*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, March 31, 2010

முயன்று தவறிக் கற்றல்….?

சிறி லங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்ததும் இன நல்லிணக்கம் உருவாகும், சுபீட்சம் மலரும் எனத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முறியடிப்பதில் பங்காற்றிய இந்தியா முதற்கொண்டு ஐரோப்பிய நாடுகள் வரை உபதேசம் செய்து வந்த போதிலும் நடப்பு நிகழ்வுகள் - தமிழ் மக்கள் எதிர்வு கூறியதைப் போன்று - அதற்கு எதிர்மாறானவையாகவே இருக்கின்றன. 'இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்" என்ற நிலை முன்னர் தமிழ் மக்கள் விடயத்தில் பொருத்தமாக இருந்தது. ஆனால், இன்று அது சிங்கள மக்கள் விடயத்திலும் பொருத்தப்பாடாக இருக்கின்றது. எந்த அரச இயந்திரத்தின் துணைகொண்டு தமிழ் மக்களும், அவர்தம் விடுதலைப் போராட்டமும் அடக்கி ஒடுக்கப் பட்டதோ அதே அரச இயந்திரம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கியவர்கள் மீதே ஈவிரக்கமின்றிப் பாயத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் பலத்தை நிர்மூலமாக்குவதில் முன்னின்று உழைத்த முன்னாள் படைத்துறைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தனது பிள்ளைகளுடன் தொலைபேசியில் கதைப்பதற்கான அனுமதி வேண்டி சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். அவரின் விடுதலை வேண்டி ஜனநாயக வழிமுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் காவல்துறையின் வழக்கமான 'உபசரிப்பு"க்கு ஆளாகி வருகின்றனர். 'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்" என்ற தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு மாறானதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் நிலைமை இன்று உள்ளது. இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு இவ்வாறானதொரு நிலைமை உருவாகும் என எவரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியை வேறு எவருடனும் பங்குபோட்டுக் கொள்ள விரும்பாத ராஜபக்ச சகோதரர்கள் சரத் பொன்சேகாவுக்கு மட்டுமன்றி ஒட்டுண்ணிகளான டக்ளஸ் மற்றும் கருணாவுக்கும் இதே போன்ற பரிசுகளையே தருவதற்குத் தயாராக உள்ளார்கள் என்பதே யதார்த்தம். ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கும் மகிந்த சகோதரர்களின் இதைப் போன்றதொரு அணுகுமுறையே காரணம் என கொழும்பில் ஒரு கிசுகிசு உலாவுகின்றது. இது உண்மையாகக் கூட இருக்கக் கூடும். தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் விடயத்தில் தமிழ் மக்களிடையே பிளவுகள் உள்ள போதிலும் சிங்களத் தரப்பில் - தனி நபர்களும் காட்சிகளும் மாறிய நிலையிலும் - எதுவித பிளவுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைத்து விடுவதில் கட்சி பேதமின்றி அவை செயற்பட்டு வருகின்றமை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிரூபிக்கப் பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது மீண்டும் ஒரு தடவை வெளிப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பரவலாக சிங்களத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியொன்றில் 'கட்சி எதுவாயினும் சிங்களவர்களுக்கே வாக்களியுங்கள்!" எனக் கோரப் பட்டிருந்தது. இது அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கையே. நாடு முழுவதும் சிங்கள ஆட்சியில் உள்ள போதிலும் கூட – திருப்தியடையாமல் - தமது பிராந்தியத்தின் பிரதிநிதிகளும் சிங்களவர்களாக இருக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் விரும்புவதன் வெளிப்பாடே இச் சுவரொட்டி. இத்தகையோரின் உணர்வையும், தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்துப் போட்டியிடுவோரின் உணர்வையும் ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கவலையே உருவாகின்றது. தமிழ்ப் பிரதேசங்களில் போட்டியிடும் பல கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைக்கும் நோக்குடன் அன்றி பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்யும் நோக்குடனேயே போட்டியிடுவதை மறைப்பதற்கில்லை. ஆனால், இது வரவேற்கத் தக்கதல்ல.
புலம்பெயர் நாட்டில் சொகுசாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து கொண்டு, தாயகத்தில் தினம் தினம் சொல்லொணாத் துயரை அனுபவித்துக் கொண்டு அன்றாடச் சீவியத்துக்காக அல்லலுறும் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் எனக் கூறும் தார்மீக உரிமை எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், தமிழர் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்த முடியும்.
ஒருமுகமாகப் பயணித்து வந்த தமிழர் அரசியலில் இன்று பல கிளைகள் உருவாகியுள்ளன அல்லது உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றுள் எது சரியானது எது பிழையானது என்பதை எதிர்கால வரலாறே தீர்மானிக்கும். ஆனால், இதுவரை நாம் சரியென ஏற்றுக் கொண்டு பயணித்த பாதை பிழையென நிரூபிக்கப்படாது இருக்கும் வரை அதே பாதையில் பயணிப்பதே சாலச் சிறந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் இருந்து வந்த தமிழ் மக்களின் அரசியல் பலம் பறிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இழந்த அரசியற் பலத்தை மீளவும் கையகப்படுத்த வேண்டிய தேவை தமிழ் மக்கள் முன்னே உள்ளது. நடைபெறப் போகும் பொதுத் தேர்தல் எமக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
இத் தேர்தலில் பகுத்தறிவுடனும் தமிழ் உணர்வுடனும் தமிழ் மக்கள் பிரயோகிக்கப் போகும் வாக்குகளே தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வையும் எதிர்கால அரசியலின் சென்னெறியையும் தீர்மானிக்கப் போகின்றது.
தற்போது எம் முன்னே இருப்பது எதையாவது பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு பரீட்சைக் களமல்ல. மாறாக வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ள ஒரு மரணப் பொறி. இதில் சாதுரியமாகவும் தூரநோக்குடனும் சிந்தித்துச் செயலாற்றாது விட்டால் நாம் எம்மையும் எமது எதிர்காலத்தையும் தொலைத்தவர்கள் ஆவோம். எனவே, தமிழ் வாக்காளர்கள் ஆழமாக யோசித்து நிதானமாக தமது வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டியது அவசியம்.




No comments:

Post a Comment