டவரல்ல.
அப்படியிருக்க அவர் என்ன மனநோயாளியா அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக சதி வேலை செய்ய. ஆக தமிழக அரசின் பரிந்துரைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.சட்டவாளர்களின் கருத்தின்படி ஆயுள் தண்டனை என்பதன் பொருள் இந்தியச் சட்டங்களில் சரியான வரையறை செய்யப்படாத நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க பல்வேறு இந்திய மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன.
தமிழ் நாட்டில் 10 ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு சிறைவாசி, அவர் மீது வேறு எந்தப் புகார்களும் இல்லாத நிலையில் (ஆயுள் தண்டனை என்பதற்கான கால அளவு சரியாக நிர்ணயிக்கபடாததால்) முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்படுகிறார். இவ்வாறான முன் விடுதலைக்கு தம்மைப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு சிறைவாசிக்கும் உண்டு. இந்த உரிமையை நளினியும் பயன்படுத்துகிறார். ஆனால் மற்றக் கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, நளினி விவகாரத்தில் மட்டும் ஏனோ தயங்குகிறது.
இந்தத் தயக்கத்திற்கு நளினி விடுதலை குறித்து சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்தும் மற்றும் ஈழத் தமிழருக்கு ஆதரவான ஒரு நிலை மீண்டும் தமிழ் நாட்டில் வந்துவிடக்கூடாதென ரோ மற்றும் ஈழத் தமிழருக்கெதிரான இந்திய அரசியல்வாதிகளினால் வகுக்கப்பட்ட திட்டமும் தான். பலர் பல கேள்விகளை கேட்கலாம் எதற்காக நளினியின் விடுதலையுடன் ஈழத் தமிழரின் போராட்டத்தை சம்பந்தப்படுத்துவதென்று. ராஜீவ் கொலை விசாரணை ஒரு முடிவுக்கு வந்து அனைவரும் விடுதலை பெற்று மீண்டும் தமிழ் நாட்டு மக்கள் முன் ஈழப் போராட்டத்தை முன்னெடுப்பதனால் மீண்டும் ஈழப் போராட்டம் புத்துயிர் பெறும் என்று ரோ கணிப்பிட்டுள்ளது.
ஆகவே ராஜீவ் மரணத்தை காரணியாக வைத்தே ரோ தனது வியூகங்களை ஈழத் தமிழரின் போராட்டத்தை அடக்க முனைகின்றது. ஏதோ மறைந்த அன்டன் பாலசிங்கம் 2006-ஆம் ஆண்டு இந்திய தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளே ராஜீவை கொன்றார்கள் என்ற தொனியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக ரோ சூழ்ச்சி நடவடிக்கையை எடுத்தது. பாலசிங்கம் அவர்களும் தனது பாமர பேச்சின் மூலம் இந்திய மக்களிடம் ஏதோ விடுதலைப் புலிகள் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார்.
உண்மையிலையே பாலசிங்கம் அவர்கள் ராஜீவ் வழக்கில் சேர்க்கப்படவுமில்லை அத்துடன் அவர் விடுதலிப்புலிகளின் தலைமைப்பீடத்தினால் ஒரு அரசியல் ஆலோசகராகவே பார்க்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் இராணுவ தந்திரோபாயங்களிலோ அல்லது தாக்குதல் முடிவு எடுக்கும் பொறுப்பு பாலசிங்கம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. ஆகவே அவரின் கூற்றை ஒரு வாய்மொழிச் சாட்கியாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஆக நளினியின் விடுதலை தொடர்பான தீர்ப்பு ‘சட்டம் ஒரு இருட்டறை' என்பதை காட்டி நிற்கின்றது.இந்திய அரசின் அராஜக நடவடிக்கைகள் மென்மேலும் ஈழத் தமிழருக்கெதிராகவும் அவர்களின் அரசியல் அபிலாசகளுக்கெதிராகவும் இரட்டிப்பாக்கப் பட்டிருக்கின்றது. முதலில் ஈழத் தமிழரின் அரசியல் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்து பின்னர் ஆயுதப் போராட்டத்துக்கு நேரடி உதவி அளித்துப் பின்னர் விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தைக் கண்டு வியப்படைந்து அவர்களைத் தோற்கடிக்க ஒரே வழி தமிழ் நாட்டு மக்களிடம் இருந்த ஆதரவை முற்றிலுமாக இல்லாதொழித்து அவர்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படி கடந்த வருடம் முல்லைத்தீவின் நந்திக்கடலில் எல்லாமே முடிந்ததாக ரோ மற்றும் சிறீலங்கா அறிவித்ததான செய்தி இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளமுடியும்.
ஆக ராஜீவ் பலிக்கடா ஆக்கப்பட்டார். ஒரு பொய் சொல்ல ஆயிரம் பொய்யை சொல்லவேண்டி வந்தது என்ற பழமொழிக்கேற்ப ஒரு கொலையை செய்யப் போய் பல ஆயிரம் உயிரை எடுத்த நிகழ்வுதான் கடந்த வருடத்துடன் முடிந்த நான்காம் ஈழப் போர். ஆக இந்தியா தனது அராயகத்தை ஈழத் தமிழருக்கு எதிராக இரட்டிப்பாக்கியுள்ளது. "அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மைப் புழுவை வாட்டுவதுபோல் இருக்கும்"; என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்குப்படி நிச்சயம் காலம் வரும். இந்தியா தான் செய்து கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்கு எதிரான அராயகம் வெளிக்கொணரப்பட்டு எப்படி வெப்பம் புழுவை வாட்டுமோ அதைவிட மோசமாக வாடும் நிலை உருவாகும். நீதி நிலைக்கும் காலம் வெகுதொலைவிலில்லை என்ற நம்பிக்கையுடன் பயணத்தை தொடருவோமாக.




"விடுதலைக்குத் தோள்கொடுத்த சுவிஸ்வாழ் உறவுகளே" "விடுதலைப் புலிகளின் தியாகம் வீண்போகாது" உறுதியுடன் செயலாற்றுவோம் முன்வாருங்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆற்றிய பங்களிப்பையும் அதற்காக பணியாளர்கள் வழங்கி வந்த பெரும் உழைப்பையும் நாம் நன்கு அறிவோம். இந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெற்றிக்கும் நீங்கள் உறுதுணையாக நிற்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். எமது எதிர்பார்ப்புக்கு உறுதுணையாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக சுவிஸ் நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய 10 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை மே 2 ஆம் திகதி ஒழுங்கு செய்து நடாத்துவதற்கான சுவிஸ் செயற்பாட்டுக்குழுவை நாம் நியமித்துள்ளோம். இக் குழுவில் எல்லோரின் ஒன்றுபட்ட பேராதரவும் பங்குபற்றலும் இருத்தல் அவசியமானதென நாம் உணர்கிறோம்.
இதன் நிமித்தம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விபரங்களையும் இத் திட்டம் தொடர்பாக உங்கள் மத்தியில் இருக்கக்கூடிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களையும் கலந்து பேசுவதற்கான சந்திப்பொன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. என குறிப்பிட்டு சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பிதழின் விபரம் வருமாறு

அன்புடையீர்!
11.04.2010, பிற்பகல்: 3 மணிக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது குறித்த சந்திப்பு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதனைத் தாங்கள் அறிவீர்கள். இவ்வாறு தேர்தல்களை குறிப்பிட்ட காலத்தில் நடாத்தி முடித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான வழிகாட்டிக் கோட்பாடுகளில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும் என மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட உழைப்பது நமது தாயக விடுதலையை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆற்றிய பங்களிப்பையும் அதற்காக பணியாளர்கள் வழங்கி வந்த பெரும் உழைப்பையும் நாம் நன்கு அறிவோம். இந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெற்றிக்கும் நீங்கள் உறுதுணையாக நிற்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும் இவ் அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு சுவிசில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படவுள்ளதேர்தல் தொடர்பாகவும் சுவிசின் அனைத்துப்பாகங்களிலும் நாடு கடந்த அரசு தொடர்பான கருத்தமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இம்மாதம் முதல் இடம் பெற்றுவரும் கருத்தமர்வுகளில் இணப்பாளர் திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் செய்மதிமூலமான தொடர்பாடலூடாக பங்கு பற்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தேர்தல் விளக்கங்களை வழங்குவதோடு மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தும் வருகின்றார் . எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் பெருவாரியாக அணிதிரண்டு வாக்களிப்பதன் ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு காத்திரமான செய்தியை தெரிவிக்க முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு இணைப்பாளர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். சுவிசின் பிரதான நகரங்களில் இவ்வார இறுதியில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான விளக்கக்கூட்டங்களில் காணொலி ஊடாக நேரடியாக உரையாற்றும் போதே உருத்ரகுமாரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமென்ற அரசியல் வலுமையம், ஜனநாயகப் பண்பாட்டின் உச்ச வெளிப்பாடாக எமது சமூகத்திலிருந்து வெளிப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு. இம்முயற்சியின் பலம் என்பது மக்கள் பலத்திலிருந்துதான் கட்டியெழுப்பப்படவுள்ளது. எனவே புலம்பெயர் தமிழ் மக்கள், மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில், தமிழர் தாயகத்தில் வாக்களிப்பில் பங்கேற்கும் மக்களின் தொகையை ஒத்ததாக பங்கேற்று வாக்களிக்கும் பட்சத்தில் அது அனைத்துலக சமூகத்தின் அவதானிப்பினைப்பெறும். மே 18-19ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டுவதன் மூலம், ஈழத் தமிழினம் நொந்துபோன ஒரு இனமாக, அவர்களின் விடுதலை உணர்வைச் சிதைத்துவிட்டதாக கொக்கரிக்கும் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு தகுந்த பதிலடியைக் கொடுப்பதோடு, தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை உலகறியச் செய்ய முடியுமெனவும் அவர் உறுதிபடக் கூறினார்
அந்த வகையில் சுவிஸ் சூரிச்சில் நடைபெறும் பிரதான கருத்தமர்விலும் சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் பங்கு பற்றுவதுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்பாட்டிலும் இணைத்து நமது வரலாற்றுப்பணியை ஆற்றிட ஒன்றிணையுமாறு உரிமையுடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான சுவிஸ் செயற்குழுவின் அனைத்துலகச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுகூடல் நடைபெறும் இடம்: சூரிச்
Salzweg 1, 8048 Zurich 11.04.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி தொடர்புகளுக்கு: சசி 078 850 90 22
காலம்: 11.04.2010, பிற்பகல்: 3.00 மணி
கூட்ட ஏற்பாடுகள்:
நாடுகடந்த அரசு அமைப்பதற்கான சுவிஸ் செயற்பாட்டுக் குழு அனைத்துலகச் செயலகம், தொடர்புகளுக்கு: info@govtamileelam.org
மேலதிக தகவல்களை விபரமாக அறிந்து கொள்ள
http://govtamileelam.org/gov/ அல்லது
http://www.tgte-swiss.ch/,

தொடர்புகளுக்கு: 022 734 00 63





Friday, April 9, 2010

தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்ட போதும், விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்களின் எதிர்காலம் தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது: த கார்டியன்

