*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, April 6, 2010

"பிரிவினைவாதம்" என்ற பெயரில் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை" தடைசெய்தால்........? அதற்கு:

பிரிவினைவாதம் என்ற பெயரில் தமிழரை அடக்கப் புதிய சதி இனப்பிரச்சினைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்குப் பதிலாக- அரசாங்கம் தவறான பாதைகளைத் தெரிவு செய்யவே முற்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுவதாகவும்- அதைத் தடைசெய்ய வேண்டும் என்றும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வருகிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு அவர் தெரிவித்திருக்கும் காரணங்கள் விசித்திரமானவை.
“அவர்கள் இன்னமும் பிரிவினைவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை, தனிநாடு பற்றிப் பேசுகிறார்கள், அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள், சமஷ்டித் தீர்வொன்றைக் கேட்கிறார்கள், வடக்கு-கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேசுகிறார்கள், பொலிஸ் அதிகாரங்களை கேட்கிறார்கள்- இப்படி விசித்திரமான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்கிறார்கள்.”
இது தான் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருக்கும் காரணங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு எவ்வளவோ காலமாகி விட்டது என்று அண்மையில் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். அதாவது புலிகள் பலமாக இருந்த போதும் தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் ஏற்கவில்லை என்பது அவரது கருத்தாக இருந்தது. அது ஒருபக்கத்தில் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிநாடு பற்றியோ அல்லது பிரிவினை பற்றியோ பேசவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான அரசியல் தீர்வு ஒன்றே அவர்களின் அரசியல் கொள்கையாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய வேண்டும் என்று கோருவது விசமத்தனமானது. சமஷ்டி பற்றிப் பேசுவதோ, அதிகாரங்களைப் பகிர்ந்து தருமாறு கோருவதோ அல்லது பொலிஸ் அதிகாரங்கள் தருமாறு கேட்பதோ, வடக்கு-கிழக்கை இணைக்கக் கோருவதோ பிரிவினைவாதமா?
தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகவே இலங்கையில் அகிம்சைப் போராட்டம், ஆயுதப்போராட்டம் என்று இறங்க வேண்டியிருந்தது. காலம்காலமாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமிழரின் உரிமைகளை வழங்க மறுத்ததன் விளைவே- கோத்தாபய ராஜபக்ஸ சொல்வது போன்ற முப்பது வருடப் பயங்கரவாதம்.
தந்தை செல்வாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளை அப்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால் ஆயுதப்போராட்டம் தோன்றியிருக்காது.
அரசியல் வழியில் நடந்த உரிமைப் போராட்டங்கள் நசுக்கப்பட்டதன் விளைவே ஆயுதப்போராட்டம் ,தனிநாடு கோரிய போராட்;டம் என்பன தோற்றம் பெற்றன.
தமிழ்மக்கள் இன்று ஆயுதப்போராட்டத்தில் தோல்வி கண்டு நிற்பது உண்மை. ஆனால் அதற்காக அரசியல் உரிமைகள், அதற்கான கோரிக்கைகளை மறுந்து போக முடியாது. அதுபோலவே அரசாங்கத்தாலும் அந்தக் கோரிக்கைகளை மறுக்கவும் முடியாது. தமிழ்மக்கள் தமது நிலங்களில் நிம்மதியாகவும், சகல உரிமைகளோடும் வாழுகின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்காகவே அவர்கள் ஒரு அரசியல் தீர்வைக் கேட்கிறார்கள். சமஷ்டி என்றால் அருவருக்கத் தக்கதென்று கூறியிருந்தார் மகிந்த ராஜபக்ஸ. அதேபோலத் தான் அதற்குப் புதிய வியாக்கியானம் கொடுத்திருக்கிறார் கோத்தாபய ராஜபக்ஸ.
