*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, April 7, 2010

திக்குத் தெரியாத காட்டில்..!

முள்ளிவாய்காலின் வீழ்ச்சி, தமிழர் கூட்டுமன நம்பிக்கையின் வீழ்ச்சிதான். அதுவரை மனதில் நிறைந்திருந்த புறநானூற்றுப் பெருமை வழிந்துபோக, பெரும் மன உளைச்சலும், எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையும், அச்சமும், கூட்டுமனங்களில் உறைந்திருந்தது. அரசியல் தலைமையின் வெற்றிடத்துள் இருள் திரட்சியாக இறங்கியிருந்தது.
சூழ்ந்திருந்த இருளுக்குள் ஏங்கிப் பெருமூச்சு விடுவதைவிட, இருக்கும் யதார்த்தத்தினுள், இனக் கௌரவ வாழ்வினை உறுதிப்படுத்தும் அவசியம் உணரப்பட்டது. அவ்வேளையில், கார்த்திகை 2009ல் ‘சூரிச்’; நகரில் ஒன்றுகூடிய தமிழ் அரசியல் கட்சிகளின் மகாநாட்டின் தீர்மானங்கள், இறங்கியிருந்த இருள்வெளிக்குள் மெல்லிய நம்பிக்கையாக மினுமினுத்தன.
‘தமிழ் பேசும் மக்ளிடையே ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் தேவை என்பதை ஏற்றுக்கொண்டு, ஒரு நீதியான நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக, சமூகத்தின் சகல பகுதியினரையும் உள்ளடக்கிய மாண்புள்ள, மதிப்புள்ள சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்போம்’
என்பதுதான் தீர்மானங்களில் முக்கியமானது.
சூழ்நிலைகளின் அடிப்படையில் புதிய முனைவாக, தமிழர் அரசியல்வாதிகள், அரசியல் தீர்வு என்ற பாத்திரத்தை உறுதியாகத் தாங்க முன்வந்தார்கள். ஆனால் ஒரு தேர்தல் காலமே இவர்கள் வாய்மையின் தூய்மைக்கான அக்கினிப் பிரவேசம் என்பது பலரது அப்போதயக் கருத்தாக இருந்தது. கருதியதுபோல் அவலச் சூழல், இவர்களின் ஆதாய அரசியல் அவாவில் துளிகூட மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. மாறாக, மேடை வெறுமையாக உள்ளது எக்கூத்தையும் நாம் ஆடலாம் என்ற உணர்வினையையே ஏற்படுத்தியுள்ளது. இருள்வெளிக்குள் இருந்த மினுக்கமும் இப்போது இல்லை.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அக்கறையற்றிருந்த தமிழர்கள் அதில் பங்குகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது, அவர்கள் எச்சூழலில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைத் தெளிவாகவே உணர்த்தியது. ஆலாய்ப் பறந்து அவரவருக்கான கூடாரங்களில் ஒதுங்கிய ஆதாய அரசியல்வாதிகளுக்கு தமிழர் மனநிலை ஒரு பொருட்டல்ல.
கொதியெண்ணெய்யா எரிநெருப்பா அதிக தீங்கானது என்ற மயிர்பிளந்த ஆராச்சிக்குப்பின், தமிழர் தரப்பினர் பொன்சேகா தரப்பினருடன் இணைந்து கொண்டனர். யுத்தம் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில், தமிழர் உரிமைகள் பற்றி பொன்சேகா உதிர்த்த பொன்மொழிகளைத் தமிழர் தரப்பினர் வெற்றிலையாய் சப்பி சாறாய் துப்பி விட்டார்கள். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனத் தானே நம்பாத ஒரு கோட்பாட்டைக் காவித்திரிந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தனது கட்சிச் சின்னத்தின் உரிமையை இழந்திருந்தது. இதில் தமிழர் இழந்த அனைத்தையும் பெற்றுக்கொடுப்பேன் என்ற பீலா வேறு. தமிழர்கள் இழந்ததைப் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ தான் அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் முனைந்திருந்தார் என்பது நிச்சயம்.
