*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 19, 2010

தாயுமான எம் தலைவன் -கண்மணி

சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது. அசைக்க முடியாத மனநிலையோடு, நாம் நமக்கான நாட்டை கட்டி அமைப்போம் என உறுதி எடுக்கும் காலத்தில், அந்த கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கான அரசு, நமக்கான ஆட்சி, நம்மை நாமே ஆள்வது என்கின்ற அடிப்படை மாந்த உரிமை தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இயன்றவரை முயற்சிப்போம் என்று சொல்லாமல், அது நடக்கும்வரை செயல்படுவோம் என்று நம்மை நாம் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்காகத்தான் நமது மேதகு தமிழ் தேசியத் தலைவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவர் வாழ்க்கையில் யாரையும் இப்படி வாழுங்கள் என்று வலியுறுத்தியது கிடையாது. எப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்ந்து காட்டினார்.
கிறித்துவ மறைநூலான விவிலியத்தில் இயேசு கிறிஸ்து தமது சீடர்களை அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவி துடைக்கிறார். அதற்கு முன்னர் அவர் தமது மேலங்கியை கழற்றி வைத்துவிட்டு, இடுப்பிலே ஒரு துண்டை கட்டிக் கொண்டு இந்தப் பணியை செய்கிறார். இது அக்கால யூத நடைமுறைக்கு மிகவும் ஏற்கத்தக்க செயலாகும். யூத இனம் தம்மை கடவுள் படைத்த இனமாக கொண்டாடிக் கொண்டதோடு, யூதர்களே இந்த உலகில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்த காலக்கட்டம். அப்படிப்பட்ட நிலையில் தான் யூதராகிய இயேசு கிறிஸ்து தமது இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு, சீடர்களின் பாதங்களை கழுவி துடைக்கிறார். தாம் எப்படி எளிமையோடு வாழ வேண்டும் என்பதை அவர் தமது செயலின் மூலமே கற்பித்தார்.
கட்டளையிடுவதற்குப் பதிலாக வாழ்ந்து காட்டுவது என்பதுதான் தலைமைத்துவத்தின் அடிப்படையாகும். இந்த நேர்மை, உண்மை, ஏற்றுக் கொள்ளுதல், அணைத்துக் கொள்ளுதல், தாங்கிக் கொள்ளுதல், தம்மையே அர்ப்பணித்தல் என்கின்ற அளப்பறியா பண்பு ஒரு தலைவனின் உடன் பிறந்த குணமாக இருக்கும். எமது தேசிய தலைவரின் வாழ்வியலும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன. கிறித்துவ மதம் மிகக் குறைந்த காலக்கட்டத்தில் உலகெங்கும் இன்று அசைக்க முடியாத நிலைக்கு உயர்ந்தோங்கி இருக்க காரணம் என்ன? என்று இன்றுவரை மறைநூல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வுகளின் முடிவில் அவர்கள் கண்டறிந்த ஒரு உண்மை என்னதென்றால், கிறித்துவ மதத்தில் இழையோடிப் போயிருக்கும் அதன் எளிமை என்பதுதான்.
இன்று உலகெங்கும் கிறித்துவ மதம் பரந்து விரிந்திருக்கக் காரணம், அந்த மதத்தில் உள்ள எளிமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பும் இப்படி எளிமையோடு கட்டி அமைக்கப்பட்டதால், இன்று உலகெங்கும் அதன் அமைப்பின் அடிப்படைகள், கொள்கைகள், லட்சிய நிலைகள் மிக உயர்ந்தோங்கி நிற்கிறது. அமைப்பில் மட்டுமல்ல, அந்த அமைப்பை கட்டிய எமது தேசியத் தலைவர் எளிமையாக இருந்தார். அவர் எவ்வாறு எளிமையாக இருந்தாரோ அதேப் போன்றே அவர் இயக்கத்தையும் எளிமையாக வழிநடத்தினார். தாய்மைக்குரிய பண்பு அவருக்குள் அழுத்தமாக அமர்ந்திருந்தது. அவர் தமது போராளிகளை இழந்த போது, கண்ணீர் விட்டு அழுதார்.