சமஷ்டி என்றால் பிரிவினை என்ற அர்த்தம் இருக்குமேயானால்- இந்தியா, சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், என்று உலகில் உள்ள எத்தனையோ முன்னணி நாடுகளில் நடைமுறையில் இருக்கும் சமஷ்டி ஆட்சிமுறையைக் கேவலப்படுத்துவதாக அமையும்.
அங்கெல்லாம் பிரிவினைவாதம் தலைதூக்கவிலையே. வடக்கு-கிழக்கை இணைக்குமாறு கேட்பதோ அல்லது அதிகாரங்களைப் பகிர்ந்து தருமாறு கேட்பதோ பொலிஸ் அதிகாரத்தைத் தருமாறு கேட்பதோ எந்தவகையில் பிரிவினைவாதம் என்பது தெரியவில்லை. இந்தியாவில் மாநிலங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் இருப்பதால் அவையெல்லாம் பிரிவினைக்கு தூண்டுகோலாக இருந்தனவா? அல்லது பிரிந்துதான் போய்விட்டனவா? அப்படியிருக்க பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாக அப்பட்டமானதொரு கருத்தை அரசாங்கம் தமிழ்மக்களின் அரசியல் போராட்டத்தின் மீது விதைக்க முற்படுகிறது. இது சிங்கள மக்கள் மத்தியில் தமிழரின் அரசியல் போராட்டம் மீதான வெறுப்பையும் காழ்ப்பையும் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் சதியாகவே கருதப்பட வேண்டும். நாட்டில் அமைதியையும், நல்லிணக்க சூழலையும் ஏற்படுத்தப் போவதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம்- இத்தகைய கருத்தின் மூலம் சிங்கள- தமிழ் மக்களிடத்தில் அவநம்பிக்கையையே விதைத்துக் கொண்டிருக்கிறது. வாக்குகளுக்காக இப்படியான கருத்துக்களை விதைப்பதன் விளைவு மிகவும பாரதூரமாகவே அமையும். இன்னொரு புறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தால்- அது அரசாங்கம் ஆபத்தான வழியில் பயணம் செய்ய முற்படுகிறது என்பதே அர்த்தம்.
தமிழ்மக்களின் உரிமைக்காகத் தொடங்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தை அரசாங்கம் பயங்கரவாத முலாம்பூசி தோற்கடித்தது. ஆனால் அதே உரிமைக்கான அரசியல் போராட்டத்துக்கு பிரிவினைவாதம் என்ற முலாம் பூசித் தோற்கடிக்க முனைவது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நல்லதொரு எதிர்காலத்துக்கே வழிவிடும்.
அரசாங்கம் இப்படியானதொரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்யுமானால் அது வரலாற்றில் இழைத்த மிகப்பெரிய தவறாக சிங்கள மக்களால் உணரப்படும் காலம் வெகுதொலைவில் இருக்காது. ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, ஜனநாயக வழிகளில் உரிமைக் கோரிக்கைகளை எழுப்பும் கட்சிகளையோ தடைசெய்வதை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்க முனையாது. தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை மீளவும் சர்வதேச அரங்குக்குக் கொண்டு செல்வதற்கும் இது ஒரு வாய்ப்பை எற்படுத்திக் கொடுக்கும். நாட்டில் அமைதியையும், நல்லிணக்க சூழலையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்குமேயானால்- இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை விடுத்து, தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகள் வழங்க முனைய வேண்டும். அதுவே இன்றைய நிலையில் புத்திசாலித்தனமான காரியம். அதற்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்து பிரிவினைவாதிகள் என்று அவர்களை சிறையில் அடைப்பதன் மூலம்- ஆகப்போவது மீளவும் பிரிவினைவாதத்துக்கு புத்துயிர் கொடுப்பதாகவே இருக்கும். அரசாங்கம் மீளவும் பிரிவினைவாதத்துக்கு புத்துயிர் கொடுக்கப் போகிறதா அல்லது அதிகாரப்பகிர்வு மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளப் போகிறதா? என்ற கேள்வி இப்போது எழுகிறது. இந்தக்கட்டத்தில் அரசாங்கம் தெரிவு செய்யப் போகும் பாதை எதுவென்பதைப் பொறுத்தே இலங்கைத்தீவில் அமைதியும், நல்லிணக்க சூழலும் உருவாகும்.




No comments:

Post a Comment