இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார். இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது என்பது அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அவ்வகையான தீர்வை ஜனாதிபதி முன்னெடுத்தாலும் சரி, அல்லது வேறு வகையான தீர்வை முன்மொழிந்தாலும் சரி, அவ்விவகாரத்தை தமது கட்சி பரிசீலிக்கும் என்று கூறினார். அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியல் சாசன மாற்றங்கள் தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கியதாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக இணக்கப்பாட்டுடன் ஆய்வுசெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தமிழ் மக்கள் தனிநாடு கோரிக்கைகளையெல்லாம் கைவிட்டு, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்துள்ளனர். அதுபோல அரசாங்கமும் தமது தரப்பில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.



No comments:
Post a Comment