அவர் என்ன உண்கிறாரோ அதுதான் தமது போராளிகளுக்கும் உண்ண வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார். ஒரு தலைவன் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு தாய் போன்று தமது போராளிகளை தோள்மேல் சுமந்தார். ஒரு தாயின் இடுப்பிலிருக்கும் குழந்தை எப்போதும் சிரித்த முகத்தோடு, எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் இருக்குமே, அதற்குக் காரணம், அந்த தாய் எந்த நிலையிலும் தன்னை கைவிட மாட்டாள். அந்த தாய் கீழே கற்கள், முற்கள் இருந்தாலும்கூட, தமது பாதத்திலே தாங்கிக் கொண்டு தம்மை சுமந்து கொண்டு செல்வாள் என்கின்ற மனப்போக்குத்தான்.
இதே மனப்போக்குத்தான் நமது போராளிகளுக்கு இருந்தது. அந்த மாவீரர்கள் எமது தேசியத் தலைவரை, தலைவராக அல்ல, தாயாக ரசித்தார்கள், தாயாக உணர்ந்தார்கள், தாயாக போற்றினார்கள். அவரை தாயாக ஏற்றுக் கொண்டார்கள். எமது தலைவர் தலைவராக இல்லை. தாயாக இருந்தார். ஆகவே தான் அவர் அந்த மண்ணை, அந்த மண்ணின் மக்களை உளமாற நேசித்தார். தமது மண்ணுக்கும் தமது மக்களுக்கும் எந்த இடையுறும், எந்த அச்சுறுத்தலும் நிகழக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார். வானத்திலிருந்து கழுகு வட்டமிட்டு வந்து குஞ்சுகளை வேட்டையாட நினைக்கும்போது, பறந்து சென்று தாக்கும் கோழியைப் போன்று அவர் தமது மக்களை பழிவாங்க வரும் பகைவர்களை எதிர்த்து போராடினார்.
தாம் மட்டும் போராடினால் போதாது என, தமது குஞ்சுகளுக்கு அவர் போராட்டத்தை கற்றுக் கொடுத்தார். போராட்ட வடிவத்தை தாம் உள்வாங்கிக் கொண்டபோது, அதை வெளியரங்கமாய் தமது பிள்ளைகளுக்கும் சேர்த்து வளர்த்தெடுக்க பயிற்றுவித்தார். இந்த பயிற்சியிலே தேறிய பிள்ளைகள், மாவீரர்களாய், சொந்த மண்ணுக்காக குருதி சிந்த அல்ல, உயிர் கொடுக்கவும் உறுதியாக இருந்தார்கள். ஆகவேதான் கடந்த 30 ஆண்டு காலமாக எந்தவித ஆசைக்கும், எந்தவித அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் அசராமல் தாம் கொண்ட லட்சியத்திலே, உறுதியாக தமது செயல்பாட்டை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தார். தாம் இயங்கினார். தம்மோடு சேர்த்து தமது பிள்ளைகளையும் இயக்கச் செய்தார்.
உலக வரலாற்றில் எமது தேசியத் தலைவரைப் போல தாய்மை கொண்ட தலைவரை நம்மால் பார்ப்பது கடினம்தான். கடுமையான போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எமது மண்ணை காக்க வேண்டும். எமது தலைமுறை பெற்றுத்தரும் விடுதலையை அடுத்த தலைமுறை உரிமையோடு கொண்டாடட்டும் என்ற உணர்வோடு கடும் சமரை எதிர்க்கொள்ள, அவர் தமது மக்களிடம் ஒவ்வொருவரும் ஒரு பிள்ளையை போர்க்களத்திற்கு அனுப்புங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். முகம் மாறாமல், அகம் குளிர்ந்து தமிழ் தாய்கள், தமது பிள்ளைகளை வேறொரு தாயோடு போராட அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தம்மைவிட, தமது தாய்மையைவிட, மேலான தாய்மை தமது தேசிய தலைவருக்கு உண்டென்று நம்பினார்கள். ஊருக்கு உபதேசம் செய்து தாம் மட்டும் காத்துக் கொள்ளும் கேடு நிலைக் கொண்ட தலைவனல்ல எமது தேசியத் தலைவன்.