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரிக்கு உட்புறமாக அமைந்துள்ள முகாம் ஒன்றில் மாலை நெருங்கிக்கொண்டிருந்த வேளை உடைத்த ஒலிபெருக்கியில் சில நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த கல்லூரி கடந்த வருடம் போர் நிறைவுபெற்ற நாளில் இருந்து தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொதிக்கும் வெய்யிலில், வியர்வை வழிய முகாமுக்கு வெளிப்புறம் மக்கள் காத்திருந்தனர். வீதியோரத்தில் பெற்றோரும், சகோதரிகளும், பிள்ளைகளும் நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஒவ்வொரு புதிய பெயர்கள் அறிவிக்கப்படும் போதும், கூட்டத்தில் இருந்து புதியவர்கள் எழுந்து நின்றனர். பின்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனை மேசைக்கு சென்றனர். பின்னர் அலுவலகத்திற்கு சென்றனர். அதன் பின்னரே வாசலுக்கு வந்தனர். அங்கு தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
280,000 இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினரை தான் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறிலங்கா அரசு மீள்குடியேற்றியுள்ளது. ஆனாலும் விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்புள்ளவர்கள் தற்போதும் தடுப்பு முகாம்களில் தான் உள்ளனர்.
இன்று வவுனியா கல்லூரியில் இருந்து வெளியேறுவதற்கு 700 பேருக்கு அனுமதிகள் கிடைத்துள்ளன. வேறு முகாம்களில் இருந்த 400 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விடுவிக்கப்பட்ட அனைவரும் உடல் ரீதியாக ஊனமடைந்தவர்கள். அவர்களால் அரசுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட முடியாது. செம்மண் தரையின் ஊடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட மலிவான செயற்கை அவயவங்கள் மற்றும் இயங்கு சாதனங்களை பயன்படுத்தி அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களுக்கு என சிறீலங்கா இராணுவம் பல புனர்வாழ்வு முகாம்களை நடத்தி வருகின்றது. அங்கு ஆங்கிலக் கல்வியும், தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இன்று விடுதலை செய்யப்பட்டவர்களை விட மேலும் 9,000 விடுதலைப்புலிகளும், 75,000 பொதுமக்களும் தற்போதும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போரின் முடிவைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்களின் தொகையில் இரு 25 விகிதமாகும். அவர்கள் திறந்த தடுப்பு முகாங்களில் உள்ளனர். வெளியில் சென்று வருவதற்கு அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இனங்களுக்கு இடையிலான பிளவுகளை சீர் செய்வதற்கு அரசு சில அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. வடபகுதியில் பெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக கடந்த வாரம் வவுனியா வந்த அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்திருந்தார். அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு சென்றிருந்தார்.
இன்று விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் மிகப்பெரும் துன்பமான நிகழ்வுகளை சந்தித்தவர்கள். அவர்கள் கூறும் கதைகள் துன்பமானவை. காயமடைந்த தனது தாயாருடன் கடந்த வருடம் மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்ததாக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் சுபாஸ்கரன் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் மத்தியில் எறிகணை வீழ்ந்த வெடித்ததால் அவரின் தாயார் காயமடைந்திருந்தார். சூரியகுமாரின் தந்தையாரும், இரு சகோதரிகளும் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் இடம்பெயர்ந்து சென்றபோது இந்த துன்பமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. அவரின் வீடு அழிவடைந்துவிட்டது, வீட்டை சுற்றி உள்ள நிலங்களில் மிதி வெடிகளின் அபாயம் உண்டு என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பத்து மாதங்களாக தடுப்புக்காவலில் இருந்த சூரியகுமார் (28) தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வேறு ஒரு முகாமில் சிறிய தற்காலிக கூடாரத்தில் வசிக்கும் தனது எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருடன் இணைந்து வாழத் திட்டமிட்டுள்ளார்.
முகாமில் வசதிகள் மிகவும் குறைவாக உள்ளபோதும், அவர்களால் தமது சொந்த கிராமத்திற்கு திரும்ப முடியாது. அதற்கான அனுமதியை படைத்தரப்பு வழங்கவில்லை. அவர்களின் கிராமத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு மக்களை மீள்குடியமர்த்துவதில் அக்கறை கொண்டுள்ளது ஆனால் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என வவுனியாவை தளமாக கொண்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று விடுவிக்கப்பட்ட பலர் மெனிக்பாம் முகாமை நோக்கி செல்கின்றனர். தனது மருமகனை பார்வையிடுவதற்கு மகேந்திரன் நாகேஸ்வரி (44) என்பவர் மாலை வேளையில் வந்து சேர்ந்தார். அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து பணியாற்றிய போது ஒரு காலை இழந்திருந்தார்.
நாகேஸ்வரி இறுதியாக மாலை 4 மணியளவில் தான் வாசலை அடைந்தார். மிகவும் சிறிய குடிசைக்குள் 10 பேர் வசிப்பதாக தெரிவித்துள்ள அவர், தகரத்தால் அமைக்கப்பட்ட கொட்டகை கடும் வெப்பமாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கணேஸ் தனுசன் (24) என்பவர் விடுதலைப்புலிகளின் படையணியில் வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் பணிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் போர் நிறைவுபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோதலில் அவர் ஒரு கையை இழந்திருந்தார்.
தனது உறவினர்களை தேடிக் கண்டுபிடிப்பதே தனது முதன்மையான தொழில் என அவர் தெரிவித்துள்ளார். அவரின் பெற்றோர்கள் முகாம்களில் வாழ்கின்றனர். தகரங்களினாலும், சாக்குகளினாலும் கட்டப்பட்ட அந்த தற்காலிக குடியிருப்புக்கள் காற்று வீசும் போது நிலையாக நிற்பதில்லை.
முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த பிரதேசத்தில் உள்ள வீதியோரங்களில் இவ்வாறான பல ஆயிரம் குடிசைகளே காணப்படுகின்றன. தமது கிராமங்களுக்கு மக்கள் திரும்பியுள்ள போதும் அவர்கள் தாம் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை எப்போதும் தம்முடன் வைத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு பிளாஸ்ரிக் பாத்திரங்களும், அரசியும், பருப்பும், மாவும் மட்டுமே வழங்கப்படுகின்றது.எனது உறவினர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை எனவே அவர்களை கண்டறிவது கடினமாக இருக்கலாம் என தனுசன் மேலும் தெரிவித்துள்ளார்.
சூரியன் மறையும் நேரம் நெருக்கியது, ஆனால் தமது உறவினர்களை பார்ப்பதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எழு பிள்ளைகளின் தாயாரான குமாரகுரு செனெஸ்ரா (34) என்பவர் தனது கணவரை பார்ப்பதற்காக காத்திருந்தார். அவரின் கணவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போரிட்டவர். அவர் கடந்த 10 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். செனெஸ்ரா தனது இளைய மகனை கையில் வைத்திருந்தார்.
இரவு வருவதற்கு முன்னர் அவர் வெளியில் வந்தால் நல்லது, அவர் தனது மகனை பார்க்க முடியும். அவர் இன்றுவரை தனது மகனை காணவில்லை என அவர் மேலும் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




"மே 19"

உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம். இனிமேல் எந்தக் காலத்திலும் எந்த ஒரு சமூகமும் - எந்த ஒரு தேசிய இனமும் தன்முனைப்புடன் எழுந்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்குடன் - வழங்கப்பட்ட ஒரு எச்சரிக்கை அது. அவ்வாறு தன்னெழுச்சி கொண்டதற்கான தண்டனையைத் தமிழ் தேசிய இனத்திற்கு வழங்கியதன் மூலம் - உலகெங்கும் உள்ள ஏனைய தேசிய இனப் போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு கூட்டுப் பாடம். அண்ணளவாக 45,000 மனித உயிர்கள் பலி எடுக்கப்படுகையில் - வெறும் அறிக்கைகளோடு இந்த உலகம் வாழாது இருந்ததற்கும் அதுவும் ஒரு காரணம். தமிழ் இனத்திற்கு இத்தகைய கொடிய தண்டனை வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் - நமது அரசியல் சுதந்திரத்தினையும் தன்னாட்சி அதிகாரத்தினையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் போராடியதும், அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த ஒரு விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டதும் தான். கடந்த அறுபது ஆண்டு காலத்தில் - சிறிலங்கா அரச இயந்திரத்தினதும், அதன் இராணுவ அடக்குமுறையினதும் பின்புலமாக - ஒட்டுமொத்தமான சிங்கள இனத்தினது மேலாதிக்க மனோபாவம் இருந்துவந்தது. சிங்களத் தேசிய இனத்தின் பேரினவாதச் சித்தாந்தமே - தமிழ் தேசிய இனத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறையின் இயங்கு மையம். அந்தச் சித்தாந்தம் ஒரு வன்முறை வடிவத்தை எடுத்த பின்னணியில் தான், ஒரு தற்காப்பு வழிமுறையாகத் தான், தமிழர்களது ஆயுதப் போராட்டம் தனது வரலாற்றுப் பிறப்பை எடுத்தது. இந்த வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்திருந்தும் கூட - அனைத்துலக சமுதாயம், தமக்கிடையே இருந்த முரண்பாடுகளைக் கூட ஓரத்தில் வைத்துவிட்டு, வெளிப்படையாகவே சிறிலங்கா நிகழ்த்திய இனக்கொலைக்கு முண்டுகொடுத்தது. அதே வேளை - ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூட உரிய முறையில் செயற்படாமல் பாராமுகம் காட்டியது. "Responsibility to Protect" என்பது வெறுமனே ஏட்டில் எழுதி வைப்பதற்கான ஒரு பொறுப்பு என்று மட்டுமே ஆகிப் போனது. நடத்தப்பட்ட ஒர் இனவழிப்பை - அது ஒரு நாட்டின் இறைமைக்கு உட்பட்ட உள் விவகாரம் என்றவிதமாக ஒதுக்கி - கொலைகளில் இருந்து மனித உயிர்களைக் காக்க வேண்டிய தமது பொறுப்பிலிருந்து இந்த உலகம் விலகிக்கொண்டது. பலவீனங்கள் இருந்த போதும், தவறுகள் இழைத்த போதும் - ஒரு மனித சமூகத்தின் விடுதலைக்காக, அந்த சமூகத்தின் அடிப்படையான வாழ்வு உரிமைகளுக்காகப் போராடிய ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தினைத் தண்டித்து அழிக்கத் துணை போனதன் மூலம் - உலகின் ஆதிக்க சக்திகள் அனைத்துமே, தமக்குள் இருந்த மேலாண்மைக் கூட்டு மனோபாவத்தினை 45,000 மனித உயிர்களின் புதைகுழிகளின் மீது பிரகடனம் செய்தன.
ஓராயிரம் வார்த்தைகளுக்கு உள்ளேயும் அடங்காது: இந்த நிலையில் இந்த "மே 19"ஆம் நாளினை வெறுமனே ஈழத் தமிழரின் ஒரு துக்க நாளாகவோ, அல்லது இந்த உலகத்திற்கு எமது துயரத்தை வெளிக்காட்டும் ஒரு சோக நாளாகவோ மட்டும் கைக்கொள்வது போதுமானதாக அமையாது. ஒளிச் சுடர்கள் ஏற்றி, கறுப்புச்சட்டை அணிந்து, மெளன ஊர்வலங்கள் போய், உணவைத் துறந்து - எங்கள் துக்கத்தைப் பகிர்ந்துவிட்டுக் கலைந்து சென்றுவிடாமல், அந்த நாளுக்கு ஒர் ஆழமான அரசியல் அர்த்தத்தை, ஒரு புதிய அனைத்துலகப் பரிமாணத்தை நாம் வழங்க வேண்டும். ஆதலால் - வெறும் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுக்கு ஒரு படி மேலே சென்று - எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை விரிவுபட்ட முறையில் முன்நகர்த்தும் நோக்கோடு - உலகின் வேறு மூலைகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஆதரவளிக்கும் ஒரு நாளாக, அவர்களோடு தோழமை பூணுவதற்கான ஒரு நாளாக, ஒடுக்கப்படுவோர் எல்லோருக்குமான ஒரு நாளாக - "மே 19"-ஐ தமிழர்கள் பிரகடனம் செய்வதே பொருத்தமானதாக இருக்கும். தமது அரசியல்-பொருளாதார-பாதுகாப்பு நலன்களை மட்டுமே முன்னிறுத்தி, சுயநலத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் உலக வல்லரசுகளோடு வளைந்து நெழிந்து செல்ல வேண்டிய தேவைகள் எமக்கு இருப்பினும் கூட - வல்லாதிக்க சக்திகளின் வாசலில் மண்டியிட்டு - பலவீனமாகி - அரசியற் பிச்சைக்காகக் காத்திருப்பதை விடவும், வலிமையற்றுக் கிடக்கும் ஏனைய இனங்களோடு கைகோர்த்து - பலம் பெற்று - எமது உரிமைகளுக்காக நிமிர்வதே சிறந்த வழி. ஈழத் தமிழனத்தின் மீதும் அதன் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் முள்ளிவாய்க்காலில் "மே 19" அன்று நிகழ்த்தப்பட்ட கொடூரம் போன்ற ஒரு துயரம் - நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடுகின்ற வேறு எந்த ஒரு தேசிய இனத்திற்கும் இனிமேல் நிகழக்கூடாது என்பதை உலகின் மனச்சாட்சிக்கு உணர்த்தும் நாளாக "மே 19" பிரகடனப்படுத்தப்பட வேண்டும். உலகின் அடக்கப்படும் தேசிய இனங்கள், வல்லாதிக்க சக்திகளுக்குத் தமது அதிருப்தியை அர்த்தபூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு நாளாக "மே 19" பிரகடனப்படுத்தப்பட வேண்டும். "மே 19"-ற்குப் பின்னாலே வரும் நாட்கள் கூட - அதே அரசியல் பரிமாணங்களோடு - ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அங்கீகாரத்தை ஏற்கெனவே பெற்றிருப்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. மே 25ஆம் நாள் முதல் யூன் 1ஆம் நாள் வரை உள்ள காலத்தினை "தன்னாட்சி அதிகாரத்தினைக் கொண்டிராத பிராந்தியங்களின் மக்களுக்கு தோழமை ஆதரவு வழங்கும் வாரமாக" [ Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories ] ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஏற்கெனவே பிரகடனப்படுத்தியுள்ளது. ஐ.நா. சாசனம், தனது பதினோராம் அத்தியாயத்தின் 73ஆவது பிரிவில் - தன்னாட்சி அதிகாரத்தினைக் கொண்டிராத பிராந்தியங்கள் தொடர்பிலான தனது கடப்பாட்டினைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
[ Charter of the United Nations, CHAPTER XI: DECLARATION REGARDING NON-SELF-GOVERNING TERRITORIES, Article 73 ] அதன் உப பிரிவின் முதலிரண்டு பகுதிகள் பின்வருமாறு கூறுகின்றன.

