*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 10, 2010

போர்க் குற்றங்கள்: மெதுவாக குறிவைக்கப்படும் சிறிலங்கா

அறுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரமடைந்ததாக கூறப்படும் சிறீலங்கா, வரலாற்றில் என்றுமில்லாத அளவு சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து நிற்கிறது. சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளில், இரு பெரும் சக்திகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்த அழுத்தத்தை வழங்குவதில் முன்நிற்கின்றன. நடைபெற்று முடிந்த போரில், ஆயிரக்கணக்கான [ஐ.நாவின் முன்னால் பேச்சாளரின் கருத்துப்படி இறுதிக் கட்டப் போரில் மட்டும் சுமார் 40 ஆயிரம்] மக்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாக ஆரம்பித்தன.இதன் ஒரு கட்டமாக, இலங்கைத் தீவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் [UN Human Rights Council] விசேட அமர்வொன்று இடம்பெற்றது. இதனை மேற்கத்தேய நாடுகளே முன்மொழிந்ததுடன் அதில் அக்கறையும் செலுத்தியிருந்தன. ஆனால், அன்றைய காலப் பகுதியில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக ஜெனிவாவில் பணியாற்றிய திரு.டயான் ஜயதிலக்க தனது இராஜதந்திர சாணக்கியத்தின் மூலம் அதனை முறியடித்திருந்தார். திரு.டயான் ஜயதிலக்க சிறீலங்காவினுடைய இராஜதந்திரிகளில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர். அதேவேளை முன்னால் ஜெனரல் சரத்பொன்சேக கள முனையில் வழங்கிய பங்களிப்புக்கு நிகரான பங்களிப்பை சர்வதேச ரீதியில் வழங்கியவர். ஜெனரல் சரத்பொன்சேகவை தேசிய கதாநாயகனாகவும், திரு.டயான் ஜயதிலக்கவை சிறீலங்காவின் சர்வதேச கதாநாகனாகவும் சில மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டு ஊடகங்கள் வர்ணித்திருந்தன. ஆனால் இன்று, சிறீலங்கா மேற்குலகிலிருந்து எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு திரு.டயான் ஜயதிலக்க சிறீலங்காவின் இராஜதந்திரப் பணியில் “நேரடியாக” இல்லை. மனித உரிமை மீறல் தொடர்பாக எழுகின்ற குற்றச்சாட்டுகளில், பிரதானமானதாகவும் சவால் மிக்கதாகவும் போர்க் குற்றச்சாட்டே முன்வைக்கப்படுகிறது. அதனை மகிந்த நிர்வாகம் அடியோடு மறுத்து வருகிறது. ஆனால், ஒரு காலத்தில், தேசிய கதாநாயகனாகப் பார்க்கப்பட்ட முன்னாள் ஜெனரல் சரத்பொன்சேகவே போர்குற்றம் இடம்பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.இது மகிந்த நிர்வாகம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வழிவகுத்தது. ஏனெனில், 4ம் கட்ட ஈழப்போரின் முக்கியமான கட்டங்களிலிருந்து அது நிறைவடையும் வரை சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக ஜெனரல் சரத்பொன்சேகவே இருந்தார். சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளரே போர்க்குற்றம் இழைத்தமைக்கான பொறுப்பெனவும், அது தொடர்பான விபரங்களை தான் சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கத் தயார் எனவும் தடுப்புகாவலில் வைக்கப்படுவதற்கு முன்னர் ஜெனரல் சரத்பொன்சேகா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதேவேளை, போர் நடைபெற்று முடிந்த பிற்பாடு அம்பலாங்கொடையில் பேசும் போது, தனது படையினர் போரில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக தாம் போர் மரபுகளை மீறிச் செயற்பட்டதென்ற கருத்தை முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகா தன் வாயாலேயே கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில், சிறீலங்காவின் ஆயுதப் படையினர் போர்குற்ற மீறல்களை நிகழ்தியிருக்கின்றனர் என்பதை அதில் தொடர்புடைய பொறுப்புமிக்க தரப்புகளே ஏற்றுக்கொண்டுள்ளன. அதேவேளை, போர்குற்றம் இழைக்கப்பட்டு பெறப்பட்ட வெற்றியின் கதாநாயகர்களில் பிரதானமானவரும் மகிந்த நிர்வாகத்துடன் இல்லை. அத்துடன், அந்த போர்குற்ற மீறல்களை நியாயப்படுத்திய சிறீலங்காவின் சர்வதேச கதாநாயகனும், சர்வதேச ரீதியாக போர்குற்றச்சாட்டு முதன்மை பெற்றுள்ள தருணத்தில் மகிந்த நிர்வாகத்துடன் இல்லை. போர்குற்ற மீறல்களை போரில் ஈடுபட்ட இரு தரப்புமே மேற்கொண்டதாக கூறப்படுகின்ற போதும், அதில் மற்றத் தரப்பான விடுதலைப் புலிகளில் அதற்கு பொறுப்பான யாரும் உயிருடன் இல்லை. ஆதலால், சிறீலங்காத் தரப்பினரே பொறுப்புக்குரிய பிரதான தரப்பாக மாறியுள்ளது. அத்துடன், பாரிய போர்க்குற்றச் செயல்களை சிறீலங்கா ஆயுதப் படையினரே நிகழ்தியுள்ளனர் என்ற கருத்து சாட்சியங்களுடன் மேலோங்கி வருகிறது. போர்குற்றச்சாட்டு விடயம் இன்றோடு அல்லது இன்னும் சிறிது காலத்தோடோ முடிவுக்கு வரப்போவதில்லை. இனிவரும் காலத்தில்தான், அதனுடைய கூரியமுனை சிறீலங்கா மீது பாயவிருக்கிறது. அதனடிப்படையில், போர்குற்றம் தொடர்பான பின்புலத்தை அலசி, அது எவ்வாறு இலங்கைத் தீவின் இன்றைய நிலைப்பாட்டோடு தொடர்புபடுகின்றது என்பதை ஆய்வுக்கு உட்படுத்துகிறது இந்த கட்டுரை.