*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, April 20, 2010

போருக்குப் பின்னர் நிலைமாறும் யாழ்ப்பாணம்

கடந்த சனவரியில் யாழ் – கண்டி நெடுஞ்சாலை பொதுமக்கள் போக்குவரவுக்காக மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து குடாநாட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்வதை செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
உள்ளூர் உல்லாசப் பயணிகளின் படையெடுப்பு, குடாநாட்டில் முதலிடுவதற்கு முண்டியடிக்கும் முதலீட்டாளர்கள், கைத்தொழில் பேட்டைகளின் மீள் வரவு, சூடுபிடித்திருக்கும் சிறுவியாபாரம் மற்றும் குடாநாட்டு உற்பத்திகள் தெற்கின் சந்தைகளில் என யாழ்ப்பாணத்தின் பொருளாதார மேம்பாட்டிற்குத் துணைநிற்கும் பல மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
போர் முடிவுக்கு வந்த பின்னர் அண்ணளவாக 4 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் குடாநாட்டுக்கு வந்துசென்றிருப்பதாக யாழ் மாவட்டப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கதுறுசிங்க [Major General Mahinda Hathurusinghe] குறிப்பிடுகிறார்.
‘நாட்டினது தெற்குவாழ் மக்கள் எத்தகைய சுதந்திரத்தினை அனுபவிக்கிறார்களோ அதே சுதந்திரத்தை வடக்குவாழ் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்சவினது நோக்கம்’ என சுண்ணாகத்தில் இடம்பெற்ற சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கலந்கொண்டு உரையாற்றியபோது கதுறுசிங்க குறிப்பிட்டார்.
மீன்பிடியிலும் விவசாயத்திலும் கைதேர்ந்த மக்கள் இவர்கள். போரின் காரணமாக இந்த மக்கள் இழந்துநிற்கும் வாழ்வாதாரத்தினை மீளவும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முதன்மையான பணி என்கிறார் மேஜர் ஜெனரல் கதுறுசிங்க.
நிலைமைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்புவதாகக் குறிப்பட்ட அவர், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசித்துவந்த பொதுமக்களில் 40,000 பொதுமக்கள் குடாநாட்டில் ஏற்கனவே குடியமர்த்தப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்.
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், சுகாதர, கல்வி மற்றும் மின்சார வசதிகளை மேம்படுத்தும் செயல்திட்டங்கள் மற்றும் ஏனைய உட்கட்டுமானப் பணிகள் குடாநாட்டில் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
நாட்டினது வடக்குப் பகுதி வாழ் மக்களின் மனங்களில் போரினால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றும் பணிகளில் அரசாங்கம் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாக யாழ் மாவட்டப் படைத் தளபதி தொடர்ந்து தெரிவித்தார்.
இவை தவிர, குடாநாட்டில் இயங்கிவந்த கைத்தொழில் பேட்டைகளை மீளவும் ஆரம்பிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதன் ஒரு அங்கமாக காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை மீளவும் இயங்கவுள்ளது. வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்ப அதன் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வரும் ஓரிரு மாதங்களுக்குள் உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும். அத்துடன் இதன் மூலம் 3,000 வரையிலானோர் வேலைவாய்ப்பினைப் பெறவுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த சனவரியில், 196 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணத்தின் குருநகர் பகுதியில் மீன்பிடி வலையினை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை ஹரித்தாஸ் நிறுவனம் நிறுவியிருக்கிறது. போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்தநிலையில் குடும்பச் சுமையினைத் தாங்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட விதவைகளுக்கு இந்தத் தொழிற்சாலை வேலை வாய்ப்பினை வழங்குகிறது.
பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த கொடிய போரினால் உழைக்கும் வயதிலிருந்த பிள்ளைகளையும் குடும்பத்தலைவரையும் தங்களது அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்துவிட்டு, குடும்பச் சுமையினைச் சுமக்கமாட்டாமல் பரிதவித்து நிற்கும் இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் ஒரு அம்சமாகவே இந்தப் புதிய தொழிற்சாலையின் வரவு அமைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆறு இலட்சம் பேரைக் கொண்ட யாழ்க் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு வீதத்தினர் மீன்பிடித் தொழிலையே நம்பியிருக்கிறார்கள்.
இது இவ்வாறிருக்க, பலதரப்பட்ட சர்வதேச நிறுவனங்களும் பங்குகொள்ளும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஒன்று வெற்றிகரமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.
‘யாழ்ப்பாணத்திற்கான உங்கள் நுழைவாயில்’ எனும் தொனிப் பொருளில் அமைந்த இந்த மூன்று நாள் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
ஜோன் கீல்ஸ், ஏயிற்கின் ஸ்பென்ஸ், மைக் வூட், ஜனசேன, CIC மற்றும் கார்கில்ஸ் உள்ளிட்ட 200 நிறுவனங்கள் மற்றும் கம்பனிகள் பங்குகொள்ளும் இந்த வர்த்தகக் கண்காட்சியினை யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கைக் கண்காட்சி மற்றும் மாநாடுகள் சேவைகள் தனியார் நிறுவனமும் இணைந்து ஒழுங்குசெய்திருந்தன.
குறித்த இந்த நிறுவனங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தங்களது வர்த்தச் செயற்பாடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களைக் கண்டறியும் ஒரு களமாக இந்தக் கண்காட்சி அமைகிறது என கண்காட்சி மற்றும் மாநாடுகள் சேவைகள் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் இமாம் ஹசான் குறிப்பிடுகிறார்.
20 இந்திய நிறுவனங்கள் உள்ளடங்கலாக 200 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றும் இந்த வர்த்தகக் கண்காட்சியில் தினமும் 20,000 பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த நிழ்வின் ஒழுங்கமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.
விவசாயம், உணவு உற்பத்தி, உணவு பதனிடல், கட்டுமானப்பணி மற்றும் பொதிசெய்யும் தொழிற்துறை ஆகிய அம்சங்களில் தங்களது கவனத்தினைச் செலுத்தும் நிறுவனங்களே இவை.
யாழ்ப்பாண சமூகத்திற்கும் கொழும்பினது வர்த்தக சமூகத்திற்கும் இடையிலான இடைத்தொடர்புகளை அதிகரிப்பதன் ஊடாக குடாநாட்டில் கைத்தொழில் துறையினை விருத்தி செய்வதே இந்த மூன்றுநாள் வர்த்தகக் கண்காட்சியின் நோக்கம் என அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பொருளாதார மேம்பாட்டினையும் அபிவிருத்தியினையும் துரிதப்படுத்தும் வகையில் அமையும் பல செயற்பாடுகள் அண்மைய நாட்களில் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மிக வேகமாக முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடுகள் குடாநாட்டின் அரசியல், வாழ்வியல், கலாச்சார ரீதியான தனித்துவத்தினை இல்லாது செய்துவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.




No comments:

Post a Comment