அ). அப் பிராந்தியத்தில் வாழுகின்ற மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அரசியல், பொருளியல், சமூக மற்றும் கல்வி சார் மேம்பாட்டினை உறுதிப்படுத்தி, அவர்கள் நீதியாக நடத்தப்படுவதையும், ஊறுபடுத்தப்படலில் இருந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.

[ to ensure, with due respect for the culture of the peoples concerned, their political, economic, social, and educational advancement, their just treatment, and their protection against abuses; ]

ஆ). அம் மக்களின் அரசியல் அபிலாசைகளினைக் கருத்தில் எடுத்து, அம் மக்களின் நிலம் மற்றும் முன்னேற்ற நிலைகளுக்குப் பொருத்தமாக - தமக்கான தன்னாட்சிக் கட்டமைப்பினை உருவாக்கத் தேவையான அரசியல் நிறுவனங்களினை அவர்கள் உருவாக்குவதற்கு ஆதரவழித்து வழிசெய்தல்.

[ to develop self-government, to take due account of the political aspirations of the peoples, and to assist them in the progressive development of their free political institutions, according to the particular circumstances of each territory and its peoples and their varying stages of advancement; ]

ஐ.நா.வின் இந்த பிரகடனமும், அதனோடு இணைந்த ஏனைய பிரகடனங்களும் - தன்னாட்சி அதிகாரம் கோரிப் போராடும் உலகத் தேசிய இனங்களுக்கு மிகவும் இன்றியமையாத விடயங்களாகும். இதன் அடிப்படையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வாரமும், "மே 19"-ற்குப் பின்னால் இயல்பாக இணைந்து வருகின்ற காரணத்தினால், "மே 19"ஆம் நாளை -

"ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்”

"The Day of The Oppressed Nations"

என தமிழ் தேசிய இனம் பிரகடனப்படுத்த வேண்டும் . இவ்வாறாக - அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டுச் சேருவதே - அந்த மக்களின் போராட்டத்தோடு இணைத்து எமது போராட்டத்தையும் முன்னெடுப்பதே - அவர்களது ஆதரவையும் எமது போராட்டத்திற்குப் பலமாகக் கட்டி எழுப்புவதே - எதிர்காலத்திற்கு உகந்த ஒர் அணுகுமுறையாகவும், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தினைப் புதிய செல்நெறி ஊடாக முன்னெடுக்கும் ஓர் செயற்பாடாகவும் அமையும். உலகத் தமிழ் சமூக ஆர்வலர்களும், அரசியற் செயற்பாட்டாளர்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் தனது இந்தப் பரிந்துரையைக் கவனத்திற் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்..





ஆனையிறவு: சிங்களவர்கள் நினைவுச் சின்னமெனப் ஒளிப்படமெடுக்கும் இடமாக மாறியிருக்கிறது

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கொடூரமான மோதல்களின் ஒளிப்படங்கள் ஆனையிறவுப் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.போர் இடம்பெற்ற இந்தப் பகுதிகளுக்குத் தற்போது ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். கடந்த மே 2009இல் முடிவுக்குவந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த பிரிவினைவாதப் போரின்போது சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உக்கிர மோதல்கள் இடம்பெறும் களமாகவே ஆனையிறவு இருந்து வந்திருக்கிறது.இவ்வாறு, அனைத்துலக முன்னணி செய்தி நிறுவனமான Inter Press Service - IPSன் செய்தியாளர் Adithya Alles ஆனையிறவில் இருந்து செய்திக் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதனை புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி.வண்ணமதி.அவர் தொடர்ந்து எழுதியுள்ளதாவது: யாழ்ப்பாணக் குடாநாட்டினையும் நாட்டினது ஏனைய பகுதியையும் இணைக்கும் ஓர் ஒடுங்கிய நிலப்பகுதியே இது. சிறிலங்காவில் இடம்பெற்றுவந்த இன மோதல்களின் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாடு நாட்டினது ஏனைய பாகங்களிலிருந்து துண்டிக்கப்பட்டே இருந்துவந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஒரேயொரு தரைவழிப் பாதையாகிய ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படுவதற்கு ஏழு மாதங்கள் எடுத்திருக்கிறது. கடந்த சனவரி முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான பொதுமக்களின் போக்குவரவு நிறுத்த இயலாத அளவிற்கு அதிகரித்துக் காணப்பட்டது. 'வார இறுதியில் ஆகக்கூடியது 200,000 போர் விகாரைக்கு வந்துசெல்கிறார்கள்' என யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் நயினாதீவில் அமைந்திருக்கும் நாகதீப விகாரையின் பிரதமகுரு சஸ்தரவேதி சிறீ விமல தேரர் குறிப்பிடுகிறார். குடாநாட்டிலிருந்து 20 நிமிடப் படகுப் பயணத்தினை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் நாகதீப விகாரைக்குச் செல்கிறார்கள். உள்ளூர்த் தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் அதிகரிக்கும்போது போரினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும் எனத் தெரிவித்த இந்த பௌத்த மதகுரு, பெரும்பான்மை இனச் சிங்களவர்களுக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்குமிடையே நம்பிக்கையீனம் அதிகரித்துக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.'போரானது இரண்டு சமூகத்தவர்களையும் பிரித்து வைத்திருந்தது. தற்போது அவர்கள் சாதாரண மக்கள்போல ஒன்றாக இணைந்து தமக்கிடையேயான இடைத்தொடர்புகளை வளர்த்துக்கொள்ளலாம்' என காவல்துறை ஆணையாளர் தெரிவித்தார். 'கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடாநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்கள். தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையிலான உறவினை இதுபோன்ற பயணங்கள் நிச்சயமாக மேம்படுத்தும்' என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் தெரிவித்தார். யாழ் - கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் போர் நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதற்காகவே தெற்கிலிருந்து வடக்கிற்குச் சிங்களவர்கள் படையெடுக்கிறார்கள். குண்டு துளைக்காத இருப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட புள்டோசர் ஒன்று ஆனையிறவில், கொங்கிறீற்றினால் அமைக்கப்பட்ட அடித்தளத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 1991ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் இந்த வாகனத்தினைப் பயன்படுத்தியிருந்தார்கள். கவசத் தடுப்பாக இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்த இந்தப் புள்டோசர் தொடர்ந்தும் முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் படைவீரர் ஒருவர் புள்டோசரில் ஏறி அதன் உள்ளே குண்டு ஒன்றைக் கழற்றி வெடிக்கவைத்திருந்தார். இந்தச் சம்பவத்தில் அந்தப் படை சிப்பாயும் கொல்லப்பட்டார். ஹசலகா காமினி என்ற அந்தப் சிப்பாயின் நினைவாக அந்தப் புள்டோசர் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஏ9 வீதியில் பயணிக்கும் சிங்களவர்கள் குறித்த இந்த இடத்தில் இறங்கி மலர்மாலையிட்டு வணங்குவதோடு இந்தப் புள்டோசரை ஆச்சரியத்தோடு நோக்குகிறார்கள். வீதியின் மறுபுறத்தில் மேலும் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒன்று, உழவு இயந்திரம் மற்றையது பிக்கப் ரக வாகனம். அண்மைய மோதல்களின்போது விடுதலைப் புலிகள் இந்த வாகனங்களை முன்னணிப் பாதுகாப்பு நிலைகளுக்கு அண்மையில் வைத்துப் பயன்படுத்தியிருந்தனராம். இந்த இரண்டு வாகனங்களுக்கும் குண்டு துளைக்காத இருப்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றபோதும் ஆங்காங்கே குண்டுத் துளைகளை அவதானிக்க முடிகிறது. ஏ9 வீதியில் பயணம் செய்வோருக்கு, குறிப்பாகத் தென்பகுதிச் சிங்களவர்கள் நினைவுச் சின்னமெனப் ஒளிப்படமெடுக்கும் இடமாக அண்மைய நாட்களில் இது மாறியிருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் வரவினை எதிர்பார்த்து யாழ்ப்பாண நகரம் காத்திருக்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒருசில விடுதிகளிலும் நான்கு மாதத்தின் முன்னரே முன்பதிவுகள் செய்யப்பட்டுவிடுகின்றன. பெருந்தொகையில் வரும் சிங்களவர்களிடமிருந்து பணத்தினைப் பெறுவதற்கு வியாபாரிகள் பல்வேறுபட்ட உத்திகளைக் கையாழுகிறார்கள். போரினால் சேதமடைந்த வீடுகளைத் திருத்தி அரைகுறை வசதிகளுடன் வாடகைக்கு விடுகிறார்கள். உணவு விடுதிகளிலும் கடைத்தெருக்களிலும் வார இறுதி நாட்களில் அதிகளவு வியாபாரம் நடைபெறுகிறது. இந்தியத் தயாரிப்புப் பேருந்துகளில் சாரை சாரையாக தென்பகுதிச் சிங்கள மக்கள் குடாநாட்டுக்கு வருகிறார்கள். பேருந்துகளின் கூரைகளில் விறகுகளும் சமையல் பாத்திரங்களும் காணப்படுகின்றன. எது எவ்வாறிருப்பினும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இனரீதியான பிளவினைச் சீர் செய்வதற்கு நீண்ட நெடுங்காலம் எடுக்கும். உதாரணமாக, யாழ்ப்பாணத்தின் நகர வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் பெரும்பாலான தமிழர்களுக்குச் சிங்களம் தெரியாது. ஆனால் இவர்களிடத்தில் தற்போது வந்து குவியும் வாடிக்கையாளர்களுக்கோ தமிழ் தெரியாது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளின் கலவையாகவும் வெறும் சைககளாலுமே வியாபாரிகளுக்கும் சிங்களவர்களுக்குமிடையே தொடர்பாடல் நடக்கிறது. 'நீண்ட நெடுங் காலமாக இரண்டு சமூகங்களும் பிரிந்திருக்கின்றன. இரண்டு சமூகத்தவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு நாளெடுக்கும்' என சிறிலங்காவின் வட மத்திய மாகாணத்திலிருந்து யாழ்ப்பணத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சரத் ரத்தினசிறி தெரிவிக்கிறார்.இது இவ்வாறிருக்க, பெருந்திரளான சிங்களவர்கள் குடாநாட்டுக்குப் படையெடுப்பது தொடர்பில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது கவலையினை வெளியிடுகிறார்கள். குடாநாட்டு மக்களுக்கும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் சிங்களவர்களுக்கும் இடையில் பகைமையுணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. 'தெற்கிலிருந்து மக்கள் குடாநாட்டுக்கு வருவதையிட்டு நாங்கள் மகிழ்வடைகிறோம். இதுபோன்ற சுற்றுப்பயணங்கள் நிலைமை வழமைக்குத் திரும்புவதற்கு வழிவகுக்கும்' என பத்மநாதன் சயேந்திரன் தெரிவித்தார். நீண்ட காலம் தொடர்ந்த போரினால் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து குடாநாடு இதுநாள் வரைக்கும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தினை அபிவிருத்தி செய்யும் சிறப்பானதொரு முனைப்பாகவே தென்பகுதிச் சிங்களவர்களின் யாழ்ப்பாணத்திற்கான வருகையினைக் குடாநாட்டு மக்கள் கருதுகிறார்கள். குடாநாட்டினைப் பொறுத்தவரையில் போரினால் அழிந்த கட்டடங்கள் எங்கும் தென்பட்டாலும், வன்னிப் பகுதியில் நிலைமைகள் மேலும் மோசமானதாகவே இருக்கின்றன. குடாநாட்டிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும்போது வன்னிப் பெருநிலப்பரப்பின் நுழைவாயிலில், 2006ம் ஆண்டு தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற கடுமையான மோதல்களிலிருந்து தப்பிய கட்டடங்களையோ அல்லது கட்டமைப்புக்களையோ காணமுடியவில்லை.ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தின்படி இறுதிப்போரின் பின்னர் 280,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். இவர்களில் 190,000 பேர் அவர்களது சொந்த இடங்களில் ஏற்கனவே மீளக்குடியேற்றப்பட்டு விட்டார்கள். 160,000 வீடுகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்திருப்பதாக ஐ.நா மேலும் தெரிவிக்கிறது. சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களுக்குத் தனிநாடு கோரி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பிரிவினைவாதப் போரின்போது அண்ணளவாக 70,000 பொதுமக்கள் மடிந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் தங்கள் எத்தகைய இடர்களுக்கு முகம்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்து மக்கள் எவருமே முறையிடவில்லை. 'முன்னர் இருந்ததைவிட குடாநாட்டில் நிலைமைகள் மாறியிருக்கின்றன. இராணுவத்தினர் வீதிகளில் சுற்றித் திரிந்தாலும் சோதனை நடவடிக்கைகள் பெரிதும் குறைந்திருக்கின்றன. போரின் சின்னங்களாக இருந்த பல அம்சங்கள் அகற்றப்பட்டுவிட்டன. குடாநாட்டில் இராணுவமயப்படுத்தல் படிப்படியாகக் குறைந்துவருகிறது' என ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்தார்.




ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் -முக்கோண வலைப்பினலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை (பகுதி -04)

1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது
இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்த்து.
1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர் உணர்வு.
2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.
தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலசஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்க்குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் “ஹீரோ” வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.
துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை; மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.
தமிழ் பேசும் மக்கள் மீதான தேசிய இன அடக்கு முறையும், வன் முறை வடிவில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பொலீசார் எமக்குப் பெரும் தலையிடியாகின்றனர். அவர்களை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னமே சிலவேளைகளில் அவர்கள் எம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.
21 ஓகஸ்ட் 1975 கிருபாகரனும், சில நாட்களில் 19 செப்டெம்பர் 1975 கலாபதியும் கைதுசெய்யப்பட்ட பின்னர் தான் இலங்கை அரசின் அதிகார மையத்திற்கு துரையப்பா கொலை என்பது சில இளைஞர்களின் கூட்டு நடவடிக்கை என்பது தெரிய வருகிறது. அரசு விழித்துக்கொள்கிறது. ஒரு உள்ளூர் உளவு வலையமைப்பை உருவமைக்கும் வேலையை முடுக்கிவிடுகிறது.
துரையப்பா கொலை தொடர்பாக கலாபதி கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி கொலைசெய்யப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் நாங்களும் ஆர்வமாக இருந்தோம். அவரின் கைதிற்கு மட்டுமல்ல, கலாபதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைச் சித்திரவதை செய்வதற்கும் கருணாநிதிதான் முன்நின்றார் என்பதும், நாம் அறிந்திருந்தோம், அவரின் சித்திரவதையில் கலாபதியின் காதைப் பலமாகத் தாக்கி சேதப்படுத்தியிருந்தார் என்று தம்பி அடிக்கடி கூறுவார். கருணாநிதியின் சித்திரவதையின் கோரத்தால் கலாபதியின் ஒருபக்கக் காதின் கேட்கும் தன்மை கூடப் பாதிக்கப்பட்டிருந்து.
14 பெப்ரிவரி 1977 இல் காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி மாவிட்டபுரத்தில் வைத்துக் கொலைசெய்யப்படுதல் என்பது தான் தமிழ் ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் நடைபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலைச்சம்பவம்.
பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. மாவிட்டபுரம் நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் செல்ல நாம் முடிவிற்காகக் காத்திருக்கிறோம். இறுதியில் பிரபாகரன் குறிபார்த்துச் சுட்டதில் கருணாநிதி அந்த இடத்திலேயே மரணமாகிறார்.
அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. கருணாநிதி இறந்து நிலத்தில் வீழ்ந்த பின்னர் உணர்ச்சிவயப்பட்ட பிரபாகரன் அவரின் அருகே சென்று அவருடைய காதினுள் மறுபடி துப்பாக்கியால் சுட்டதாக எம்மிடம் கூறினார். கலாபதியின் காதைச் சேதப்படுத்தியற்கான பழிவாங்கல்தான் அது. பழிக்குப் பழிதீர்க்கும் மனோபாவம் நிறைந்த, உணர்ச்சி வயப்பட்ட தாக்குதலின் கோரம் அங்கே வெளிப்பட்டு மனிதத்தை நோக்கி வினாவெழுப்பியது.
பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார். ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.
இதே வேளை எமது எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருவகையான மக்கள் சாராத தனிமனிதப் படுகொலைகள் என்ற வடிவத்தைக் கொண்டதாக அமைகிறது. பொலிஸ் அதிகாரிகளும், அரச ஆதரவாளர்களும், உளவாளிகளும் என்ற முக்கோண வலைப்பின்னலை உடைத்து, இலங்கை அரச இயந்திரத்தை மக்கள் தொடர்பிலிருந்து பலவீனப்படுத்தலே எமது வரையறுக்கப்படாத, ஆனால் செயல்ரீதியான நோக்கமாக அமைந்திருந்தது.
இவ்வேளையில் துரையப்பா கொலைவழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு இந்தியா சென்றிருந்த பற்குணம் இலங்கை திரும்புகிறார்.
பற்குணம் இலங்கைக்கு வந்த நிகழ்வானது எமக்குப் புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தலைமறைவாக வாழ்ந்த எங்களை மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் அவர் சந்திக்கிறார். சில காலங்களின் பின்னர், அவர் எமது மத்திய குழு உறுப்பினராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுகிறார்.
இந்தச் சூழலில் சண்முகநாதன் என்ற பொலிஸ் அதிகாரி எமக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். இவரைப் “போட்டுத் தள்ள வேண்டும்” என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுகிறார். கருணாநிதி கொலை தந்த உற்சாகமும் உத்வேகமும் சண்முகநாதனைக் கொலைசெய்ய வேண்டும் என்ற உறுதியை வழங்குகிறது.
அவரை நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தம்பி பிரபாகரனும், உரும்பிராய் பாலாவும் சண்முகநாதனை, இணுவிலில் உள்ள தேனீர்க் கடையின் முன்னால் காண்கின்றனர். தற்செயலாக அங்கு அவரைக் கண்ட இருவரும் உடனடியாகவே அவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்.
காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் இன்னுமொரு பொலீஸ் அதிகாரியுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றவர் யாரென்பதையும் பிரபாகரனும் பாலாவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மற்றைய பொலிசின் பெயரும் சண்முகநாதன் தான். அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர். கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர் என்பதையும் பாலாவும் பிரபாகரனும் தெரிந்து வைத்திருந்தனர். கொல்லப்படவேண்டிய காங்கேசந்துறை சண்முகநாதனை பிரபாகரன் குறிவைக்கை அவர் பிரபாகரனை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு தரையில் விழுத்த முயற்சிக்கும் வேளையில், கைத்துப்பாக்கியை வைத்திருந்த பாலா அவரை சுட்டுக்கொலைசெய்து விடுகிறார்.
அதேவேளை அங்கு நின்றிருந்த மற்றைய சண்முகநாதனை நோக்கி, தப்பி ஓடிவிடுமாறு பாலா சத்தமிடுகிறார். அதை அவர் மறுத்து, தனது சக பொலீசைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட அவரைப் பிரபாகரன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிடுகிறார். 18ம் திகதி மே மாதம் 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வடபகுதி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில், திருப்பித் தாக்குவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இன்னும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வட கிழக்கெங்கும் மேடைகளும், உணர்ச்சிக் கோசங்களும், தமிழுணர்வுப் பாடல்களும், உதய சூரியன் கொடியுமாகக் களைகட்டியிருந்தது. சந்திகளும், சாலைத் திருப்பங்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் பேசிக்கொள்வதை நாமும் கேட்கிறோம். எங்கும் “தமிழ் உணர்ச்சியின்” அலைகள் இந்துமா கடலையும் தாண்டி ஒலித்தது. தமிழ் தேசியத் தணலின் வெம்மை முழு இலங்கையையும் எரித்துக் கொண்டிருந்தது.




