*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 5, 2010

தமிழ் மக்களின் வரலாற்றில் "ஒரு அக்கினிப் பரீட்சை"?


பொதுத்தேர்தலில் தமிழ்மக்களின் தெரிவு தமிழ்க்கட்சிகளா? பிரதான கட்சிகளா?

புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னமும் நான்கு நாட்களே உள்ளன. பிரசாரங்கள் ஓய்வுக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான வாக்காளர்கள் தாம் யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்பதை முடிவு செய்திருப்பார்கள். சிலர் வாக்களிப்பில் அக்கறையற்ற போக்கில் இருப்பதையும் உணரமுடிகிறது.

இது தமிழ் மக்களின் வரலாற்றில் நடக்கப் போகும் ஒரு அக்கினிப் பரீட்சை என்றால் அது மிகையான கருத்தல்ல. இந்தத் தேர்தல் தமிழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில்- தமிழ்மக்களின் எதிர்காலம் எப்படி அமைய போகிறது என்பதைத் தீர்மானிப்பதில் இந்தத் தேர்தலுக்கும் முக்கிய பங்கு இருக்கப் போகிறது.

தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகிறார்களா இல்லையா? இந்தக் கேள்வி முக்கியமானது.


அடுத்தது யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி அதைவிட முக்கியமானது.
இந்தத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாக வேண்டும். அது தமிழ் மக்களின் பலத்தை வெளிப்படுத்துவதற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

வடக்கு, கிழக்கில் இருந்து- மாவட்ட அடிப்படையில் தேர்தல் மூலம் 31 எம்.பிக்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தேசியப்பட்டியல் ஆசனங்களையும் சேர்த்தால் 34 ஆசனங்கள் வரை கிடைக்கும். இதில் சிங்கள, முஸ்லிம் மக்களின்; ஆசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஆகக் கூடியது 23 அல்லது 24 ஆசனங்களைத் தமிழ்க் கட்சிகளால் பெறமுடியும்.

இது ஆகக் கூடிய ஒற்றுமையின் மூலம் சாதிக்கக் கூடியது.

ஆனால் இந்தத் தேர்தல் தமிழரின் ஒற்றுமையை குலைப்பதற்கென்றே திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

ஆளுக்கொரு பக்கம் நின்று மோதிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாக தமிழரின் பிரதிநிதித்துவம் வெகுவாகப் பாதிக்கப்படப் போகிறது.

கடந்தமுறை தேசியப்பட்டியல் மூலம் தமிழ்மக்கள் இரண்டு ஆசனங்களைப் பெறக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்தமுறை அப்படி இரு ஆசனங்களைப் பெற முடியுமா என்பது சந்தேகமே.

திருகோணமலையிலும் கடந்த முறை இரண்டு ஆசனங்களைப் பெறமுடிந்தது. இந்தமுறை ஒரு ஆசனத்துக்காகவே போராடும் நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.


மட்டக்களப்பில் கடந்தமுறை நான்கு ஆசனங்களைத் தமிழர் தரப்பு பெற்றது. ஆனால் இந்தமுறை அதற்கு வாய்ப்புகள் இருக்காது என்றே கருதப்படுகிறது.
தமிழர் தரப்பின் பிரதிநிதித்துவம் புதிய நாடாளுமன்றத்தில் கேள்விக்குள்ளாகப் போகிறது என்பது உறுதியாகவே தெரிகிறது.

இதற்குக் காரணம் தமிழ்க் கட்சிகளிடத்தில் இருக்கின்ற ஒற்றுமையில்லாத நிலையேயாகும்.

அதேவேளை இந்தக் கட்டத்தில் தமிழ் மக்களால் எப்படி தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முடியும் என்ற கேள்வி எழுகிறது.

அதற்கு முக்கியமான தேவை- தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிப்பில் பங்கேற்பது தான்.

விருப்பு வாக்கு என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல்- விரும்பிய வேட்பாளர்- விருப்பமில்லாத வேட்பாளர் என்பதற்கு விடை தேடுவதை விட்டு, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய ஒரு கட்சியைத் தெரிவு செய்வது முக்கியமானது.

அடுத்து யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகிறது.

யாருக்கு வாக்களிப்பு என்பது அவரவர் சுதந்திரம்- அதில் யாரும் தலையிட முடியாது.
களனிப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பு தமிழ்மக்கள் எதிர்நோக்கப் போகும் பெரியதொரு சவாலை- ஆபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

வடக்குகிழக்கில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளுக்கு 12 ஆசனங்களே கிடைக்கும் என்பதே அந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு.

அது சரியானதாக இருக்குமா என்பது அடுத்த வெள்ளியன்று தெரிந்துவிடும்.

யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆசனங்களில் தமிழ்கட்சிகள் வெற்றிபெறும் என்றும் ஐதேகவும் ஆளும்கட்சியும் தலா 2 ஆசனங்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று கூறுகிறது அந்தத் தேர்தல் கருத்துக்கணிப்பு.