பல நூற்றாண்டுகளாக நீதியை நிலைநிறுத்துவதற்கான மரபுகள் நிலவி வந்த போதும், இவை யாவும் முதல் மற்றும் இரண்டாவது முறையாக சர்வதேச சட்டங்கள் என 1899 மற்றும் 1907ம் ஆண்டுகளின் ஹேக் சமவாயங்களிலேயே [Hague Conventions] ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டன. இவற்றின் தொடர்ச்சியாகவே ஜெனிவா சமவாயமும் [Geneva Convention] நோக்கப்படுகிறது. நான்கு ஜெனிவா சமவாயங்களுக்கும் பொதுவான சரத்து 3 சர்வதேச சட்ட மரபுகளை பிரதிபலிக்கிறது. சட்டங்களை அல்லது போர் மரபினை மீறுகிறமை போர்க் குற்றம் எனப்படும். படுகொலை செய்தல் அல்லது சர்வதேச தராதரங்களுக்கு புறம்பான வகையில் போர்கைதிகளை கையாளல், கைதுசெய்யப்பட்டவர்களை அல்லது நிபந்தனையின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கொல்லுதல், தீயநோக்கோடு மாநகரங்களை, நகரங்களை மற்றும் கிராமங்களை அழித்தல் போன்ற விடயங்கள் போர்க் குற்றத்துக்குள் உள்ளடக்கப்படுகின்றன.போர்க்குற்றங்களின் நவீன கால கோட்பாட்டு அபிவிருத்தியாக 1945 ம் ஆண்டு ஒகஸ்ட் 8ம் திகதி வெளியிடப்பட்ட இலண்டன் பட்டயத்தை [London Charter] அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூரன்பேர்க் தேர்வாய்வு [Nuremberg Trials] காணப்படுகிறது.அத்துடன், குறித்த பட்டயம் சமாதானத்திற்கு எதிரான குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றையும் வரையறை செய்கிறது. சிறீலங்கா மீதான போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவரப்பட்ட போது, ரஷ்யாவும் சீனாவும் தமது 'வீற்றோ' அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருந்தன. அதேவேளை, சிறீலங்கா மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என எந்தவொரு அரசும் இதுவரை இராஜதந்திர காரணங்களுக்காக தனித்து முறையிடவில்லை. அதனால், சிறீலங்கா அரசு இழைத்த போர்குற்றச்சாட்டுக்கள் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்துக்கோ [International Court of Justice- ICJ] அல்லது போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பான தனிநபர்கள் இதுவரை ஆக்கபூர்வமான முறையில் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படாமையால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ [International Criminal Court - ICC] செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை. ஆயினும், இவை எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தில் முதலாவது முறைப்பாட்மை பிரித்தானிய 1947 மே 22 ம் திகதி அல்பானியாவுக்கு எதிராக மேற்கொண்டிருந்தது. அதே பிரித்தானியாவே, இன்று சிறீலங்கா தரப்பு மேற்கொண்ட போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என முன்நிற்கிறது. அதேவேளை, இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிபெறும் இன்னொரு மார்க்கமாக, இத்தாலியில் ஸ்தாபிக்கப்பட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் [Permanent Peoples' Tribunal] திகழ்கிறது. இது அரசுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும், சுயாதீனமான ஒரு கட்டமைப்பாகவும் இயங்குகிறது. இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றமே, சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணையை கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடாத்தியது. விசாரணையின் முடிவில், சிறீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் அநீதியை இழைத்துள்ளதாக தீர்ப்பு வழங்கியது. இந்த அமைப்பு, உலகின் முதலாவது இனப்படுகொலையான ஆர்மேனியா இனப்படுகொலை [Genocide] தொடர்பான முக்கியத்துவம் மிகுந்த தீர்ப்பை 1984 ஏப்ரல் 16ல் வழங்கியிருந்தது. ஆகவே, சிறீலங்கா அரசாங்கம் தொடர்பாக நிரந்தர மக்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் மிக்கது எனக் கருதலாம். அந்த தீர்ப்பில், சிறீலங்கா அரசாங்கம் போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றை