வன்னிமக்கள் பேரவைக்கு ஒரு மனந்திறந்த மடல்

வணக்கம்!
தங்களின் அறிக்கை நிரம்பவே சுட்டது. வன்னிமக்களின் அவலங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தீர்கள். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வன்னிமக்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சரியான முறையில் உதவவில்லையென்ற குற்றச்சாட்டையும் சொன்னீர்கள். மனதார ஏற்றுக்கொள்கிறோம். அந்தக் குற்றவுணர்வு எமக்கு நிறையவே உண்டு. அதுவொன்றும் வேண்டுமென்றே தட்டிக் கழித்ததில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள்.
வன்னிமக்கள் செய்த தியாகங்களும், போராட்டத் தலைமையையும் இயக்கத்தையும் பாதுகாக்கவென அவர்கள் கொடுத்த விலையும் மிகமிக அதிகம். இன்றும் அதற்கான விலையை அவர்கள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். இவையனைத்துக்கும் நாங்கள் தலை வணங்குகிறோம்.
ஆனால் இந்தத் தியாகங்கள், பாடுகள், வேதனைகள் எல்லாவற்றையும் அரசியலாக்கி குறிப்பிட்ட சிலருக்கு வாக்குக் கேட்பதற்காக ‘வன்னி மக்கள் பேரவை’ பயன்படுத்திக் கொண்டது தான் எமக்கு சினத்தைத் தருகிறது. வன்னிமக்களுக்கும் அவ்வாறே உணர்விருக்கும் என நம்புகிறோம்.
மக்களைக் கவனிக்காத அரசியல்வாதிகள் எல்லோரையும் பொதுவாகச் சாடி உங்கள் அறிக்கை அமைந்திருந்தால், வன்னிமக்களைக் கவனிக்காமல் தேர்தலுக்குப் பணமிறைக்கும் எல்லோரையும் நீங்கள் சாடியிருந்தால், வன்னி மக்களைப் பயன்படுத்தி அரசியல் செய்வோரை அம்பலப்படுத்தி உங்கள் அறிக்கை வெளிவந்திருந்தால் அதில் நியாயமிருந்திருக்கும். ஆனால் அப்பட்டமான ஒருபக்கச் சார்புடன், குறிப்பிட்ட சிலரின் மேலுள்ள காழ்ப்புணர்வுடன் அயோக்கியத்தனமான வாதங்களுடன் வெளிவந்திருக்கிறது உங்கள் அறிக்கை. எனவேதான் இது வன்னிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்ட விளம்பர அறிக்கையாக எம்மால் பார்க்கப்படுகிறது. அப்படி நினைப்பதற்குப் போதிய காரணங்கள் உங்கள் அறிக்கை முழுதும் பரவிக்கிடக்கின்றன.
முதலில், தாயகத்தில் நிலவிய தேர்தல் பரப்புரை நிலைமையை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஊடக தர்மம் என்பது அறவே மறுக்கப்பட்டு அராஜகச் சூழல்தான் யாழ்ப்பாணத்தில் நிலவுகிறது. இதுவொன்றும் சிங்களப் பேரினவாத அரசாலோ அல்லது ஒட்டுக்குழுக்களாலோ ஏற்பட்டதன்று. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் (த.தே.கூ) அதை ஆதரிக்கும் சக்திகளாலும் ஏற்பட்டது. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி(த.தே.ம.மு) குறித்த செய்திகள் எல்லாம் இருட்டடிப்புச் செய்யப்பட்டது மட்டுமன்றி, மக்களிடத்தில் அதைக் குறித்த தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியான பரப்புரை பத்திரிகைகளில் நடத்தப்பட்டு வந்தது. உதயன், தினக்குரல் என்பன என்ன நிலைப்பாடு எடுத்துள்ளன, அவை எப்படிச் செயற்படுகின்றன என்கிற விடயங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு ‘வன்னிமக்கள் பேரவை’ என்று அறிக்கை விட்ட உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும்.
இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? பத்திரிகைக் குழுமத்தின் முதலாளியை போட்டியிட வைத்ததன் மூலம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்களைக் கூட்டமைப்புத் தலைமை அடித்துக் கொண்டது. மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் என்று சிலரை மட்டும் குறிப்பிட்டுத் தாக்கும் நீங்கள், கொழும்பிலே ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் எண்ணத்தோடிருந்த திரு சரவணபவனை யாழ்ப்பாணத்தில் வேட்பாளராக்கியது குறித்து என்ன கருதுகிறீர்கள்? இதன் பின்னாலுள்ள அயோக்கியத்தனமான அரசியல் குறித்து கூட்டமைப்பை விமர்சித்ததுண்டா?
இப்படியாக ஒருவழிப் பரப்புரை மட்டுமே யாழ்ப்பாணத்தில் ஊடகங்களில் நடத்தப்பட்டு வந்தது. வலம்புரியானது த.தே.ம.மு. இன் செய்திகளைப் பிரசுரித்தாலும் மக்கள் மத்தியில் அப்பத்திரிகை அதிக செல்வாக்கைக் கொண்டதில்லை. மாறாக உதயனும் தினக்குரலும் திட்டமிட்டே மிகப்பெரிய ஊடகப்போரை த.தே.ம.மு. மேல் தொடுத்துக் கொண்டிருந்தன. ஓர் எடுத்துக்காட்டு: செல்வராசா கஜேந்திரன் பல ஆயிரங்கள் செலவழித்து உதயனில் தனது கருத்தை ஒரு விளம்பரமாகப் போட்டிருந்தார். ஆம் உதயனில் த.தே.ம.மு. இன் கருத்து ஏதாவது வரவேண்டுமென்றால் பல்லாயிரக்கணக்கில் செலவழித்து விளம்பரமாகத்தான் போடவேண்டும்.அதற்குள்ளும் ஏராளமான வெட்டுக்கொத்துகள் நடந்துதான் விளம்பரமே வெளிவரும்.அந்த விளம்பரத்துக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் அளித்த பதில் உதயனில் செய்தியாக வெளிவந்தது. அதுவும் பெரிய கொட்டை எழுத்தில் முக்கியமான செய்தியாக சுரேசின் அந்தப் பதில் வந்திருந்தது. விளம்பரமொன்றுக்கான பதிலை முதன்மையான செய்தியாக வெளியிட்டதே நியாயமற்றது. சுரேசின் பதிலுக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால் திரும்பவும் கஜேந்திரன் பல ஆயிரங்களைச் செலவழித்து ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும். இப்படித்தான் ஓர் ஊடக அராஜகம் நடந்துகொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மிகப்பயங்கரமான ஊடக அராஜகத்தை த.தே.கூ. உதயனின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிறது. உதயன் எந்த நிலைவரை போயிருக்கிறதென்றால், தேசியத் தலைவர் பிழை, விடுதலைப் புலிகள் இயக்கம் பிழை, ஏக பிரதிநிதித்துவம் என்று புலிகளை விட்டது பிழை, புலிகளின் பிடியிலிருந்து தப்பித்துள்ள த.தே.கூ. இனித்தான் மக்களுக்காகப் போராடப்போகிறது என்ற பொருள்பட பிறவிடங்களில் எழுதப்படும் கட்டுரைகளை அள்ளிப்போட்டும் மொழிபெயர்த்துப் போட்டும் தனது பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது உதயன் பத்திரிகை. ‘இயக்கப்பாணி அரசியல்’ நடத்தும் குழுவாகவும், ஆயுதக் குழுவாகவும் த.தே.ம.முன்னணியைப் பகிரங்கமாகச் சித்தரிக்கிறது உதயன். உண்மையில் ‘இயக்கப்பாணி’ என்று உதயன் எதைச்சொல்கிறதோ அது த.தே.கூட்டமைப்புக்கும் உதயன் பத்திரிகைக்குமே பொருந்தும்.
இந்நிலையில்தான் புலம்பெயர் அமைப்புக்கள் தமது விளம்பரங்களை வெளியிடத் தீர்மானித்தன. அதுவும் கடைசிநாட்களில்தான் – நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று கடைசி நாளில்தான்- அதிக விளம்பரங்கள் வெளிவந்தன. புலம்பெயர் அமைப்புக்கள் தமது பெயர்களைப் பயன்படுத்தி விளம்பரங்களைக் கொடுக்க வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது த.தே.கூட்டமைப்பும் அதற்குரிய ஊடகப்பிதாமகனும் தான். தாயகத்திலும் புலத்திலும் இந்த ‘அமைப்புக்களின் அறிக்கைப் போரை’த் தொடங்கிவைத்தவர்கள் நீங்கள் ஆதரவளிக்கும் இந்தக் கூட்டம்தான். உதயனிலே ‘பிரித்தானியா மக்கள்’ என்று குறிப்பிட்டு த.தே.கூ. ஐ ஆதரித்து விளம்பரம் வெளிவந்திருந்தது. அப்போதெல்லாம் புலம்பெயர் அமைப்புக்கள் எவையும் விளம்பரம் கொடுத்திருக்கவில்லை. பெயர், ஊர் இல்லாமல் இப்படி விளம்பரம் போட்டு ஏதோ புலம்பெயர் மக்கள் எங்களுக்குத்தான் ஆதரவளிக்கிறார்கள் என்ற மாயையை யாழ்ப்பாணத்தில் உருவாக்கவென திட்டமிட்டு இப்படியொரு நாடகம் த.தே.கூ. ஆல் நடத்தப்பட்டது. அத்தோடு கனடாவிலே உள்ள தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் நிலைப்பாட்டை பலமுறை செய்தியாக்கி அதன் மூலமும் புலம்பெயர் மக்கள் அனைவரும் தம்மோடுதான் நிற்கிறார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டது. அப்போதெல்லாம் ‘உங்கள் கருத்தை எங்கள் மேல் திணிக்காதீர்கள்’ என்று எழுத உங்களுக்கு மனம்வரவில்லை. இந்நிலையில்தான், உண்மை நிலையை விளக்கவேண்டிய கடப்பாடு புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஏற்பட்டன. ஆக, இப்படியாக விளம்பரங்கள் கொடுக்க வேண்டிய நிலைக்கு புலம்பெயர் அமைப்புக்களைத் தள்ளியதே வன்னிமக்கள் பேரவை ஆதரவளிக்கும் த.தே.கூட்டமைப்பும் அதன் ஊடகங்களும்தான்.
புலத்திலேயும் இதே நிலையைத்தான் த.தே.கூட்டமைப்பும் அதன் ஆதரவு வலைத்தளமும் ஏற்படுத்தின. முதன்முதலில் தாயகத் தேர்தல் தொடர்பான ஆதரவு அறிக்கை வெளிவந்தது யாரிடமிருந்து என்பதை நீங்கள் அறிவீர்களா? அது த.தே.ம.முன்னணிக்கான ஆதரவு அறிக்கையாக இருக்கவில்லை. மாறாக த.தே.கூ. ஐ ஆதரித்து இதுவரை இல்லாத ‘வடக்கு கிழக்கு பழைய பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம்’ என்ற பெயரில் ஓர் அறிக்கை அந்த வலைத்தளத்தில் வெளிவந்தது. அதுதான் தொடக்கம். தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் அறிக்கை இதில் சேர்த்தியில்லை ஏனென்றால் அது ஏற்கனவே இருக்கும் ஓர் அமைப்பு. இல்லாத அமைப்பின் பெயரில் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது குறித்தே இவ்விடத்தில் சொல்லப்படுகிறது. அதன்மூலமும் புலத்துமக்கள் த.தே.கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள் என்ற மாயையை உருவாக்க முனைந்தார்கள். அதன்பின்னர்தான், உண்மையான மக்கள் கட்டமைப்புக்கள் – ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கட்டமைப்புக்கள் தமது த.தே.ம.முன்னணிக்கான ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். ஆக, புலத்திலும் இந்த ஆதரவு அறிக்கைப் போரைத் தொடக்கி வைத்தது த.தே.கூட்டமைப்பும் அதன் ஆதரவு வலைத்தளமும்தான்.
நிலைமை இப்படியிருக்க, அநியாயம் செய்த தரப்பை ஆதரித்து அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் உங்கள் அறிக்கை புலத்திலிருந்து த.தே.ம.முன்னணிக்கு ஆதரவளித்தவர்களை மட்டும் சாடி அமைந்துள்ளதானது அப்பட்டமான பக்கசார்பாகும். இதேவேளை, புலத்திலிருந்து த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவளித்த அமைப்புக்களை(?) ஒருவரிதானும் செல்லமாகக் கிள்ளக்கூட உங்கள் அறிக்கை இடம்கொடுக்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் சொன்னால் அது கருத்துத் திணிப்பில்லை. த.தே.ம.முன்னணிக்கு ஆதரவளிப்பவர்கள் சொன்னால்தான் அது திணப்பா? ஒருவேளை ஓர் அமைப்பைத் தவிர மற்றவையெல்லாம் போலி அமைப்புக்கள் என்று உங்களுக்கே தெரிந்துவிட்டதோ என்னவோ?
