தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்தமைக்காக முகாம் மக்களது குடிநீரை இடைநிறுத்திய இலங்கைப் படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இராமநாதன் நலன்புரி நிலையத்திற்கான குடிநீர் விநியோகம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கேட்பதற்காக மக்கள் அந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரச செயலகத்திற்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் குடிநீர் இல்லை என்பதைத் தெரிவித்த போது சம்பவ இடத்திற்கு விரைந்த முகாமின் இரண்டாம் நிலையில் இருக்கும் சிறீலங்காப் படை அதிகாரி ஜெயவீர என்பவர் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.
தாக்குதலினைத் தாங்கமுடியாத மக்கள் தப்பி ஓடியுள்ளனர். மக்கள் ஓடும்போது அவர்களைப் பார்த்து நடைபெற்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்திருக்கின்றீர்கள். எனவே அவர்களிடமே தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கத்தியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலங்களிலும் தண்ணீர், உணவு, மருந்து உட்பட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த படை அதிகாரி காட்டுமிராண்டித்தனமாகக் கத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய காலப்பகுதி கடும் வெப்பமான காலப்பகுதி என்பதாலும் அங்கு இலட்சக்கணக்கான மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதாலும் குடிநீருக்கு கடந்த பல மாதங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
சம்பவம் குறித்து எமது செய்தியாளரிடம் கருத்துத் தெரிவித்த மக்கள்,
எமது வாழ்க்கையில் நாங்கள் உழைத்தே வாழ்ந்து வந்தோம். எமக்கான நிலத்தில் நாங்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டால் நாங்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் கையேந்தி யாரிடமும் அடி உதை வேண்டிய தேவை எமக்கில்லை. எம்மை இப்போதே எமது ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டால் நாங்கள் உடனடியாகவே வெளியேறுவோம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.



No comments:
Post a Comment