*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Sunday, April 4, 2010

எமது அரசியல் போராட்டத் தள அகராதியிலிருந்து “துரோகி” என்ற சொல்லாடலை எடுத்து வீசிவிடுங்கள்! - நடராஜா முரளிதரன்-

இது எமது தலையில் நாமே தூர் வாரும் செய்கையாக அமைந்து விடும்" என்ற தலைப்பில் இணையத் தளமொன்றில் கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. நடைமுறை யதார்த்தத்திலிருந்து விலகிக் கற்பனையுலகில் “மண் கோட்டை” ஒன்றை எழுப்புவதற்கான எத்தனத்தில் வெறும் “புலுடா” விடுவதற்கான களமாகத் 'தமிழீழ விடுதலைப் போராட்டம்" என்ற சொல்லாடல் அமைந்து விடலாகாது என்ற முனைப்பே இதை வாசித்தவுடன் என்னுள் எழுகின்றது.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டச் செல்நெறி” என்பது வரலாற்று ரீதியாகப் பிறப்பெடுத்த ஓர் நிகழ்வு. அவ்வாறான ஓர் நிகழ்வு தளத்திலே பாரிய பின்னடைவுக்கு உள்ளாகின்ற போது புலத்திலே பல்வேறு கட்டமைப்புக்கள் முளை விடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டேயாகும் என்ற குறைந்த பட்ச உண்மையைத் தமிழ் மக்களாகிய நாம் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்?
“புலம்” என்று நாம் கூறும் போது நாம் வாழும் மேற்குலக நாடுகளே முக்கியத்துவம் பெறுகின்றன. அவையெல்லாம் “தாராளவாத ஜனநாயகம்”(டுiடிநசயட னுநஅழஉசயஉல) என்ற கோட்பாட்டின் கட்டமைப்பில் எழுந்து நிற்பவை. பல்வேறு அரசியற் கட்சிகள் வௌ;வேறு கொள்கைகளை முன்வைத்துக் கொண்டு இயங்குபவை. ஜனநாயகத்தில் அவ்வாறான பல கட்சி இயங்குமுறையின் சுழற்சி சமூக ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் கட்டுமானமாக இந் நாடுகளில் கருதப்படுகின்றது. அதனால் அச் சூழலுக்குள் வாழும் எம்மில் பெரும்பாலானோர் அவை குறித்த ஓரளவு அறிவையாவது கொண்டுள்ளோம். எனவே இயல்பாகவே அதன் தாக்கம் காரணமாகவும் அதற்கும் அப்பால் சுயமான மனிதச் சிந்தனை காரணமாகவும் பல்வேறு கட்டமைப்புக்களைக் கட்டுவதன் மூலம் எமக்கான எம் மக்களுக்கான மீட்சியின் எதிர்பார்ப்பில் எம்மில் பெரும்பாலோனோர் ஓடிக் கொண்டேயிருக்கின்றோம்.
எனவே இவ்வாறான புரிதலோடு இவ்வகையாகச் செயற்பட முனையும்; மனிதர்களை “மனிதநேயவாதிகளாகவே” நாம் நோக்குதல் பொருத்தமுடையதாக அமையும். எனவேதான் “அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம் பெறுவதற்கான புறச்சு10ழலுக்கு வழிகோலுவது” போன்ற அபத்தமான சொற்றொடர்களைக் காணும் போதும் கேட்கும் போதும் மிகுந்த பதட்டம் ஏற்படுகின்றது.
“சிங்களம் வனையும் இரண்டாவது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத் தன்மையைக் கொண்டுள்ளது” என்று அக்கட்டுரையில் அமைந்திருந்த சொல்லாடல் எனக்குப் புதுமையாக இருக்கின்றது. ஏனெனில் சிங்களம் என்றுமே சிலந்தி வலைப்பின்னல் போன்ற அதன் பரந்து விரிந்த உலகளாவிய கட்டமைப்புக்களுக்கூடாக அன்று தொட்டு இன்று வரை தமிழ்த் தேசியத்தைச் சிதறடித்தே வந்துள்ளது என்பது வெளிப்படையானது.