புலம்பெயர் அமைப்புக்கள் தேர்தலுக்காகப் பணம் சேர்த்து அனுப்பியது குறித்துக் கவலைப்பட்டிருந்தீர்கள். நியாயமான கவலைதான். ஆனால் அதையும் ஒருபக்கத்தை மட்டுமே தாக்கப் பயன்படுத்திக் கொண்டீர்கள். தாயகத்தில் இருந்த சமநிலையற்ற தன்மையை ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டோம். அதைவிட த.தே.ம.மு சார்பில் போட்டியிட்டவர்களில் கஜேந்திரகுமாரைத் தவிர வேறு எவரும் அரசியற் பாரம்பரியமுள்ளவர்கள் அல்லர். அத்தோடு பணக்காரர்களுமல்லர். அவர்களுக்கான தேர்தல் பரப்புரைகளுக்கு நாம்தான் உதவவேண்டும். ஆனால் த.தே.கூ. காரரின் பொருளாதார பலத்தைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. அவர்களில் சிலர் உண்மையில் வசதிபடைத்தவர்களில்லை என்பது எமக்குத் தெரியும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் கூட்டமைப்பானது மிகப்பெரும் பொருளாதார பலத்தோடுதான் நிற்கிறது. கூட்டமைப்பிலே தனியொருவர் செலவழித்த ஒட்டுமொத்தப் பணத்தைக்கூட த.தே.ம.முன்னணியின் முழுச் செலவுமே எட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை.
யாழ்ப்பாணத்திலேயே நிற்கும் நீங்கள், அங்கே கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் செலவழித்த வழிமுறைகள், தொகைகள் பற்றி அறியாமலா இருக்கிறீர்கள்? அதேவேளை த.தே.ம.மு. செலவழித்த வழிமுறைகள், தொகைகள் குறித்த கணக்கும் ஓரளவு உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
திருமலையிலே இறுதி இரண்டு நாட்களில் மட்டும் இந்தியாவிலிருந்து அச்சிட்டு எடுத்துவரப்பட்டிருந்த ஓர் இலட்சம் வண்ணச் சுவரொட்டிகள் நகர்ப்பகுதியெங்கும் ஒட்டப்பட்டன. சம்பந்தரின் முகம் மட்டுமே மிகப்பெரிதாகக் கொண்ட அச்சுவரொட்டி மட்டுமே நகர்ப்புறத்தில் எங்கு பார்க்கிலும் காட்சியளித்தது. இதைப்போல் எவ்வளவு விபரங்கள் உங்களுக்குச் சொல்லப்பட வேண்டும்? ஏன் இன்று த.தே.கூட்டமைப்புக்குள்ளேயே நிற்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகளுடன் உங்களுக்கிருக்கும் தொடர்பு மூலம் கேட்டுப்பாருங்கள். உள்ளேயே எவ்வளவு பணம் விளையாடுகிறது என்று அவர்களே சொல்வார்கள். இப்படியாக பணம் வாரியிறைக்கப்படும் நிலை கூட்டமைப்பிலே இருக்க அதைக் குறித்து எந்தக் கதையும் கதைக்காமல் உண்மையிலேயே மிகமிகக் குறைவான பணம் செலவழித்த த.தே.ம.மு. ஐச் சாடுகிறீர்கள். திருமலையில் இறுதிநாளில் சம்பந்தர் செலவழித்த தொகையை ஏன் அங்கே இடம்பெயர்ந்திருந்த மக்களுக்குக் கொடுத்திருக்கக் கூடாது என்று நீங்கள் கேட்கவில்லை? த.தே.ம.மு. வேட்பாளர்கள் மட்டும் தான் உதவவேண்டுமா என்ன? இவ்வளவுக்கும் நடைமுறையில் சம்பந்தர்தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
முதன்முதலில் புலத்திலே தேர்தலுக்கு நிதி சேகரித்தது த.தே.கூட்டமைப்புக்குத்தான். கனடாவிலே தங்கவேலு ஐயா தலைமையில்தான் இது நடந்தது. அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கனடிய டொலர்கள் முதற் கூட்டத்திலேயே அங்கிருந்தவர்களால் வாக்களிக்கப்பட்டது. தலைக்கு நூறு டொலர்கள் என அறவிடப்பட்டு பெரிய இராப்போசன விருந்து நடத்தப்பட்டு த.தே.கூட்டமைப்புக்கென நிதி திரட்டப்பட்டது. இலங்கைப்பணத்தில் கிட்டத்தட்ட ஐம்பது இலட்சங்கள். உறுதியளிக்கப்பட்ட தொகை கிடைத்ததா அல்லது அதைவிடவும் அதிகம் கிடைத்ததா என்ற விளக்கமான தரவுகள் இல்லை. ஆனால், இந்தப் பணத்தைக் குறித்து ‘வன்னிமக்கள் பேரவை’யென்ற பெயரில் அறிக்கையெழுதியவர் ஏன் கேள்வி எழுப்பவில்லை. அந்தப் பணத்தின் அரைவாசியளவுதான் த.தே.ம.முன்னணிக்கு ஒட்டுமொத்தமாகவே புலத்திலிருந்து போயிருக்கிறது. கனடாவில் சேர்க்கப்பட்ட தொகையைக் கொண்டே தாயகத்தில் எவ்வளவோ செய்திருக்கலாமென்ற விவாதத்தை வன்னிமக்கள்பேரவை அறிக்கையாளருக்கு ஞாபகப்படுத்த விளைகிறோம். கனடாக் காசில் குழந்தைகளுக்குப் பால்மா வாங்கமுடியாதா என்ன? இதைவிட வேறு சக்திகள் எவ்வளவு கொடுத்தன என்பதை த.தே.கூ. இற்குள் இருக்கும் சிலரிடமே அவர் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
பத்மினி வாக்குக் கேட்பதைக் கேள்விக்குள்ளாக்கும் நீங்கள் ஒட்டுமொத்தமாக எல்லா நாடாளுமன்ற உறுப்பினரையும் கேள்வி கேட்டிருந்தால் அதில் நியாயமிருக்கும். இப்போது த.தே.கூட்டமைப்பில் இருக்கும் யார்யார் வன்னிமக்களுக்கு என்னென்ன செய்தார்கள் என்பதை நீங்கள் சொல்லுங்கள். நாங்கள் கேட்டு அறிகிறோம். அதைவிடுத்து ஒருசிலரை மட்டும், அவர்கள் கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார்கள் என்ற காரணத்துக்காக திட்டுவது அயோக்கியத்தனம். யாழ்ப்பாணத்தில் பெண் வேட்பாளர் ஒருவருக்குக் கூட இடமொதுக்க முடியாத – விரும்பாத – ‘சமூகத் தெளிவுள்ள’ த.தே.கூட்டமைப்பில் எவ்வளவு தூரம் வியாபார – இன்னபிற சிக்கல்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்வது கடினமா என்ன?
‘கூட்டமைப்பைச் சேர்ந்த மூவரைத் தோற்கடிப்பதற்கு நீங்கள் மூவர் மட்டுமே போட்டியிட்டிருக்கலாமே’ என்ற சிறுபிள்ளைத்தனமான வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள். இதிலேயே உங்கள் குட்டு வெளிப்படையாக உடைந்துபோகிறது. இந்த விளக்கத்தோடு தானா அந்த அறிக்கையை எழுதியவர் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க முடிவெடுத்தார்? முதலில் ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியோ சுயேட்சைக் குழுவோ குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களோடுதான் களமிறங்க வேண்டும் (மாவட்டத்துக்கான ஆசனங்கள்+3) என்ற விதியொன்று இருக்கிறது. பிறகெப்படி மூன்றுபேர் மட்டும் த.தே.ம.முன்னணி சார்பிலே போட்டியிட முடியும்? இந்த ஒருவிடயத்திலேயே உங்களில் முட்டாள்தனமான த.தே.கூ. ஆதரவு நிலைப்பாடும்இ த.தே.ம.முன்னணி மேலான வன்மமும் வெளிப்பட்டு நிற்கிறது. கஜேந்திரகுமார் திருமலையில் போட்டியிட்டிருந்தால், ‘வடக்கான் கிழக்கை ஆள நினைக்கிறான். கிழக்குப் பிரதிநிதித்துவம் இல்லை’ என்று நீங்கள்தான் கூச்சல் போடப் போகிறீர்கள். மகிந்தவின் ஆசிபெற்ற கெளரிமுகுந்தன் என்று கூட்டமைப்பின் கோசத்தையே மீளவும் கக்கிக் கொண்டிருக்கு நீங்கள் நன்றாகவே வெளிப்பட்டுப் போனீர்கள். கடந்த அரசதலைவர் தேர்தலில் த.தே.கூ. எடுத்த முடிவுக்கிணங்க சரத் பொன்சேகாவின் பரப்புரைக் கூட்ட மேடையிலே அவரின் கையைப் பிடித்து உயர்த்தி ஆதரவு தெரிவித்தவர்தான் கெளரிமுகுந்தன். அக்காட்சிகள் இலங்கையின் பிரபல தனியார் தொலைக்காட்சியான சக்தியில் மீளமீள ஒளிபரப்பட்டது. அந்தக் கூட்டம் முடிந்து வீடுவரும் வழியிலேயே கெளரிமுகுந்தனுக்கிருந்த ஆறு பொலிசாரின் பாதுகாப்பும் மகிந்தவால் விலக்கப்பட்டது. இன்றுவரை ஒரு பொலீஸ் பாதுகாப்புக்கூட இன்றித்தான் கெளரிமுகுந்தன் இருக்கிறார். ஆனால் மகிந்தவே நேரில் சொல்லி வேறொருவருக்கு போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது. மகிந்தவின் ஆசிபெற்ற வேட்பாளர் யார் என்று இப்போது சொல்லுங்கள்.
இப்படியானவற்றாலே தான், இந்த அறிக்கை வன்னிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி எழுதப்பட்டதன்று; மாறாக, இந்தத் தேர்தலில் வாய்ப்புக் கேட்டு மறுக்கப்பட்டாலும் பரவாயில்லை மாகாணசபைத் தேர்தலிலாவது எப்படியும் ஏதாவது ஒருவழியில் அரசியலில் குதித்துவிடலாமென்று கனவுகண்டுகொண்டிருக்கும் ஒருவர் எழுதி வெளியிட்ட அறிக்கையாகவே எம்மால் பார்க்கத் தோன்றுகிறது. இறுதிநாளில் முன்னாள் பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் என்று வெளியிட்ட அறிக்கையும் இப்படிப்பட்டதொன்று என்பதே எமது கருத்து. ஒருகட்சியில் போட்டியிட விண்ணப்பித்தபோதே பொதுஅமைப்புக்களின் சார்பில் அறிக்கைவிடும் தார்மீக அந்தஸ்தை இழக்கிறோம் என்ற புரிந்துணர்வின்றி, அதே கட்சிக்கு பொதுஅமைப்பொன்றின் பெயரைப் பயன்படுத்தி அறிக்கை விட்டது என்ன நியாயமென்று நாம் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில், வன்னிமக்களின் பாடுகள், தியாகங்கள், தற்போது அவர்களிருக்கும் நிலைமை போன்ற நியாயமான, உணர்வுபூர்வமான பல விடயங்களைச் சொல்லித் தொடங்கப்பட்ட அறிக்கை அவையெல்லாவற்றையும் கேவலப்படுத்தி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான வாக்குத் தேடும் அயோக்கியத்தனத்தைச் செய்துள்ளது. பேசாமல் த.தே.கூட்டமைப்புக்கான வன்னிக்கிளை என்றே இந்த அறிக்கையை விட்டிருக்கலாம். தனியே, பொதுவாக நின்று இந்தப் பிரச்சினைகளைப் பேசியிருந்தால் நிச்சயமாக தலைவணங்கி ஏற்றுக்கொண்டிருப்போம். புலத்து மக்களின் அசைவற்ற தன்மையை எவ்விடத்திலும் நாம் நியாயப்படுத்தவில்லை.
கருத்துத் திணிப்பைச் செய்யும் அதிகாரம் எவருக்குமில்லை. அதுபோலவே புலத்து மக்கள் தமது கருத்தைச் சொல்லும் வாய்பைத் தடுக்கும் அதிகாரம் எவருக்குமில்லை. உண்மையில் புலத்தில் இருபக்கக் கருத்தும் போய்ச்சேர வசதியுண்டு. ஆகக்கூடிய வாசகர்களைக் கொண்ட தமிழ்வின் தளம் த.தே.கூ. ஆதரவு நிலையே எடுத்துள்ளது. ஐரோப்பாவில் தமிழ்த் தேசியத்தில் ஊறிப்போன மக்களுக்கென இருக்கும் ஒரே தொலைக்காட்சியும் த.தே.கூ. இற்கான ஆதரவு நிலையையே எடுத்து நிகழ்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் தாயகத்தில் அவ்வாறான சூழ்நிலையில்லாமல் ஒருபக்கக் கருத்துத்திணிப்பைச் செய்துகொண்டிருக்கும் த.தே.கூ. உதயன் - தினக்குரல் ஊடகங்கள் குறித்துத்தான் ‘எங்கள் மேல் உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள்’ என்ற குரல் எழுப்பப்பட வேண்டும். முடிந்தால், வன்னிமக்கள் பேரவை, யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஊடக அராஜகத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கட்டும்.
முடிவாக, இக்கட்டுரையை எழுதுபவர் நடுநிலையாளரல்லர். த.தே.ம.முன்னணியை ஆதரிப்பவர். ‘வன்னி மக்கள் பேரவை’ என்ற பெயரில் அறிக்கை வெளிவந்த உடனேயே பதிலெழுதாமல் தாயகத்தில் தேர்தல் நிறைவுறும் நேரத்தில் இதை எழுதுவதற்குக் காரணமுண்டு. இறுதிநேரத்தில் மாறிமாறி நடந்த அறிக்கை, அறிக்கை மறுப்புக் குளறுபடிகளுக்குள் சிக்க விரும்பவில்லை.
இப்பதில் புனை பெயரிலேயே எழுதப்படுகிறது