ஈபிடிபியுடன் சேர்ந்துள்ள ஆளும்கட்சிக்கு 2 ஆசனங்கள் கிடைக்கும் என்ற கணிப்பு சரியாக இருக்கலாம்.

ஆனால் ஐதேகவுக்கு யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் என்ற கணிப்பு சரியானதாக இருக்குமா என்பது கேள்வியே.

யாழ்ப்பாணத்தில் தமிழ்க்கட்சிகளால் 5 ஆசனங்களையே பெற முடியும் என்றும் வன்னியில் இரு ஆசனங்கள், திருகோணமலை, அம்பாறையில் தலா ஒரு ஆசனமும், மட்டக்களப்பில் 3 ஆசனங்களையுமே பெறமுடியும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

தமிழ்க்கட்சிகளால் எதைச் சாதிக்க முடியும் என்ற கேள்வியுடன் ஆளும் கட்சியைச் சார்ந்து நின்றாலே எதையாவது பெற்றுக் கொள்ளலாம் என்ற பிரசாரங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்றன.
அதாவது தமிழ் மக்கள் பிரதான கட்சிகளை சார்ந்து வரவேண்டும் என்ற இலக்குடன் பிரசாரங்கள் முனைப்படைந்துள்ளன.

ஆனால் அரசாங்கத்துடன் அல்லது பிரதான கட்சிகளுடன் இணைந்து நின்று அரசியல் நடத்திய கடசிகளாலோ அல்லது அந்தப் பிரதான கட்சிகளாலோ தமிழ்மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க முடிந்ததா?
இன்றைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கான உத்தரவாதத்தையாவது பிரதான கட்சிகளால் கொடுக்க முடியாதநிலையே உள்ளது.

சமஷ்டி கேட்டால், வடக்கு கிழக்கு இணைப்பைக் கேட்டால், அதிகாரப் பகிர்வைக் கேட்டால் அது பிரிவினைவாதம் என்று அர்த்தம் கற்பிக்கிறது அரசாங்கம்.
இப்படியான பிரதான கட்சிகள் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அவர்களின் உரிமைக்கான போராட்டத்துக்கு கொடுத்த விலைக்கான பதிலீடாக எதைக் கொடுக்கப் போகின்றன?

ஏமாற்றத்தைத் தவிர அவர்களால் எதையும் கொடுக்க முடியாது என்பதே உண்மை.
இன்னொரு பக்கத்தில் தமிழ்க்கட்சிகளால் எதைச் சாதிக்க முடியும் என்ற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன. அதிகாரத்தில் இல்லாமல் தமிழ்க்கட்சிகளால் எதையும் சாதிக்க முடியாது என்பது உண்மையே. ஆனால் தமிழருக்கான உரிமைகளை தட்டிக்கேட்க அவர்களால் தான் முடியும்.

தமிழ்மக்களின் ஆதரவு தமிழ்க் கட்சிகளுக்கே என்ற நிலைப்பாட்டை ஜனநாயக ரீதியாக சர்வதேச சமூகத்துக்குச் சொல்வதற்கு இது நல்லதொரு தருணம்.

தமிழ் மக்கள் தமது விருப்பத்தை– அபிலாஷைகளை சரியான முறையில் வெளிப்படுத்தக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் இது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்டால் சர்வதேசம் தமிழ்க்கட்சிகளின் கருத்துகளின் மீது கவனத்தைச் செலுத்தும்.
புலிகளின் கருத்தைப் பிரதிபலிப்பவர்களாக தமிழ்க் கட்சிகளைப் பார்த்த சர்வதேசம்- அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் பேச முனையும். இந்த நிலையை உருவாக்க வேண்டியதே இன்றைய அவசியத் தேவை.
ஏனென்றால் போருக்குப் பின்னர் நியாயமான அரசியல்தீர்வு ஒன்றை தருவதாகக் கூறிய அரசாங்கம் இப்போது அதைப் பற்றியே பேசுவதில்லை. அதுபற்றிப் பேசுவோரையும் பிரிவினைவாதிகள் என்று ஒடுக்குவதற்குத் தயாராகி வருகிறது. இந்தக் கட்டத்தில் தமிழ்மக்கள் தமது வாக்குகளைக் கொண்டு தமிழ்க் கட்சிகளை பலப்படுத்திக் கொண்டாலே நியாயமான அரசியல்தீர்வு ஒன்றுக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இது நிச்சயமானதொரு கருத்தல்ல.
ஆனாலும் தமிழ் மக்கள் தமக்கு அதிகாரப்பகிர்வோ அரசியல் உரிமைகளோ தேவையில்லை என்று கூறிவிட்டார்கள் என்று பிரதான கட்சிகள் கூறுவதற்கு இடம்கொடுக்கக் கூடாது.
தமிழ்மக்கள் தமக்கு உரிமைகள் தேவை என்பதை இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
இதை வெளிப்படுத்தத் தவறினால் அதன் விளைவுகளை அடுத்த ஆறு வருடங்களுக்கு மட்டுமன்றி அதற்கு அப்பாலும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.





No comments:

Post a Comment