*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, April 2, 2010

இலங்கை என்ற "பெருந்தேசியவாதத்துக்குள் அடிமையாக்கும் தமிழ்த் தேசியவாதம்"

தடுமாறிக் கொண்டிருக்கும் தேசியவாதமும் பிரதேசவாதமும்.......?
இந்த மாதம் 8 ந் திகதி நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையப் போகிறது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில்- அளும்கட்சி மிகவும் பலமானதொரு நிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளோ பிரிந்து நின்று கோசம் போடுவதைத் தவிர பெரிதாக எதையும் சாதிக்கும் நிலையில் இல்லை. வழக்கம் போலவே தேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு சார்பாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கான போட்டியில் குதித்திப்பதில் ஆச்சரியம் இல்லை. அதேவேளை தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்குக் கிடைக்கப் போகின்றது என்ற கேள்வியும் தேர்தலுக்குப் பிறகு ஏற்படப் போகின்ற மாற்றங்கள் எப்படிப்பட்டதாக அமையும் என்ற கேள்வியும் இப்போதே எழத் தொடங்கி விட்டன.
இந்தத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்று மோதுவதும் அதிகளவிலான சுயேட்சைக் குழுக்கள் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் களமிறங்கியிருப்பதும் முக்கியமான விடயங்கள். பணத்துக்காகவே சுயேட்சைகள் அதிகளவில் களமிறங்கியிருப்பதாகப் பரவலான குற்றசாட்டுகள் சுமத்தப்படுகின்றன. குறிப்பாக ஆளும்கட்சியின் கைப்பொம்மைகளாகவே பெரும்பாலான சுயேட்சைகள் களமிறங்கியிருப்பது கண்கூடு. இதற்கென பல இலட்சம் ரூபா கைமாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் அதில் எவ்வளவுக்கு உண்மை என்பது சம்பந்தப்பட்ட சுயேட்சைகளுக்கே வெளிச்சம். யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவொன்றில் தலைமை வேட்பாளர் தாம் பணத்துக்காக களம் இறங்கவில்லை என்று கூறியிருக்கிறார். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சுயேட்சைகளாகக் களமிறங்கியுள்ள பல பிரபலங்களுக்கும் தமது ‘உயரம்’ என்ன என்பது தெரியாதிருப்பது தான் வேடிக்கை. நான்கு பேருக்குத் தெரியும் என்பதற்காக ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுவிடும் அளவுக்குச் செல்வாக்கு இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது தான் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
தம்மை சமூகத்தின் வழிகாட்சிகளாக நினைத்துக் கொள்ளும் இவர்கள்- வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தாம் தமிழ்ச் சமூகத்துக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறோம் என்ற அரசியல் தெளிவு கூட இல்லாதிருக்கின்றனர். சுயேட்சைகளாகப் போட்டியிட்டு ஆசனத்தைக் கைப்பற்றும் அளவுக்கு தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்கள் யாரும் இல்லை. அதைத் தெரிந்திருந்தும் போட்டியில் குதித்துள்ளவர்கள் மீது பணத்துக்காக விலை போனவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுவது இயல்பானதே.
அதேவேளை இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியல்கட்சிகள் மத்தியில் காணப்படும் பிளவுகள் ஒரு பிறழ்வு நிலையை நோக்கித் தள்ளிச் சென்றிப்பதையும் அவதானிக்க முடிகிறது. தமிழ் தேசியம் பேசிய கட்சிகளே ஒன்றுபட்டு நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையி;ல் மூன்று அணிகளாகப் பிளவுபட்டுப் போயுள்ளது. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்றோர் தனி அணியாக உள்ளனர். அவர்கள் தமிழ்த் தேசியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு- கூட்டணி சேர்ந்திருப்பது இடதுசாரி அணி ஒன்றுடன். இன்னொரு பக்கம் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் ஒரு அணி போட்டியிடுகிறது. மற்றொரு அணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக நின்கிறது. தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் தமிழ்க் காங்கிரஸ் எதற்காக திருமலையிலும், யாழ்ப்பாணத்திலும் மட்டும் நிற்கிறது? இதுவா தமிழ்த் தேசியம் என்று கேள்வி எழுப்புகிறது கூட்டமைப்பு.