Thursday, April 8, 2010

நாம் வீழ்ந்தே கிடப்பதற்கு கோழைகள் அல்ல. நமக்குள்ளான ஒற்றுமை சீர்குலைவே உண்மையான இனம் வீழ்வதற்கு காரணமாகியது -கண்மணி

வரலாற்றில் எங்கேயும் இல்லாத எழுச்சி, தமிழீழத்தில் பதிவு செய்யப்பட்டது. வீழ்கிறோமா, எழுகிறோமா என்பதல்ல. இதில் ஏதாவது ஒன்றுதான் நடைமுறையாகும். ஒவ்வொரு நிலையிலும் ஏதோ இரண்டு இருக்கும். அதில் ஒன்றையே வென்றெடுக்கமுடியும்.
வெல்வதற்கான அகப்புற சூழல்கள் அதில் புதைந்துள்ள உண்மை நிலைகளை உள்ளத்திலும் உணர்விலும் கலந்திருக்கும் தீர்மானகரமான லட்சிய விளைவுகள் இவைகளே ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு மட்டுமல்ல, அந்த போராட்டத்தை வெற்றி காண்பதற்குமான நிலையை உருவாக்குகிறது. தமிழீழ விடுதலையின் போராட்டமும்கூட வெற்றியைத்தவிர வேறொன்றையும் அடையாத நிலையே தொடர்கிறது. மேலோட்டமாக தமிழீழ தேசிய ராணுவம் அழிக்கப்பட்டதாகவும், அது துடைத்தெறியப்பட்டதாகவும் ஏராளமான பரப்புரைகள் செய்யப்பட்டாலும் நமக்கு காலம் சொல்லித்தரும் செய்தி, கொடுங்கோலர்களின் வெற்றி நீடிப்பதில்லை என்பதுதான். ஆகவே, ஒரு தேசிய இனத்தின் அழித்தொழிப்பு, நிலங்களை அபகரிப்பதில் மட்டுமே கண்ட வெற்றி, தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடையாளங்களை அழிப்பதின் மூலமே கண்ட வெற்றி, ரத்தமும் சதையும் தெறிக்க அசூரத்தனமான தாக்குதலால் கிடைத்த வெற்றி, தொடர்ந்து நிர்வாகிக்க முடியாத தன்மையைத்தான் உள்ளடக்கி இருக்குமே தவிர, இவை தொடர்ந்து நடைமுறையில் இருப்பதற்கு ஒரு துளிக்கூட வாய்ப்பு கிடையாது. தாம் வீழ்ந்து விட்டதற்காக எப்போதுமே தமிழ் தேசிய ராணுவம் துயரடைந்தது கிடையாது. காரணம் வீழ்ந்ததால் மட்டுமே தோல்வி நிர்ணயிக்கப்படுவதில்லை. எழாமல் இருப்பதிலேதான் தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, யாம் வீழ்ந்தோம் என்பதை கண்ட நம்முடைய பகைவர்கள், நாம் எழுந்ததை காணாமல் போனது அவர்களின் பேதமையை வெளிக்காட்டுகிறது. நாம் வீழ்ந்தே கிடப்பதற்கு கோழைகள் அல்ல. நமக்குள்ளான ஒற்றுமை சீர்குலைவே உண்மையான இனம் வீழ்வதற்கு காரணமாகியது. ஆனாலும் துரோகிகள் அடையாளப்படுத்தப்படும்போது, காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப்போல் அவர்களின் வரலாறும் வீழ்த்தப்படும். ஆனால் மண்ணின் மானத்திற்காக நின்ற மாவீரர்களின் அணிவகுப்பு, மண்ணைப் போன்று அங்கேயே நிலைநிறுத்தப்படும். யாராலும் இவர்களை, இவர்களின் வாழ்வை அழித்தொழிக்க முடியாது. ஆற்றல் கொண்ட எத்தனையோ பேய் அரசுகள் போராளிகளை வீழ்த்த பலமுறை முயற்சித்து, தோல்வியே கண்டிருக்கிறது. தாம் ஒவ்வொரு முறை வீழ்த்தப்படும்போதும் அவர்கள் புதிய புரிதலோடு, புதிய வாழ்வை கற்றுக் கொண்டு எழுச்சியோடு எழுந்து மீண்டும் போருக்கு செல்கிறார்கள். தமது லட்சியம் அடையும்வரை, தேவைகள் நிறைவாக்கப்படும்வரை, அவர்களின் பயணம் தொய்வடையப்போவது கிடையாது. அவர்கள் தொய்வடைவதற்கு தமது சொந்த நலனுக்கான போராளிகள் அல்ல. கூலிக்காக தன் மனைவி மக்களின் வாழ்விற்காக அவர்கள் களத்தில் இல்லை. தம் வருங்கால சந்தத்திக்காக, தமது இனமான அடையாளத்திற்காக, தமது மொழி, பண்பாடுகளுக்காக களத்திலே விலைமதிப்பற்ற தமது இன்னுயிரை கொடையாகத்தர மகிழ்வாக சிரித்த முகத்தோடு களத்திற்கு வந்திருக்கிறார்கள். வெறும் சித்ரவதைகள், அடக்குமுறைகள், அவமானங்கள், அட்டூழியங்கள் இவைகளால் அவர்களின் மனங்களிலுள்ள எழுச்சியை முடக்கிப்போட முடியாது. அவர்கள் தமக்காக வாழ்பவர்கள் அல்ல. தம் மக்களுக்காக வாழ்பவர்கள். தமது எதிர்கால நலனுக்காக அவர்கள் களத்திலே இல்லை. எதிர்காலத்தில் தமது இனம் மகிழ்வோடு இருப்பதற்காக களத்திலே இருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்தை எந்த அடக்குமுறையாலும் ஒடுக்கமுடியாது. எந்த கொடுமையாலும் குறைத்துவிட முடியாது. உடலில் ஏற்படுத்தப்படும் காயங்களால் அவர்களின் மனங்கள் மேலும் மேலும் எழுச்சியூட்டப்படுகிறது. அங்கங்களை இழந்து அவர்கள் அமைதி காப்பதில்லை. உடல் உறுப்புகள் அவர்களின் உத்வேகத்தை குறைக்கப் போவதில்லை. காரணம், அவர்கள் உடலால் மட்டுமே இந்த உலகத்தில்வாழ விரும்பாதவர்கள். உள்ளத்தால் இந்த மண்ணிலே ஒன்றி கிடப்பவர்கள். உடலில் ஒரு உறுப்பு சிதைக்கப்படுவதால் அவர்களின் உள்ளத்தில் இருக்கும் முழு லட்சியம் மேலும் மெருகூட்டப்படும். அவர்களின் உயிர் பிரியும்போது, அவர்களின் உள்ளம் இந்த உலகை அவர்களின் லட்சியத்தை, அவர்களின் போராட்ட கருவை வேறொரு உடலோடு ஒன்றச்செய்யும். தொடர்ந்து தமது இழப்பு ஒரு புதிய படைப்பாக உருமாறி இருப்பதைத்தான் இதுவரை போராளிகளின் வாழ்வு அவர்களின் நிகழ்வு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. போராளிகள் அச்சமற்றவர்கள். காரணம், அவர்களின் சொந்த நலன் இங்கே கிடையாது. அச்சம் என்பது லட்சியத்தின் விரோதி. அச்சம் ஒரு மனிதனை சிதைக்கும். அவன் மனதை கிழித்தெறியும். அவன் ஆற்றலை துடைத்தழிக்கும். அதுவும் உயிரச்சம் மாந்த குலத்தின் மாபெரும் எதிரி. இன்று பல ஆற்றல் வாய்ந்த போராட்டங்கள் ஒழிந்து போனதென்றால், அதற்கு உயிரச்சம் பெரும் காரணம். இன்று உலகெங்கும் அடக்குமுறையாளர்கள் உயர்ந்தெழுந்து ரத்தவாடை வீசும் தமது கோரை பற்கள் தெறிய சிரிக்கிறார்கள் என்றால், உயிரச்சம் கொண்ட மக்கள் தம்மை எதிர்க்க மாட்டார்கள் என்கின்ற தைரியம். ஆனால் இதை உடைத்து, உலகிற்கே ஒரு பெரும் அடையாளமாய் எமது தேசிய ராணுவம் கட்டி அமைக்கப்பட்டது. எமது தேசிய தலைவரின் வாழ்வு அதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. உயிரிழப்பதற்கு அவர் வாயிலிருந்து வரும் சொல்லே அவர்களின் கட்டளையாக இருந்தது. உயிர் வாழ்வதற்காகத்தான் யாசித்துக் கொண்டிருப்போர் இடையே, நான் உயிரிழக்கத்தயார். எம்மை களத்திற்கு அனுப்புங்கள் என்று யாசிக்கும் பெரும் படையை எமது தேசிய தலைவர் கட்டி அமைத்திருந்தார். உயிர் குறித்த ஆசை எமது தேசிய ராணுவத்திடம் துளிக்கூட இல்லை. அவர்கள் உயிர் வாழ்தலை ஒரு தவமாக கருதவில்லை. உயிரிழப்பைத்தான் அவர்கள் தவமாய் பெற்றார்கள். இந்த தவம், விடுதலை என்கின்ற வரத்திற்கான தவமாய் இருந்தது. அவர்களின் உயிர், தவம் என்றால், அவர்களின் வரம் விடுதலையாக காட்சி தந்தது. விடுதலை என்கின்ற அந்த வரத்தைப் பெற, ஆயிரக்கணக்கான தமிழ்தேசிய ராணுவத்தினர் உயிரிழப்பு என்கின்ற தவத்தை விரும்பி ஏற்றார்கள். உலகிலேயே உயிரிழக்க விரும்பிய பெரும் படை எமது தேசிய ராணுவத்தின் வீரத்தை, அவர்களின் மண்ணின்மீது கொண்ட நேசத்தை, வருங்காலத்தின் மீது கொண்ட அக்கறையை, உலகத்தமிழர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பை அடையாளப்படுத்தியது. அவர்கள் ஒருபோதும் தமக்காக வாழாது, முனிவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருநாளும் அவர்களின் சிந்தனை, விடுதலையைக் குறித்தே சிந்தித்தது. அவர்களின் பாதம் விடுதலையின் பாதையையே தேர்வு செய்தது. அவர்களின் பயணம் விடுதலையின் லட்சியத்திலேயே நடைபோட்டது. எப்படிப் பார்த்தாலும் தமக்கான விடுதலை ஒன்றே. தமது வாழ்வு என்கின்ற கோட்பாட்டளவு சிந்தனையாளர்களாக அவர்கள் திகழவில்லை. மாறாக செயல்வீரர்களாக மாறி நின்றார்கள். அந்த செயலிலே ஒரு தெளிவு இருந்தது. அந்த செயலிலே ஒரு நியாயம் இருந்தது. அந்த செயலிலே தர்மம் இருந்தது. அந்த செயல் எமது மக்களின் எதிர்கால வாழ்வின் உத்திரவாதம். அந்த செயல் எமது மக்களின் மகிழ்ச்சிக்கான களம். அந்த செயல் எமது எதிர்கால தலைமுறையின் எழுச்சி. எதிர்கால தலைமுறையின் வாழ்க்கை. எதிர்கால தலைமுறையின் நம்பிக்கை. இதுதான் அவர்களின் வாழ்வை தீர்மானித்தது. வெறும் ஐந்து பேருடன் களம் அமைத்த எமது தேசிய தலைவர், ஆயிரக்கணக்கான தமிழ் புலிகளை சாவை ஏற்கும் அளவிற்கு துணிவு கொண்ட படையாக கட்டி அமைத்தார் என்றால், அடிப்படையில் எமது தேசிய தலைவர் அந்த மக்களை நேசித்ததுதான் பெரும் காரணம் என்பதை எதிரிக்கூட மறுக்காமல் ஏற்றுக் கொள்வார். உலகில் நடைபெற்று முடிந்த பல்வேறு போராட்ட தோல்விகள், பல தருணங்களில் மரண பயத்தாலேயே நிகழ்ந்திருக்கின்றது. சாவுக்குமுன் வீசுகின்ற கடும் புயலால் அவர்களின் வாழ்வு அழித்தொழிக்கப்படுகிறது. தூக்கு மேடைக் குறிப்புகள் நூலில் ஜூலிஸ் பூசிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார், "இங்கே வருவதற்குள் உன்னிடம் மிஞ்சி இருப்பது, வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான ஒன்றேயாகும். இங்கே வருவதற்குள் உன்னுடைய நிஜ உருவத்தை அலங்கரித்த அல்லது பலஹீனப்படுத்திய அல்லது பக்குவப்படுத்திய எல்லாப் புறத்தோற்றங்களும், சாவுக்கு முன் வீசுகிற கடும் புயலால் வழித்து எறியப்பட்டுவிட்டன. எழுவாயும் பயனிலையும் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. விசுவாசமானவன் எதிர்க்கிறான், துரோகி காட்டிக் கொடுக்கிறான், வீரன் போராடுகிறான், கோழை சரணடைகிறான். நம் ஒவ்வொருவரிடமும் பலமும் பலஹீனமும் இருக்கின்றன. துணிச்சலும் பீதியும் இருக்கின்றன. உறுதியும் ஊசலாட்டமும் இருக்கின்றன. சுத்தமும் அசுத்தமும் இருக்கின்றன. இங்கு இவ்விரண்டில் ஒன்றுதான் மிஞ்சுகிறது. உண்டு அல்லது இல்லை. இவ்விரண்டு எதிர்முனைகளுக்கு இடையே, எவனாவது சாதுர்யமாக நடிக்க முயற்சித்தால், அந்த நடிப்பு சட்டென்று எல்லோர்க்கும் விளங்கிவிடும்." ஜூலிஸ் பூசிக், இட்லரின் சர்வாதிகார அடக்குமுறைக்கு பலியான போராளி. 1945 ஏப்ரலில் இட்லரின் நாஜுக் படை தோற்கடிக்கப்பட்டப்பின், இட்லர் மறைந்துபோனான். ஆனால் இன்று வரை ஜூலிஸ் பூசிக் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜூலிஸ் பூசிக் பட்ட சித்ரவதைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனாலும் கொண்ட லட்சியத்தில் ஒரு துளிக்கூட பின்வாங்காமல் இறுதிவரை அடக்குமுறையாளனை எதிர்ப்பதில் தெளிவான திசையை கண்டறிந்து, அதைப் பின்பற்றினார். அதே பயணம்தான் தமிழீழத்திலும் தொடர்கிறது. எமது தேசிய தலைவரின் தலைமை அதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. எத்தனைப்பேர் என்ன பேசினாலும், அதை புறக்கணித்துவிட்டு, நமது லட்சிய தேவையை, நமது எதிர்கால மகிழ்ச்சியை, நமது நிரந்தர வாழ்வை உறுதிப்படுத்த நாம் புலிகளின் திசையில் புறப்படுவோம். அதுதான் நமது எதிர்காலத்தின் மையப்புள்ளி. நமது நிகழ்காலத்தின் நடைமுறை. நமது சந்ததிக்கான நிம்மதி. இதைத் தவிர்த்து, வேறெந்த சிந்தனையும் நமக்குள் எழ வேண்டாம்.




இலட்சியத்தை அடையும் பாதையில் தாயகமும் புலமும் சேர்ந்து பயணிப்போம்!