ஆனால் இன்று அதன் சூழ்ச்சிகரத் திட்டம் வேறுவகையில் மையம் கொள்வதாகவே நான் உணருகின்றேன். தமிழ்த் தேசியமானது காலஅவகாசத்தைப் பெற்றுத் தன்னைச் சுதாகரித்தக் கொண்டு மீண்டும் எழுவதைச் சிங்களம் விரும்பவில்லை. அதற்கு உகந்த வலுவான ஆயுதமாக நாம் “அதிதீவிர” நிலைப்பாடு எடுப்பதையே சிங்கள இனவாதம் விரும்புகின்றது. நாம் எமது மக்களை இயல்பு வாழ்க்கைக்குள் அழைத்துச் சென்று சமூக பொருளாதார ரீதியாகப் அவர்களது வாழ்வியலைப் பலப்படுத்துவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு நாம் இன்று பேசி வரும் “தீவிர நிலைப்பாடு” எதிரிக்கு வாய்ப்பாக வழியமைத்துக் கொடுக்கின்றது. எனவே புலி பதுங்குவது பயத்திற்காக அல்ல பாய்வதற்காக என்பதைக் கணக்கில் கொள்ளாது தந்திரோபாய வியூக வகுப்பைக் குப்பைக் கூடையில் வீசி வெறும் “வெற்றுக் கோச விண்ணர்களாக” எம் தலையிலேயே மண்ணை அள்ளிக் கொட்டுவதே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்!
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான வழிமுறையென்று கூறும் எவரும் அதற்கான வழிமுறை ஏது? எப்படி? எவ்வாறு? என்ற வினாக்களுக்கான பதிலிறுத்தலைத் தவிர்த்து விட்டுத் தாண்டிச் செல்ல முடியாது.
மிகப்பெரும் கடப்பாடு இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கு எமது மக்கள் தொடர்பாக உண்டு. அதனை நான் மறுக்கவில்லை. பெரும் எடுப்பிலான யுத்தத்தின் ஊடாகத் தமிழீழத் தாயக பூமியை முழுமையாக ஆக்கிரமித்து படைவழியில் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிரி வெற்றி கொண்டுள்ளான். அத்தகைய வெற்றியின் ஊடாகத் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் துடைத்தழிக்க முடிந்ததா? என்பதே இன்றுள்ள மிகப் பெரிய கேள்வியாக முடியும். ஆகவேதான் சிறிலங்கா அரசுக்கு முண்டுகொடுத்து நின்ற - நிற்கும் பிராந்திய உலக வல்லாதிக்க சக்திகள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. அனைத்துலக நியாயப்பாடுகளுக்கு உடன்படிக்கைகளுக்கு அப்பால் இவ்வாறான நாடுகள் அனைத்துமே தங்களது தேசிய உள்ளக நலன்களை அடிப்படையாக வைத்துக் கொண்டே தங்களது அயலுறவுக் கொள்கைகளை வகுத்து வருகின்றது.
எனவே இந்த நாடுகள் யாவும் போட்ட கணக்குகளைத் தவிடு பொடியாக்கிவிடக் கூடிய மிகப்பெரும் சக்தியாக இன்று புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் திகழ்கின்றார்கள் எனக்கூறின் அவை மிகையான வார்த்தையாடல்களாகவே என் போன்றோரால் புரிந்து கொள்ளப்படும். உலக நாடுகளைப் புறந்தள்ளி பிராந்தியப் பேரரசுகளைக் கண்டு கொள்ளாது அவர்களுக்கான இராணுவ பொருளாதார பூகோள நலன்களை விடுத்து உலகின் சின்னஞ் சிறிய இனங்களில் ஒன்றான ஈழத் தமிழினம் அவர்களது கணக்குகளைத் தவிடுபொடியாக்குவது என்பது நடைமுறைக்கு ஒவ்வுமா? எனவேதான் நாடக வசனங்களை ஒப்புவிப்பது போலல்லாது மெய்யான வார்த்தைகளைத் தேடுவது அறம் நோக்கிய மாந்தர்கள் அனைவரினதும் கடனாகின்றது.
இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கு 1977இல் மக்களாணையைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் அதற்கான வேலைத் திட்டம் அன்று இருக்கவில்லை. அவ்வாறான வேலைத்திட்டத்தை வகுத்துக் கொள்வதென்பதும் அவர்களுக்கு இயலுமான விடயமாய் இருந்திருக்க முடியாது. அதன் விளைவு என்னவானது என்பது குறித்து வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி இன்று நாம் ஆய்ந்து கொள்ள முடியும்.
மேற்குலக தேசங்கள் தோறும் முன்னெடுக்கப்படும் பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசைகளை இலட்சிய உறுதியுடன் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வெளிப்படுத்தி வருவதால் மட்டுமே சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைத்துவிட முடியாது.
எமது கண்ணுக்கு முன்னால் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பேராதரவுடன் கூடிய 38வருட கால ஆயுதப் போராட்டத்திற்கு என்ன நிகழ்ந்தது? என்பது குறித்த ஆழ்ந்த ஆய்வே எமது எதிர்கால நடவடிக்கைகளுக்கான அடிப்படை முன் நிபந்தனையாக அமைகின்றது. அதைச் செய்யாது வெறும் முழக்கங்களைக் கோசிப்பதும் அரட்டை அடிப்பதும் வீராப்பு வசனங்கள் பேசுவதும் நடைமுறையில் எதனைச் சாதிக்கப் போகின்றது ? என்ற வினாவுக்கு நாம் விடையிறுத்தே ஆக வேண்டும்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாகப் புகலிடத் தமிழீழ மக்களைக் கண்டு கொள்வது வடிவமைத்துக் கொள்வது அடிப்படையில் மிகப் பெரும் தவறாகும். அந்த மண்ணிலே வாழுகின்ற மண்ணின் மைந்தர்களான அம்மக்களின் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டு அவர்களது பங்களிப்புக்களைக் கொச்சைப்படுத்தி நாம் எம்மைக் குறித்துப் பெருமிதம் கொள்ளுகின்ற தற்புகழ்ச்சி மிகவும் பிற்போக்குத்தனமானது.
“புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை நேரடியாகக் குறி வைத்து மிகவும் நுண்ணியமான சதிவலைப் பின்னலை சிங்கள அரசும் அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் வல்லாதிக்க சக்திகளும் வனையத் தொடங்கியிருப்பதை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது” எனில் அதற்கான வேலைத்திட்டத்தை எவ்வாறு நாம் முன்னெடுக்க முடியும் என்று கூறுகின்றீர்கள்?
துரோகம் துரோகி என்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்வது மட்டுமே இதனை வெற்றி கொள்வதற்கு போதுமானவையா? விடுதலை குறித்த உங்களது புரிதல் எவ்வாறுள்ளது? உங்களோடு சேர்ந்து கொள்ள முடியாத சகல தரப்பினரையும் அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற பிரக்ஞை எதுவும் இன்றி அவதூறு செய்வது உண்மைக்கு முரணான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது என்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு என்னவாகும்?
எனவேதான் இவ்வாறான அனைத்துத் தரப்பினரும் ஒன்று கூடி உரையாடுவதும் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுவதும் மிக முக்கிய எடுகோள்களில் ஒன்றாக அமைகின்றது. பொது எதிரியைப் பலவீனப்படுத்துவதற்கான தளத்தில் எமக்குள் விட்டுக்கொடுத்தல் என்பது சகலதரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய நெறிமுறைகளில் ஒன்று.நான் எண்ணுகின்றேன். எமது அரசியல் போராட்டத் தள அகராதியிலிருந்து “துரோகி” என்ற சொல்லாடலை எடுத்து வீசிவிட வேண்டுமென்று. ஏனெனில் இச் சொல்லாடல் எமக்களித்த வாய்ப்புக்களைக் காட்டிலும் மிக மோசமான பின்னடைவுகளைத் தோற்றுவித்த வரலாறே இமாலயத் தோற்றத்தோடு எம்முன்னே விரிந்து கிடக்கின்றது.
