*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, March 24, 2010

தீவிரமடையும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான முறுகல் நிலை


தெருச்சண்டையாக மாறி விட்ட ஐ.நா- இலங்கை அரசு மோதல் இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவொன்றை அமைப்பதற்கு ஐ.நா பொதுச்செயலர் அண்மையில் தீர்மானித்திருந்தார். இதையடுத்தே இந்த முறுகல்நிலை தோன்றியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இறுதிக்கட்டப் போரின்போது- மிகமோசமான அழிவுகள் ஏற்பட்டன. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் சாட்சியங்கள் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கானோர் ஒரு நேர உணவுக்கே வழியின்றி பதுங்குகுழிகளுக்குள் பட்டினி கிடந்து உயிரைக் காப்பாற்ற முனைந்தனர். ஒவ்வொரு இடமாக அலைந்து அலைந்து கடைசியில் வவுனியா முகாம்களை அடைந்தபோது அங்கு அவர்களை முட்கம்பிவேலிச் சிறைக்கூடங்களே வரவேற்றன. ஆறு மாதங்கள் வரை முட்கம்பிகளுக்கு வெளியே என்ன நடக்கிறது என்ற தெரியாமல் அவர்களும்- அதற்கு உள்ளே என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் அவர்களின் உறவுகளும் அந்தரித்துப் போயினர். இந்த இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த- போர்க்குற்ற மீறல்கள் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது வலுவடைந்து வருகின்றன. இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு குற்றச்சாட்டு வந்தபோது, அதை சீனாவும் ரஷ்யாவும் தமது அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தின. இந்தநிலையிலும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் அடங்கவில்லை. இதுதொடர்பான ஏகப்பட்ட போராட்டங்கள் உலகெங்கும் நடந்தன- நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரையில் ஐ.நா உருப்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. தமிழ்மக்கள் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட போது ஐ.நா அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிறையவே உள்ளன.
ஒருகட்டத்தில் இலங்கை அரசுக்குச் சார்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் செயற்படுவதாகக் கூட குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைதுக்குப் பின்னர் தான் ஐ.நா பொதுச்செயலரின் செயற்பாடுகளின் மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. இதன் பின்னர் தான் இலங்கை அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான உறவுநிலையில் முறுகல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
அண்மையில் பான் கீ மூன் ஜனாதிபதி மகிந்தவுடன் பேசியபோது மனிதஉரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவொன்றை அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்துவதற்கு தனது அரசியல் விவகார செயலாளர் லைன் பாஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாகவும் பான் கீ மூன் கூறியிருந்தார். இது மகிந்த ராஜபக்ஸவுக்குக் கடுப்பை ஏற்படுத்தியது. அவர் அதற்கு உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதைச் செய்ய முடியாத நிலையில் அந்த தொலைபேசி உரையாடல் முடிந்து போனது. அதன்பின்னர் தான் ஆரம்பித்தது ஐ.நா பொதுச்செயலருக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான மோதல்கள். நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் மீறுகின்ற நடவடிக்கை என்றது இலங்கை அரசு. பான் கீ மூன் ஐ.நா பிரகடனத்தை மீறுவதாகவும் அவர் தன்னிச்சையாகச் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியது. இலங்கை விவகாரத்தில் நிபுணர்குழுவொன்றை அமைக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றது. அதேவேளை ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்களும் இடைக்கிடையே குழப்பமான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். நிபுணர்கள் குழுவை அதிகாரபூர்வமற்ற வகையில் பான் கீ மூன் தெரிவு செய்து விட்டதாக ஒருமுறை கூறினார் அவரது பேச்சாளர். அதற்குப் பின்னர் அப்படி யாரையும் தெரிவு செய்யவில்லை என்றார். இதுபற்றி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. அதாவது நிபுணர்குழு விவகாரம் குறித்து ஐ.நா செயலரின் பேச்சாளர்கள் முன்னுக்குப்பின் முரணான வகையில் செய்திகளை வெளியிட்டது பெரும் குழப்பதை ஏற்படுத்தியது. இதனால் ஐ.நா பொதுச்செயலர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது இந்தநிலையில் கடந்த வாரம் இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவை அமைக்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை- விரைவில் அது அமைக்கபடும் என்றார் பான் கீ மூன். இந்த நிபுணர் குழு அந்த நாட்டின் இறைமையை மீறும் செயல் அல்ல என்றும் நிபுணர்கள் குழு எந்தவகையிலும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என்றும் கூறியிருந்தார் அவர். இது இலங்கை அரசுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம, நிபுணர்குழு அமைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் ஐ.நாவுடனான உறவுகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது சுதந்திரமான உறுப்பு நாடு ஒன்றின் இறைமையை மீறுகின்ற செயல் என்று ஐ.நா சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ள றோகித போகொல்லாகம இது இலங்கை அரசுக்கு எதிரான சதி வேலை என்றும் கூறியிருக்கிறார். அதேவேளை அமைச்சர் பீரிஸ் ஐ.நா.பொதுச்செயலருக்கு இந்த நிபுணர்குழவை அமைக்கத் தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் இலங்கை அரசு தமக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை இன்னும் மேலே கொண்டு போய்க் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஐ.நா பாதுகாப்புச்சபையில் சீனாவும், ரஷ்யாவும் தனக்கு ஆதரவு வழங்கும் என்ற தைரியம் இலங்கை அரசுக்கு இருப்பதால் பான் கீ மூனை தீவிரமாக எதிர்த்து வருகிறது இலங்கை அரசு. இந்த எதிர்ப்பு நிலை தீவிரமாகி வருகின்ற நிலையில் ஐ.நாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வெளிப்படையான விசாரணைகள் எதற்கும் தயாராக இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. நிபுணர்குழுவை பான் கீ மூன் அமைக்க முயன்றது தனக்கு ஆலோசனை வழங்குவதற்கே தவிர இலங்கை அரசின் மீது தலையீடு செய்வதற்காக அல்ல. அப்படியிருந்தும் அதற்கு இலங்கை அரசு தெரிவித்து வரும் எதிர்ப்பும் கௌரவம் மிக்க பொதுச் செயலர் பதவியை கேவலப்படுத்தும் வகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளும்; இலங்கை அரசை சந்தேகக் கண்கொண்டு பார்க்கவே வழிசெய்துள்ளது. இந்த விவகாரம் தனியே இலங்கைக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையிலான பிரச்சினையாக அமைந்து விடாது போலிருக்கிறது. அதற்கும் அப்பால் சர்வதேச ரீதியாகவும் இது பிரச்சினைகளைக் கிளப்பி விடும் அளவுக்குச் சென்றாலும் கூட ஆச்சரியம் இல்லை. காரணம் மனிதஉரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கை அரசைக் காப்பாற்றத் துடிக்கும் நாடுகள்- மற்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் நாடுகள் என்று உலகம் இரண்டுபட்டு நிற்பதால் இந்த பிளவு நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இல்லையெனக் கூற முடியாது.





No comments:

Post a Comment