எமது நீண்ட தமிழ்த் தேசிய விடுதலைப் பயணம் இன்று மிக முக்கியமான கட்டத்தில் வந்து நிற்கின்றது. எமது தாயக நிலப்பரப்பு படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு கடந்த ஆண்டு இராணுவத்தால் முழுமையாக விழுங்கப்பட்டு நிற்கின்றது. சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்த எமது மக்கள் அந்த வடுக்களும் பாதிப்புக்களும் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து தேர்தல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் எமது அரசியல் உரிமைக்கான வேட்கையைத் தக்க வைக்கவும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் இப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொள்வது அவசியமாகின்றது.

இந்நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறப்போகும் தேர்தல் எமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் மக்களைக் குழப்பும் விதத்தில் ஏராளமான கட்சிகளும் நபர்களும் போட்டியிடுகிறார்கள். ஆளாளுக்கு வாக்குறுதிகளையும் கொள்கைகளையும் அள்ளி வீசுகிறார்கள். கொள்கை விளக்கத்தில் தெளிவற்ற சொல்லலங்காரங்களைக் கொண்டு மயக்கத்தை ஊட்டுகிறார்கள். இந்நிலையில்தான் எமது மக்களே நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
தேர்தல் பரப்புரைகளின் இறுதிக்கட்டத்தில் குட்டைகள் கொஞ்சமாவது தெளிந்துள்ளன. தமிழ்த் தேசியத்தில் பற்றுக்கொண்ட மக்கள் கூட்டத்திற்கு இரு தெரிவுகள் மட்டுமேயுள்ளன என்ற நிலைக்கு இன்று வந்துள்ளோம். ஒன்று வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; மற்றது சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி. இவற்றுக்கிடையிலான கொள்கைகளில் வித்தியாசமில்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை ஒருசாரார் ஏற்படுத்தி வருகின்றபோதும், உண்மை அப்படியில்லை. அடிப்படையில் பாரிய வேறுபாடுள்ளது என்று எமது மக்கள் புரிந்திருப்பார்கள்.அன்பான தாயகத்து மக்களே!
புலம்பெயர் தேசத்து மக்களாகிய நாம் இவ்வேளையில் உங்களுக்கு சில விளக்கங்களைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இந்த இரு தமிழ்த் தேசிய அணிகளுள் நாம் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு வரக் காரணங்கள் எவையென்பதையும் உங்களுக்கு விளக்கும் கடப்பாடு எமக்குண்டு. எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் முக்கியமான கட்டத்தை எட்டியபோது அதன் தலைமை தனியே களத்தில் மட்டுமே செயற்படாமல் புலத்திலும் கடுமையாக உழைத்தது. புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து எமது போராட்டத் தலைமை உச்ச விளைவைப் பெற்றுக்கொண்டு போராட்டத்தை முழுவீச்சாக்கியது. தாயகத்தையும் புலத்தையும் சரியான முறையில் ஒருங்கிணைத்தே எமது போராட்டம் முன்னோக்கி நகர்ந்தது. ஆக புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பென்பது சரியான முறையில் உள்வாங்கப்பட வேண்டுமென்பதில் எமது போராட்டத் தலைமை உறுதியாக இருந்ததுடன் அதைச் செயற்படுத்தியும் வந்தது.
இப்போதும் அதே நிலைமைதான் காணப்படுகிறது. எமது மக்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு உலக அரங்கில் நீதி கேட்பது மட்டுமன்றி, குரல்வளை நெரிக்கப்பட்ட நிலையில், கருத்துச் சுதந்திரமின்றி நசுக்கப்படும் எமது தாயக மக்களின் குரலாக எமது இனத்தின் அரசியல் வேட்கையை உலகில் உரத்து ஒலிக்கும் பணியையும் புலம்பெயர் சமூகம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. தாயக மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்களில் உதவுவதற்கான பொருளாதார வளத்தையும் இச்சமூகம் கொண்டுள்ளது. தாயக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அவர்களின் அரசியற் போராட்டத்துக்கு உறுதுணையாகவும் பயணிக்க புலம்பெயர் சமூகம் எப்போதும் தயாராகவே உள்ளது. இந்த அடிப்படையிலேயே, நாங்கள் அரசியற் செயற்பாடுகளில் பங்கெடுக்க விரும்பினோம். அவ்வகையில், புலம்பெயர் தேசத்துக்கு வருகைதரும் தமிழ் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களைச் செய்தோம். ஆனால் ஒருகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்புக்களும் ஈடுபாடுகளும் புறக்கணிக்கப்படத் தொடங்கின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நாம் தனித்தனியாகத் தொடர்புகளைப் பேணியபோதும் அக்கூட்டமைப்பின் தலைமை எம்மோடு சரியான வகையில் தொடர்புகளைப் பேண முன்வரவில்லை. அதுமட்டுமன்றி அவர்களைச் சந்தித்து உரையாடும் எமது அவாவும் புறக்கணிக்கப்பட்டது. குறிப்பாக, திரு சம்பந்தன் அவர்கள் பிரித்தானியா வந்திருந்தபோது அவரைச் சந்திக்க எமது மக்கள் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் எடுத்த முயற்சி உதாசீனப்படுத்தப்பட்டது. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தோடு தோளோடு தோள் நின்றவர்களைச் சந்தியாது வேறு நபர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிச் சென்றார்கள்.
புலம்பெயர் அமைப்புக்களுடன் கலந்துரையாடுவதை கூட்டமைப்பின் தலைமையாக இனங்காணப்பட்டவர்கள் தவிர்க்கத் தொடங்கினார்கள். அத்தோடு எமது விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து இவர்கள் வழுவிப்போய் தீர்வுத்திட்டம் தயாரிப்பது குறித்த செய்திகள் கிடைத்தபோது அவைதொடர்பில் கலந்துரையாடி எமது தரப்பு நியாயங்களைச் சொல்ல முற்பட்டபோதும் எமது கருத்துக்களை உள்வாங்கும் நிலை இருக்கவில்லை.
புலம்பெயர் தேசத்தில் எமது கொள்கைகளை மிகமிக இறுக்கமாகவும் தெளிவாகவும் வலியுறுத்தி அதைநோக்கிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கும்போது தாயகத்தில் எமது அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிட்டு அரைகுறையான இறுதித் தீர்வை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நகர்வது எமக்குப் பெருத்த ஏமாற்றத்தையளித்தது. எமது போராட்டங்கள் அனைத்தும் பெறுமதியற்றதாகப் போவதுடன், எம்மால் தொடர்ந்தும் புலத்திலே உறுதியான போராட்டங்களைச் செய்ய முடியாத நிலைமை தோன்றும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குமிடையில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.இந்நிலையில்தான் அடிப்படைக் கொள்கைளில் இருந்து கூட்டமைப்புத் தலைமை வழுவியதால் அதிலிருந்து வெளியேறி புதிய அரசியல் முன்னணியை திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தொடக்கினார். தமிழரின் ஒன்றுபட்ட அரசியற்சக்தி சிதறுவதைப் பொறுக்க முடியவில்லையாயினும், சரியான, உறுதியான புதிய முன்னணி உருவாவது எமக்கு ஆறுதலளித்தது. தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி உருவாகி, அவர்களின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து அவர்கள் வெளிப்படையாக அறிவித்தபோது அவர்களின் பாதையே சரியானதென்றும், தாயகத்தில் அந்தச் சக்தியின் உறுதுணையோடே நாம் எமது அரசியற் போராட்டத்தை முன்னெடுக்க முடியுமென்றும் நாம் தீர்மானித்தோம். வேறு சிலர் சொல்வது போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலம்பெயர்ந்த மக்களே உடைத்தார்கள் என்ற குற்றச்சாட்டு எந்த அடிப்படையுமற்றது என்பதுடன், கூட்டமைப்பை உடைத்த பழி அதன் தலைமையையே சாருமென்பதுதான் உண்மை.
அன்பான மக்களே!இன்று தாயகத்தில் நிலவும் அடக்குமுறைகளுக்குள் நின்று நீங்கள் தேர்தலை எதிர்கொள்கின்றீர்கள். அதுபோலவே தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் பலவித இடர்களையும் அடக்குமுறைகளையும் சந்தித்துப் போட்டியிடுகின்றது. இவற்றுள் மிக முக்கியமானது ஊடக
அடக்குமுறை. தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய செய்திகள், அவர்களின் கருத்துக்கள் என்பன குறிப்பிட்ட பத்திரிகைகளில் முற்றாக இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. அத்தோடு இவர்களுக்கெதிரான கடும் விமர்சனங்களும், கருத்துக்களும் ஊடக தர்மத்தையும் மீறி வைக்கப்படுகின்றன. அவற்றுக்கான எதிர்வினைகளை ஆற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. விளம்பரங்கள் மூலம் மட்டுமே தமது கருத்துக்களைச் சொல்வதற்கு அவ்வூடகங்கள் வழிசெய்கின்றன. இதனால் எமது மக்களுக்கு தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி பற்றிய போதிய தெளிவுகள் கிடைக்க முடியாமற் போகின்றது.
இதைவிட இன்னோர் அயோக்கியத்தனமும் நடைபெறுகின்றது. ஊர்பேர் தெரியாத, இதுவரை தோற்றம்பெறாத அமைப்புக்களின் பெயர்களைக் கொண்டு தமக்கு ஆதரவான அறிக்கைகளை தாமே எழுதிப் பிரசுரிக்கின்றார்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது புலம்பெயர் மக்களாகிய நாமேதான். புலம்பெயர்ந்த மக்கள் தம்மை ஆதரிப்பது போன்ற மாயையை உருவாக்க இப்படியான அரூப அமைப்புக்களைக் கற்பனையில் உருவாக்கி தாயகத்திலும், புலத்தில் சில வலைத்தளங்களிலும் அறிக்கைகளை எழுதிக் கொண்டுள்ளார்கள். அவையனைத்தும் பொய்யென்பதைத் தெரிவிக்கும் கடமை எமக்குண்டு.
எனவே புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியையே ஆதரிக்கிறோம் என்பதுடன், எமது கொள்கைகளிலிருந்து வழுவாமல் செயற்படும் அவாவோடு, வேறு வழியின்றி தவறான தலைமைத்துவத்தின் கீழ் இப்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் அரவணைத்து எமக்கான விடிவை நோக்கிய பயணத்தைத் தொடர நாம் ஆவலாயுள்ளோம் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரித்துச் செயற்படும் அமைப்புக்களாவன:

டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
டென்மார்க் தமிழர் பேரவைபிரித்தானியா பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்

பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்புஐக்கிய தமிழர் செயற்பாட்டுக்குழு - பிரித்தானியா

கனடா தமிழ்ப் பட்டதாரிகள் சங்கம்

கனடா மக்கள் கட்டமைப்புக்கள்

அவுஸ்திரேலியா மக்கள் கட்டமைப்புக்கள்

பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு

பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு

தமிழர் ஒன்றியம் - இத்தாலி

சுவீடன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு

யேர்மனி மகளிர் அமைப்பு

நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு

சுவிஸ் தமிழர் பேரவை

பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு
மேற்குறிப்பிடப்பட்ட மக்கள் கட்டமைப்புக்கள் யாவும் பலமான அரசியற் செயற்பாட்டைக் கொண்டவை. குறிப்பாக நோர்வே மக்களவையும் டென்மார்க் தமிழர் பேரவையும், அந்தந்த நாடு முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஜனநாயக வழியில் வாக்கெடுப்பு நடத்தித் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவரைக் கொண்ட தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய அரசியற் கட்டமைப்புக்களாகும். ஆகவே தமிழர்களே!
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் கடந்த காலத்தைப்போன்று தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுடன் ஒன்றிணைந்து பயணித்து எமது அரசியல் வேட்கையை அடையப் போராடத் தயாராகவுள்ளோம். நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் வந்துள்ளோம். இதன்மூலம் சீரிய ஒரு தலைமையைக் கொண்ட பலமான அரசியற்கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் எமது விடுதலைப் பயணத்தைத் தொடரவேண்டுமென விரும்புகிறோம்.
யாழ்ப்பாணம், திருமலை தேர்தல் மாவட்டங்களில் வாக்களிக்கும் உரிமையுள்ள எமது தாயக மக்கள், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரித்து அவர்களுக்கு வெற்றியீட்டிக் கொடுக்க வேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் வேண்டிக் கொள்கிறோம். யாழ் மற்றும் திருமலை தவிர்ந்த மற்றைய தமிழர் பிரதேசங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பலர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாக நாம் அறிகின்றோம் ஆதலால் குறிப்பாக அம்பாறை, வன்னி மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களில் வாக்களிக்கும் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை நாம் வரவேற்கின்றோம்.
நன்றி!

"தமிழரின் தாகத்தைத் தரணிக்குக் கூறிடுவோம்"

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் கட்டமைப்புக்கள்