அதிபர் தேர்தலில் சிங்கள மக்கள் முன்னால் இரு தெரிவுகள் இருந்தன. நிரந்தரப் பகையாயும் அதுவரை வெற்றிகொள்ளப்பட முடியாமலும் இருந்த விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, சிங்கள மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்திய இருவர் அவர்கள் முன் நின்றார்கள். களத்தில் வெற்றிக் கனி பறித்து சிங்கள மக்கள் கைகளில் கொடுத்த பொன்சேகாவே தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு செயற்படுத்த முடியாமல் அவர்களைத் தடுத்த சக்தி எது? தமிழர் தரப்பினரோடு பொன்சேகா இணைந்துகொண்டதன் விளைவுதான் அது. ‘நாட்டைப் பிரிப்பதற்கான சதி’ என்ற என்றென்றைக்குமான துருப்புச்சீட்டு அப்போது ராஜபச்ச தரப்பினர் கைகளில். எவர், தமிழர் தரப்பினருடன் ஒப்பந்தம் செய்தாலும் இந்த துருப்புச்சீட்டு சிங்களர் மத்தியில் பல்லோர் உருவில் பலவாய் பிறப்பெடுக்கும்.
ஜே.ஆரின் புனித கண்டி யாத்திரையிலிருந்து வரலாறு இதைத் திரும்பத் திரும்பு புதிப்பிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. தமிழர்களிற்கான அரசியல் தீர்வை சிங்கள அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல அவர்கள் மக்களும் விரும்பவில்லை என்பதையே இது சுட்டுகிறது. மகிந்த ராஜபச்ச இதை உணர்ந்திருந்ததால்தான் ஏப்ரலில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அணிகள் பிரிதலின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதியின் அழைப்பிற்காகக் காத்திருந்தும் அது கைகூடவில்லை. வெற்றிக்கான வழிகளை அடைத்துக்கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை. தேர்தல் முடிவுகளின் பின்னர் இவ்வாறான நகர்வுகளுக்கு சிலவேளை முனையலாம்.
நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழர் வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், தமிழர் அரசியல் நலன் என்பதைவிட, வேட்பாளர்கள் நலன்களே முன்னிற்கின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கிடைத்த சந்தர்ப்பத்தில் தமக்கான ஆதாயங்களை அள்ளியெடுக்கும் மனநிலைதான்.
தாயகம் தேசியம் தன்னாட்சி கோட்பாட்டைத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. முன்னைய இதன் வேட்பாளர்கள் சிலர் இந்தியாவின் ஆலோசனைப்படி விலக்கப்பட்டமை, தமிழர் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இயங்குகின்றது என்ற கருத்து மேலோங்கி உள்ளது. இதை அவர்கள் தொடர்ந்து மறுத்தாலும் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை. அப்படியென்றால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவிற்காகவா தேர்தலில் போட்டியிடுகின்றது என்ற கேள்வி எழுகின்றதல்லவா? இந்தியாவின் தேவை நமக்குத் தேவை என கூட்டமைப்பினர் கூறுகின்றனர். உண்மைதான் அதேவேளை நாம் இந்தியாவின் தேவைக்காகப் பாவிக்கப்படாமலிருப்பது அதைவிட மிக மிக முக்கியமானதே.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், சீனாவின் நகர்வுகளால் இந்தியாவின் முக்கியத்துவம் இப்போது முன்னரைப்போல் வலுவானதாக இல்லையென்றே கொள்ளலாம். இலங்கையின் விரிந்த வரவேற்பறையில், சீனா கால்மேல் கால் போட்டுக்கொண்டு மூலிகைத் தேனீர் குடிக்கையில், இந்தியா இன்னும் வாசலோடேயே நிற்கின்றது.