அதேவேளை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பெரும்பான்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நியாயப்படுத்தி விடும் என்று கூறியிருப்பது தான் வேடிக்கை. ஏனென்றால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழருக்கு ஏற்பட்ட பேரழிவுகளுக்குக் காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியொரு நியாயம் கற்பித்திருப்பது வேடிக்கை. தமிழ்த் தேசியம் பேசிய சக்திகள் இப்போது மெல்ல மெல்ல பிரதேசவாதத்தைக் கிளறிவிட்டு அதில் குளிர்காயவும் முற்படுகின்றன இதை தேர்தல் பிரசாரங்களில் வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது.
இதற்கிடையே பிரதேச வாதம் பேசிய சக்திகளின் நிலையும் மாறத் தொடங்கி விட்டது. கிழக்கில் முதலமைச்சர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்தத் தேர்தலில் வடக்கிலும் போட்டியிடுகிறது. வடக்கில் ஆசனங்களை வெல்ல முடியுமா என்ற நம்பிக்கை அதற்கு இருக்கிறதா அல்லது வாக்குகளைப் பிரிக்க நினைக்கிறதா என்பதெல்லாம் ஒருபுறத்தில் இருக்கட்டும். ஆனால் இதனூடாக சந்திரகாந்தனின் கட்சி சொல்ல வருகின்ற செய்தியே முக்கியமானது. தமது கட்சி பிராந்தியக் கட்சி அல்ல என்பதை அந்தக் கட்சி வெளிப்படுத்த விரும்புகிறது. முன்னதாக கிழக்கு மக்களின் தனித்துவக் கட்சி என்றும் கிழக்கு மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே என்றும் கூறப்பட்டு வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தற்போது வடக்கிலும் கால் வைத்திருப்பது பிரதேசவாதம் தோல்வி காண்பதை வெளிப்படுத்துகிறது. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை சீரழிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கி வளர்த்து விட்டதே பிரதேசவாதம். அதற்கு பிரதான காரணமாக இருந்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள். ஆனால் அதே கட்சி இப்போது வடக்கிலும் தனது செல்வாக்கைப் பரிசோதிக்க முனைகிறது என்றால் வடக்கு,கிழக்கு என்று தமிழ்த் தேசிய வாதத்தை நோக்கி நகர விரும்புகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. இப்படியொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்க பிரதேசவாதத்துக்குள்ளேயும், தமிழ்த் தேசியவாதத்துக்குள்ளேயும் நின்று அரசியல் நடத்திக் கொண்டிருந்த இன்னொரு தரப்பு- இலங்கை என்று பெருந்தேசியவாதம் பேசத் தொடங்கியுள்ளது. முன்னர் தமிழ்த் தேசியத்தையும் பின்னர் கிழக்குப் பிரதேசவாதத்தை வலியுறுத்திய கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பெருந்தேசியவாதத்தை வலியுறுத்த ஆரம்பித்துள்ளார். தமிழ்த் தேசியவாதம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி கதிராமன், சதாசிவம் கனகரத்தினம் ஆகியோரும் அதே பெருந்தேசியவாதத்துக்குள் மூழ்கிப் போயுள்ளனர். இன்னொரு புறத்தில் வடக்கு,கிழக்கு என்ற கோட்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருந்த ஈபிடிபி இப்போது ஆளும்கட்சியின் கூட்டணியாக மாறியிருக்கிறது, வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடும் நிலைக்கும் அது வந்துவிட்டது. மொத்தத்தில் தமிழ் அரசியல்கட்சிகளின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்த் தேசியவாதம் இப்போது பிரதேசவாதம் பேச முற்படுகிறது. பிரதேசவாதம் பேசியோர் தமிழ்த் தேசியவாதம் நோக்கிப் பயணிக்க முற்படுகின்றனர். பிரதேசவாத, தமிழ்த் தேசியவாத அரசியல் நடத்தியோர் இலங்கை என்ற பெருந்தேசியவாதத்துக்கு அடிமையாகியுள்ளனர். இப்படியான பல பிறழ்வுகள் இப்போது தமிழ்மக்களின் அரசியலில் நிகழ்ந்துள்ளன. இந்தப் பிறழ்வுகள் தமிழ் மக்களின் நலனுக்காக நடந்தவையல்ல. தமிழ் அரசியல் தலைமைகளின் நலனுக்காக இடம்பெற்ற பிறழ்வுகளே




No comments:

Post a Comment