புரிந்ததாகவும், சிறீலங்கா அரசாங்கம் மீதான இனப்படுகொலை தொடர்பான முறைப்பாடுகளுக்கு மேலதிக விசாரணை தேவை மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமைக்கு சர்வதேச சமுகமே பொறுப்பு, குறிப்பாக அமெரிக்காவும் பிரித்தானியாவுமே இந்த பொறுப்பினை பகிர்ந்துகொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பு வெளியாகி சுமார், இரண்டரை மாதங்கள் கழிந்த நிலையில், கடந்த காலத்தில் சிறீலங்காவுக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக பிரித்தானிய மனவருத்தம் தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் காலப்பகுதியில் சிறீலங்காவுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அறியவருகிறது. அத்துடன், ஐ.நா செயலாளர் நாயகம் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை, சிறீலங்கா அரசின் மறைமுகச்செயற்பாடுகள் காரணமாக அணிசேர நாடுகள் [Non- Aligned Movement] ஆரம்பத்தில் எதிர்த்திருந்தன. ஆனால், தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அந்த விசாரணைக்குழுவுக்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளன. இதில், பிரித்தானியாவின் வகிபாகத்தால் சிறீலங்கா தரப்புகள் சினம்கொண்டுள்ளன. அதேவேளை, மனித உரிமை நிலைகள் மோசமடைந்து வருவதால், சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் [GSP+] சலுகை இடைநிறுத்தப்பட்டது. இதிலும் பிரித்தானிய முக்கிய பங்கு வகித்தது. இவை சிறீலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் நெருக்கடியை கோடிட்டுக் காட்டுகின்றன. அதேவேளை, பர்மாவில் [மியான்மார்] நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா அண்மையில் அறிவித்திருந்தமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இது, சீனாவுக்கு விரும்பத்தக்கதல்ல. ஆயினும், எதிர்ப்புகளை ஒரு புறம் தள்ளியபடி, பிரித்தானிய முக்கியமான ஒரு நகர்வை துணிகரமாக மேற்கொள்கிறது. அதேவேளை, சிறீலங்கா தொடர்பாக சீனா தொடர்ந்தும் ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. சீனாவின் அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களை கவனத்திற்கொள்ளும் போது, ஈரானுடன் ஒப்பிடுமிடத்து சிறீலங்கா சீனாவுக்கு ஒரு சிறிய பகுதிதான். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அண்மையில் மூன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தீர்மானங்களை சீனா எதிர்க்கவில்லையென்பது முக்கியத்துவம் மிக்கது.இதில், மேற்குலகின் இராஜதந்திரம் செல்வாக்கு செலுத்தியது. ஆகவே, மேற்குலகால் சிறீலங்காமீது முன்னெடுக்கப்படும் போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்காத தன்மை தோன்றக்கூடிய சாத்தியப்பாடுகள் முன்னரை விட தற்போது அதிகமாகத் தென்படுகின்றன. அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதனை முறியடிக்கத் துணைபுரிந்த இந்தியா, தற்போது அணிசேர நாடுகள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு எதிராக இதுவரை எத்தகைய நடவடிக்கைகளிலும் இறங்காமல் உள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இது, இந்தியா இலங்கைத் தீவு தொடர்பாக எடுக்க இருக்கும் கொள்கைமாற்றம் ஒன்றிற்கான ஆரம்பப் புள்ளியா என்ற வினாவை எழுப்புகிறது. அத்துடன், இராணுவப் பயிற்சிகள் தொடர்பாகவும், அதில் சிறீலங்காவிலும், அமெரிக்காவிலும் குறித்த நாட்டுப் படையினர் பங்குபற்றுவது தொடர்பாக உருவான முறுகல் நிலை உச்சநிலையை தொட்டுநிற்கிறது. இது, சிறீலங்கா, பிரித்தானியாவுடன் மட்டுமல்ல அமெரிக்காவுடனும் முரண்பாட்டுநிலையை தொடர்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே, அமெரிக்காவும் பிரித்தானியாவும் முதன்நிலை வகிக்கும் சர்வதேச சமூகத்தோடு, குறிப்பாக மேற்குலகோடு சிறீலங்கா அரசு வேண்டத்தகாத விளைவுகளை உண்டாக்கக்கூடிய முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது. மேலே கூறப்பட்ட பல புள்ளிகளையும் ஒன்றாக இணைக்கும் போது ஒரு கோலம் உருவாகிறது. இந்தக்கோலம், சிறீலங்கா வரலாற்றில் என்றுமில்லாத நெருக்கடியை சர்வதேச ரீதியாக எதிர்கொள்ளப்போகிறது என்பதற்கான குறிகாட்டியாகும். இதனை ஈழத்தமிழ் மக்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பது அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் காத்திரமான பங்கினை வகிக்கும்.




No comments:

Post a Comment