ஈழத் தமிழர்கள் இந்தியாமீது கடும் கோபத்தில்தான் இருக்கிறார்கள். தங்கள் சாபம் என்றாவது ஒருநாள் இந்தியாவின் தலையில் இடியாக இறங்கும் என்று நம்புகிறார்கள். இருந்தாலும் ஈழத் தமிழர்கள் உரிமையில் இந்தியாவின் முக்கியத்துவம் நிராகரிக்கக்கூடிய ஒன்றல்ல. இலங்கையில் நாட்டமுள்ள வல்லாதிக்க நாடுகளில், தமிழர் நம்பிக்கை வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள நாடு இந்தியா ஒன்றுதான். ஆனால் இந்தியா நேர்மையுடன் உதவுமா? இந்த வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே தமிழர் உரிமைக்காக, இலங்கையை அதட்டியோ, பகைக்கவோ இந்தியா முன்வருமா? இக்கேள்விக்கு முன்வராது என்பதுதான் பதில். அதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உண்டு.
சிறிமாவே சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் கிட்டத்தட்ட ஆறு இலட்சம் தமிழர்களை, நாடற்றவர்கள் என்ற இலங்கை அரசின் அநீதியான வரையறையை ஏற்றுக்கொண்டது. கச்சதீவை இலங்கை அரசின் முதுகைத் தடவ தாரை வார்த்தது. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை எல்லை தாண்டி சுட்டுக் கொன்றபோதும், அதற்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. இவை இந்திய நாட்டுத் தமிழர்கள் பற்றியவை.
ஈழத் தமிழர்கள் பற்றி, 1987ன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரான சமாதான காலத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு போராளிகளை, இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒப்பந்த விதிகளை மீறி அவர்களிடம் கையளிக்க முனைந்து, பெரும் அவலத்திற்கு வழிகோலியது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சூத்திரதாரியாய் இலங்கையை பின்நின்று இயக்கியது. இப்படுகொலைகள் பற்றிய ஐ.நா.சபையின் மனித உரிமை மீறல் வாக்கெடுப்பின்போது இலங்கை அரசிற்கு ஆதரவாக நின்றது. இலங்கை அரசிற்கு உலக வங்கி நிதியுதவி நிறுத்தப்படலாம் என்ற கருத்து நிலவியபோது உடனடியாக அதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. இவையாவும் இந்தியா தான் கட்டிக்காத்து வருவதாகச் சொல்லப்படும் தர்மத்தின் பண்புகளை மீறி நடந்துகொண்டவையே.
இலங்கையைக் கோபப்படுத்தக்கூடாது என்பதற்காக இந்தியாவே அடங்கிப்போகிறது. தமிழர் உரிமையென்றவுடன் சினத்தில் சிலிர்த்து, அனைத்து உலகங்களையும் துச்சமாக மதிக்கும், நிரந்தர நோய்க்குணம் கொண்ட இலங்கையிடம், இந்தியா தமிழர் உரிமைபற்றிப் பேசும் என்பதற்கான நம்பிக்கைகள் எதுவுமில்லை. இன்றைய சூழலில் இலங்கை, இந்தியாவுடன் இழுபறியின்றி இணங்கிப்போவதற்கான சமிக்கை காட்டினால் போதும், இலங்கை அரசு தமிழர் உரிமைகள் என்ற பெயரில் அதிகாரங்கள் அற்ற எந்தச் சப்புச் சவரைக் கொடுத்தாலும், அதற்கு ஜால்ரா போட இந்தியா தயங்காது. இந்தச் சூழலில் தேசியக் கூட்டமைப்பின் இந்தியச் சார்புநிலை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாவது இயற்கையே.