தமது மக்களினம் எல்லாம் வீட்டிற்கு ஒரு பிள்ளையை அனுப்புங்கள் என்று கூறிவிட்டு, தமது வீட்டு பிள்ளையை எங்கோ வெளிநாட்டில் பதுக்கி வைத்து, பாரிய சமர் புரிய ஊரார் வீட்டுப் பிள்ளைகளை அனுப்பி வைக்கவில்லை. மாறாக, அந்த சமர் களத்திலே தமது பிள்ளையையும் உயிர் கொடையாக வார்த்துக் கொடுத்தார்.தமது மக்கள் விடுதலை ஒன்றே எமது தேசியத் தலைவனின் லட்சியமாக இருந்தது. தமது மக்களின் உரிமை வாழ்வு ஒன்றே எமது தேசிய தலைவனுக்கான கனவாக இருந்தது. அந்த கனவை மீட்டெடுக்கும் போராட்டத்திற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்ததோடு, தமது மக்களை அந்த அர்ப்பணிப்பிற்கு உந்தித் தள்ளினார். தமது நாட்டு விடுதலைக்காக, தமது மண்ணின் மீட்புக்காக, உயிர் கொடை தரும் உன்னத வாழ்வு அவரிடம் குடி கொண்டிருந்ததால், அந்த குறியீடாய் மாவீரர்கள் மாறிப்போனார்கள்.
அவர்களின் வாழ்வு தலைவனின் கட்டளை என்பதைவிட, ஒரு தாயின் கட்டளையாக அவர்களுக்கு தெரிந்தது. கருத்தரித்தது தாயாக இருந்தாலும், காத்து வழிநடத்தியது எமது தலைவன் தான். மாபெரும் அன்பு சுரங்கமாக ஊற்றெடுக்கும் தாய்மையின் குணத்தை கொண்டவனாய், களத்திலே எமது தலைவன் இருந்த காரணத்தினால்தான், அணி அணியாய் தம்மை அர்ப்பணிக்க தொடர்ந்து மாவீரர்கள் அணிவகுத்தார்கள். அவர்களின் வாழ்வு, தமது தாயின் கட்டளைக்காய் காத்திருந்தது. ஒவ்வொரு முறையும் மாவீரர்களின் சடலங்களை, அந்த வீரமறவர்களின் வித்துடல்களை கண்டபோது, கதறினார். ஒரு தாய்க்கே உரிய பாங்கை நம்மால் அங்கே காண முடிந்தது.
அழுது துடித்தாலும், அடுத்து வரும் தலைமுறைக்கான விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதிலே அவர் உறுதியாக இருந்தார். இந்த உறுதியின் காரணத்தினால்தான், நாற்பத்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரமறவர்கள் தமது மண்ணின் விடுதலைக்காய் தமது உடலை வித்துக்களாக்கினார்கள். கடந்த 30 ஆண்டுகால சமரில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், தமது இன்னுயிரை ஈந்தார்கள். உலகெங்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் ஏதிலிகளாய் புலம் பெயர்ந்து வாழும் அவலத்திற்கு தள்ளப்பட்டார்கள். ஆக, நாம் இந்த காரணங்களை சரியாக புரிந்து கொண்டு, நமது விடுதலைக்கான வேட்கை தணியாமல் காக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். தாயுமான எமது தலைவன், தமது தலைமையில் தமிழீழ அரசை அமைக்காமல் ஓய்வு பெறமாட்டான் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கான அரசு என்பதிலே மாறுபட்ட எண்ணமோ, அவநம்பிக்கையோ ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது.
நமது விடுதலை ஒன்றே லட்சியமாகக் கொண்டு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நமது தேசியத் தலைவரின் வழிக்காட்டுதல் இன்னும் சில காலங்களில் நமக்கு கிடைக்கத் தொடங்கிவிடும். நாம், நமது விடுதலைக்கான போராட்டத்தை இன்னும் இன்னுமாய் அழுத்தமாக நடத்திச் செல்வதற்கான மன உறுதியையும், செயல்பாட்டையும் வகுத்துக் கொள்ளும் காலத்திலே இருந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மனம் தளராமல் யார் என்ன தவறான பரப்புரைகளை மேற்கொண்டாலும், கலங்காமல், தயங்காமல், தாயுமான எமது தலைவன் எம்மோடு இருக்கிறான், எந்த நிலையிலும் நான் கலங்க மாட்டேன், எமக்கான இலட்சியத்தை அடையும்வரை எமது வழித்தடங்களிலிருந்து மாற்றுப் பாதையை தேட மாட்டேன் என்கின்ற உறுதியை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் உள்வாங்கிக் கொண்டு எமது களப்பணிக்காய் எமது வாழ்க்கையை அர்ப்பணிக்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பேன். தாயுமான எமது தலைவனுக்கு இதை உறுதியாகச் சொல்கிறேன் என்ற மனப்போக்கோடு வாழ உறுதியெடுப்போம். தமிழீழம் மலரும். இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.




No comments:

Post a Comment