“2002ஆம் ஆண்டில் நோர்வே அரசின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட மறுகணமே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்காகக் களமிறக்கப்பட்ட பன்னாட்டு வலைப்பின்னலை ஒத்தவடிவில் இரண்டாவது சதிவலைப் பின்னல் வனையப்படுகின்றது. இதில் காட்சிகளும் பாத்திரங்களும் மட்டும் மாறியுள்ளனவே தவிர இதன் இலக்கு என்பது தமிழீழத்
தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது உண்மையாயின் இதற்கு முன்னான ஆண்டுகளில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கான முனைப்பில் யாரும் ஈடுபடவில்லையென்று பொருள் கொள்ளலாமா? அப்படியல்ல.
1983ஆம் ஆண்டு இந்திய அரசு முதன்முதலாகப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்ச்சியும் ஆயுதங்களும் வழங்கியமையால்தான் போராட்ட வேகத்தில் முதற்தடவையாகப் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டது. அப்போதே ஈழத்தமிழ் மக்கள் குறித்த இந்திய நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இந்திரா காந்தி இறக்காவிட்டால் இவ்வாறான மோசமான சூழலைத் தமிழ் மக்கள் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்திருக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்ற போதிலும் தனித் தமிழீழக் கோரிக்கைக்கு இந்தியக் கொள்கை வகுப்பாய்வாளர்களின் ஆதரவு என்றுமே இருந்ததில்லை என்ற உண்மையை நாமெல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
தர்மத்தின்பால் நின்று நாம் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பொழுதும் எம்மை ஏன் உலகம் புறக்கணித்தது? நீதியின்பால் நின்று போராடிய எமக்குத் துணை நிற்பதை விடுத்து எதற்காக அநீதியின்பால் நிற்கும் சிங்கள தேசத்திற்கு உலகம் துணைபோனது? எமது உறவுகள் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்ட பொழுது ஏன் உலகம் பாராமுகம் காட்டியது? என்ற கேள்விகள் இன்றும்கூட எம்மவரிடையே விடை தெரியாத வினாக்களாகத் தொக்கி நிற்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். இவையெல்லாம் விடை தெரிந்த வினாக்களே. அரசியல் அரிச்சுவடி தெரிந்த எவருமே இவ்வினாக்களுக்கு இலகுவில் பதிலளித்து விட முடியும். “அந்தந்த அரசுகளின் ஆளும் வர்க்கங்கள் தேசிய நலன்கள் என்ற பெயரில் வடிவமைத்துள்ள சட்டகமே இவ்வாறான நிலைக்குக் காரணமாக அமைந்ததென்பதே” இதற்கான பதிலாகும்.
உலக ஒழுங்கிற்கு இசைவாக எமது போராட்ட வடிவத்தை மாற்றியமைக்க முடியுமா? மாற்றியமைத்து எமது இலக்கினைச் சென்றடைவது சாத்தியமானதுதானா? என்பது குறித்த விவாதம் எமது அரசியல் அரங்கில் நிகழ்த்தப்பட வேண்டியமை இன்றியமையாத ஒன்று. இதனை வெறும் சிந்தாந்த தளத்தில் மாத்திரம் அல்லாது அநுபவங்களுக்கூடாகப் பெற்ற உண்மைகளின் வெளியிலும் இரண்டறக் கலந்து ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. வரலாற்றின் படிப்பினைகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தவறுகின்ற எவருமே புரட்சி போராட்டம் என்று கதையளப்பது வேடிக்கையானது.




1 comment:

  1. இந்தக் கட்டுரைக்கும் அதில் உள்ளவர்களுக்கும் என்ன சம்பந்தம்

    ReplyDelete