‘ஒரு நாடு இரு தேசங்கள்’என்ற கோரிக்கையை, தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்வைத்துள்ளது. இவர்கள் தமது வெற்றிக்காக அல்லது வன்மம் தீர்ப்பதற்காக பிரதான எதிரியை மறந்து சிநேக முரண்பாடுகளைப் பெரிதாக்கி பகை முரண்பாடுகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். பகை முரண்பாடுகளோடு நல்லுறவைப் பேணுகிறார்கள். இப்போக்கு உரிமைக்காக போராடுவதற்கான போக்கிலிருந்து விடுபட்டு, தம்மோடு முரண்பட்ட கூட்டமைப்பின் சிதைவிற்கான இவர்கள் போராட்டமாக மாறக்கூடிய அபாயம் இவர்கள் முன்னால் உள்ளது. மிகப்பெரிய அழிவிலிருந்து மீண்டெழ முனையும் ஒரு இனத்திற்கு, இவ்வளவு பட்டறிவுக்குப் பின்னரும் இது ஆரோக்கியமா என்பதை இவர்கள் தீவிரமாகச் சிந்திக்கவேண்டும்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உரிமை கோரும் கட்சியல்ல அது சலுகைகள் கோரும் கட்சியே. இக்கட்சி எது ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அதன் கிளையாகவே இயங்கி வருகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்காவது தமது கட்சி சின்னத்தில் கேட்கும் துணிவு இருக்கிறது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அந்தத் துணிவுகூட இல்லை.
‘இந்திய பிராந்திய மேலாதிக்கத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் கால்பிடித்து நிற்கும் சிங்கள முஸ்லிம் மலையக ஆதிக்கத் தலைமைகளை அனைத்து மக்களும் ஓரணிசேர்ந்து எதிர்த்து நிற்கவேண்டும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் அடிமை விசுவாசம் தெரிவிக்கும் தமிழ்த் தலைமைகளை எதிர்த்து இந்திய மக்களோடும் உலக மக்களோடும் முற்போக்கான திசையில் அணி திரள வேண்டும்’ என்ற ஒரு பெரிய முழக்கத்தினை புதிய ஜனநாயகக் கட்சி முன்வைத்துள்ளது. புறநிலைகளைக் கணக்கில் எடுக்காத கற்பனை அறைகூவலே. மேலாதிக்க வரையறைகளுக்குள் சீனா கவனமாக தவிர்க்கப்பட்டுவிட்டதா?
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் தமிழ் தலைமைகள் மட்டும் விசுவாசம் தெரிவிக்கவிலை, சிங்களத் தலைமைகள்கூடத்தான் விசுவாசமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை ஏன் விடுபட்டுவிட்டனர். சிங்கள, தமிழ், முஸ்ஸிம், மலையக மக்களே ஒருவருக்கொருவர் இணைந்துகொள்ள முடியாமலிருக்கிறது. இந்நிலையில் இந்திய மக்களோடும் உலகமக்களோடும் முற்போக்குத் திசையில் அணிதிரள அழைப்பு விடுக்கிறார்கள். இவர்களுக்கே இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? இலங்கை வரலாற்றில் முற்போக்கு அரசியல்வாதிகளால்தான் ஈழத் தமிழர்களுக்குப் பாதகமான சட்டங்கள் இயற்றப்பட்டது.
முஸ்லிம் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் கட்சிகள், அது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எதுவாக இருந்தாலும் அவர்கள் தமிழ் கட்சிகளுடன் இணைவதிலும் பார்க்க சிங்கள பிரதான கட்சிகளுடன் இணைவதிலேயே அதிக விருப்புடையவர்கள். விடுதலைப் புலிகள் ஆட்சிக் காலத்துள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த விரிசல் மிக மிக அதிகமாகவே போய்விட்டது. அரசாங்கத்துடன் முன்னர் இவர்களுக்கு இருந்த பேரம்பேசும் வலு முள்ளிவாக்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து இருக்குமா என்பது சந்தேகமே. மலையக கட்சிகளிற்கு இருந்த புறச்சூழல் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களது நிலையிலும் வேறானது. ஆயினும் இன்றைய நிலையில் ஏனைய தமிழ் கட்சிகளைப்போல் வலுவற்ற நிலைதான்.
எல்லாத் தமிழ் கட்சி வேட்பாளர்களும் முள்ளிவாய்காலில் நடந்து கொடுமைக்கு நீதி கேட்ட தங்ளைத் தெரிவு செய்யும்படி வேண்டிக்கோண்டிருக்கிறார்கள். பிரதான கட்சிகளைத் தவிர அனைத்து உதிரிக் கட்சிகளும் டக்ளஸ் தேவானந்தாவின் இடத்தினை தாங்கள் கைப்பற்றி அரசின் செல்லப்பிள்ளையாவதுதான் உள்நோக்கமாக இருக்கிறது.
தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் சிங்கள மேலாதிக்க அரசில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சிங்கள பெருந்தேசியவாத அரசு அர்த்தமுள்ள தமிழர் தீர்வு எதனையும் வழங்கிவிடப் போவதில்லை. தழிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இப்போது அவசியமில்லை என்கிறார்கள். ஜனாதிபதியோ சமஸ்டி பேசுபவர்கள் அரசியலைத் துறந்து வீட்டிற்குப் போகலாம் என்கிறார். தமிழா ‘விருப்பமில்லாட்டி வெளியே போ’ என்ற கட்டளை கூட்டத்திற்கு வந்த மக்களிற்கு மட்டுமல்ல, இலங்கை எல்லாத் தமிழ் பேசும் மக்களுக்குமான பொதுக்கட்டளைதான். மாற்றம் தமிழர் தரப்பில்தான் ஏற்படும். அது அரசாங்கத்துடன் இணைவது சார்ந்தே இருக்கும். தமிழர் உரிமையில் இப்போது களத்திலுள்ள தலைமைகளுக்கு எதிர்காலத்தில் உறுதியான இலக்கு இல்லாமல் போகப்போகின்றது.
ஓட்டு மொத்தமாகப் பார்க்கையில் ஈழத் தமிழினமும் அதன் இப்போதய அரசியற் தலைமைகளும் இலக்கின்றி, வலிமையின்றி இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. இதைத்தான் இந்தியாவும் இலங்கையும் விரும்பியது. கிழக்கில் பறிபோய்கொண்டிருக்கின்ற தமிழர் நிலங்களின் வேகத்திற்கும் அதிகமாக, வடபகுதியில் சிங்கள ஆக்கிரமிப்பு காணப்படுகிறது. தமிழ் மக்கள் தமது பாதுகாப்பின்மையை எப்போதும் இல்லாத பயத்துடன் இப்போது அதிகம் உணர்கின்றார்கள்.
கொடும் போரின் அவலம் ஆறி, மக்கள் தம்மை சுயமாக மீளமைத்துக்கொள்ள எடுக்கும் காலம் பற்றிய கணிப்பிற்கு முன்னதாகவே, தமக்கும் தமது வாழ்விடங்களிற்கும் பாதுகாப்பு அரணாக விளங்கிய சக்தியின் ‘இன்மையின்’ எதிரொலியை உணரத் தெடங்கியுள்ளனர். வழமைபோல் அரசியல் உரிமை பற்றிப் பேசிப் பேசிக் காலம் கழிகையில், தமது இருப்பின் சகல வேர்களையும் முற்றாக இழந்துபோகும் மக்களைக் காக்க, வானத்திலிருந்து எந்த அவதாரங்களும் மண்ணிறங்கப் போவதில்லை.
வீழ்ச்சியின் அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் தெளிந்த அரசியல் இராஜதந்திரத்துடன் வலிமைமிக்க ஆயுத செயற்பாடுகளையும் ஒன்றிணைக்கும் தலைமையை தமிழ் மக்களிற்கு வரலாறு அளிக்கும்.




No comments:

Post a Comment